கார்ப்பரேட் உலகத்துக்குத் தயார்! படங்கள்: ரமேஷ் கந்தசாமி
##~## |
எம்.பி.ஏ. முதல் வருடப் படிப்பு முடிந்து விட்டது. படிப்பில் நுழையும்போது, மார்க்கெட்டிங், உற்பத்தி, ஃபைனான்ஸ், ஹெச்.ஆர்., சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை என்னவென்றே உங்களுக்குத் தெரியாது. இப்போது, இவற்றின் நுணுக்கங்களும் உங்கள் கைவசம்.
இன்னும் ஒரு வருடம் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர வேண்டும். மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ் போன்றவற்றில் எந்தத் துறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்னும் முடிவை முதல் வருட முடிவிலேயே, நீங்கள் எடுக்கவேண்டும்; எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுப்பீர்கள்? நீங்கள் எதற்காக எம்.பி.ஏ. படிக்க வந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பல காரணங்கள் - நல்ல சம்பளத்தில், நல்ல கம்பெனியில், வருங்கால வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் வேலை வேண்டும், அந்த வேலை மனதுக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும்.
நான் சந்திக்கும் பல இளைஞர்கள் இந்த மனதுக்குப் பிடிக்கும் அம்சத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அவர்களுக்கு
ஹெச்.ஆர். பிடித்தமான துறையாக இருக்கும். ஆனால், நண்பர்கள் மார்க்கெட்டிங் வேலைகளில் சேருகிறார்கள், அல்லது அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்னும் காரணங்களுக்காக, மார்க்கெட்டிங் வேலைகளில் சேருகிறார்கள்.
உங்கள் வருங்கால வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். விழித்திருக்கும் நேரங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், சுமார் 70 சதவிகித நேரம் வேலை தொடர்பான விஷயங்களில்தான் நாம் செலவிடுகிறோம். வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டுமானால், இந்த 70 சதவிகித நேரம் நமக்குத் திருப்தியும், மகிழ்ச்சியும் தருவதாக இருக்கவேண்டும், வெறும் பணத்தால் இவை கிடைக்காது. செய்யும் வேலை மனதுக்குப் பிடித்திருக்கவேண்டும். இந்த அடிப்படையில், மேனேஜ்மென்டின் எந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என்னும் முடிவை எடுங்கள்.

முதல் வருட முடிவிலேயே ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்? முதல் வருட முடிவில், கம்பெனிகளில் நடைமுறைப் பயிற்சி (Practical Training) பெறுவது எம்.பி.ஏ படிப்பின் முக்கிய அம்சம். இந்தப் பயிற்சி பல்வேறு காரணங்களால், மிக முக்கியமானது.
எம்.பி.ஏ. படிப்பு, நீச்சல் கற்றுக்கொள்வது மாதிரி. திறமையான பயிற்சியாளர்கள் நீந்துவது எப்படி, டைவ் அடிப்பது எப்படி என்று அழகாகக் கற்றுத் தருவார்கள். அதை கற்றுக்கொண்டபிறகு உங்களை காவிரி ஆற்றுக்குள் தள்ளிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? தத்தளிப்பீர்கள். யாராவது வந்து காப்பாற்றாவிட்டால் அம்பேல்தான். எவ்வளவுதான் புத்தக அறிவு இருந்தாலும், அனுபவம் இல்லாவிட்டால், நீங்கள் நீச்சல் அடிக்கவே முடியாது.
அதைப்போல்தான் எம்.பி.ஏ. படிப்பும். என்னதான் கேஸ் ஸ்டடி மூலமாக நூற்றுக் கணக்கான கம்பெனிகளின் அனுபவங்களைப் படித்தாலும், விவாதித்தாலும், நிஜப் பிரச்னைகளை எதிர்மோதும்போதுதான், படித்தவை எந்த அளவு ஒர்க் அவுட் ஆகும் என்று சோதித்துப் பார்க்கமுடியும்.
புத்தக அறிவை நடைமுறைக்குக் கொண்டுவரவும், நிறுவனங்களில் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளவும் உங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு இது.
எத்துறை உங்கள் வருங்காலம் என்று தீர்மானித்துவிட்டீர்கள். நீங்கள் எடுக்கவேண்டிய இன்னொரு முடிவும் இருக்கிறது. எந்த கம்பெனி வேலை திருப்தியும், மகிழ்ச்சியும் தரும்? உங்கள் பேராசிரியர்கள், சீனியர் மாணவர்களோடு ஆலோசியுங்கள். உங்களுக்குப் பிடித்த துறை ஃபைனான்ஸா? ஃபைனான்ஸில் உங்கள் பத்து கனவு கம்பெனிகளைப் பட்டியலிடுங்கள். இவை பற்றிய எல்லா விவரங்களையும் சேகரியுங்கள். நடைமுறைப் பயிற்சிக்கு இந்தப் பத்து கம்பெனிகளிலும் முயற்சி செய்யுங்கள்.
பயிற்சி புராஜெக்ட் உங்கள் அறிவுக்கும், அணுகுமுறைக்கும் சோதனை. பல நிறுவனங்கள் தங்களிடம் பயிற்சிக்கு வரும் மாணவர்களைக் கூர்ந்து கவனிக்கின்றன. தங்களுக்கு ஏற்றவர்களாக இருப்பவர்களுக்குப் படிப்பை முடித்தவுடன் முழுநேர வேலையும் தருகின்றன. இந்தப் பொன்னான வாய்ப்பை முழுக்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்றைய கார்ப்பரேட் உலகம் போட்டிகள் நிறைந்தது. வேலையைத் திறமையாகச் செய்தால் மட்டும் போதாது, நாம் செய்கிறோம் என்பதை நம் மேனேஜர்களுக்கும், நிறுவனத்தில் முக்கியமானவர்களுக்கும் தெரியவைக்க வேண்டும். கம்பெனியின் சக்திபீடங்கள் யார் யாரென்று கண்டுபிடியுங்கள்; இவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்தத் தொடர்பை நெட்ஒர்க்கிங்
(Networking) என்று சொல்கிறோம். கம்பெனிகளில் வேலை கிடைப்பதற்கும், வேலைகளில் உயர்வு வருவதற்கும் இந்த நெட்ஒர்க்கிங் மிக மிக அவசியம். இவர்களில் யாராவது உங்கள் வருங்கால வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுவார்கள் என்று தோன்றினால், உங்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக (Mentor) இருக்க முடியுமா என்று பாருங்கள்.
பயிற்சியின்போது, நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு அதிமுக்கிய சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. மற்றவர்களுடன் பழகும் விதம். பிசினஸ் என்பது கூட்டு முயற்சி. நல்ல மேனேஜர் என்பவர், தன்னோடு / தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு உந்துதல் சக்தி தருகிறார்; அவர்களின் முழுத் திறமையையும் பயன்படுத்துகிறார்; அவர்களை வளரவைத்துத் தானும் வளர்கிறார். இதற்குப் பிறரிடம் பழகத் தெரியவேண்டும்; கம்யூனிகேஷன் வகுப்புகளில் கற்றுக்கொண்ட அறிவை அரங்கேற்றி பிறர் கவனத்தைக் கவருங்கள்.
முதல் வருடப் படிப்பில் நிர்வாகத்தின் பல அங்கங்கள் பற்றித் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். கணிதம், பொருளாதாரம், கம்யூனிகேஷன் ஆகியவையும் உங்கள் விரல் நுனியில். புராஜெக்ட் மூலம் அனுபவ அறிவும் கிடைத்துவிட்டது.
இப்போது, இரண்டாம் வருடம். எந்த நிர்வாகத் துறையில் வருங்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்தத் துறையின் பாடங்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்ச்சி பெறுங்கள்.
நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன? நேற்றுதான் எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்தமாதிரி இருக்கிறது. இதோ, படிப்பே முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் இன்டர்வியூக்கள் தொடங்கும். சில கல்லூரிகளில் கம்பெனிகள் கேம்பஸுக்கு மாணவர்களைத் தேடி வருவார்கள். இன்னும் சில கல்லூரிகளில் மாணவர்கள் கம்பெனிகளைத் தேடிப் போகவேண்டும்.
எந்த மாதிரி கம்பெனி, எந்த மாதிரியான வேலை என்று உங்கள் இலக்குகளில் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். கம்பெனியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்போதுதான், உங்கள் கனவுகள் நனவாகும். கம்பெனிகள் என்ன எதிர்பார்க்கின்றன? பல நிறுவனங்களின் சார்பாக, ஏறத்தாழ ஆயிரம் பேரை நான் இன்டர்வியூ செய்திருக்கிறேன். என்னுடைய, என் போன்ற ரெக்ரூட்டர்களின் அனுபவத்திலும், கம்பெனிகளின் எதிர்பார்ப்புகள் 6சி-க்கள். அவை:
அறிவுத் தேடல் (Curiosity)
தொழில்நுட்பங்கள், நிர்வாக யுக்திகள் ஆகியவை விநாடிக்கு விநாடி மாறி வருகின்றன. தனக்கு எல்லாமே தெரியும் என்னும் மனநிறைவு கொண்டவனின் கதை தொடங்கும் முன்பே முடிந்துவிடும். ஜெயிப்பவன் தனக்குத் தானே சவால்களை உருவாக்கிக்கொள்கிறான்; தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறான்.
திறமை (Competence)

தேர்ந்தெடுக்கப்படும் வேலையை நேர்த்தியாகச் செய்து முடிப்பதற்கான அறிவு இது.
பொறுப்புணர்ச்சி (Commitment)
ஒரு கடமையை மேலதிகாரி ஒப்படைத்தால், நினைவூட்டவேண்டிய அவசியமே இல்லாமல், குறித்த காலத்தில் அதை முடிக்கும் குணம் இது.
கருத்துப் பரிமாற்றம் (Communication)
மேனேஜர் பல ஊழியர்களை வழி நடத்திச் செல்பவர். அவர்களோடு பழகி, அவர்கள் கருத்துக்களை உணர்ந்து, கம்பெனியின் கொள்கைகளையும், இலக்குகளையும் அவர்கள் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வைத்து, அவர்கள் மனங்களில் அர்ப்பணிப்பை உருவாக்கி, ஊழியர்களின் திறமைகளும், உழைப்பும் முழுமையாக கம்பெனிக்குப் பயன்பட, உங்களிடம் கம்யூனிகேஷன் திறமைகள் கொட்டிக் கிடக்கவேண்டும்.
தன்னம்பிக்கை (Confidence)
எம்.பி.ஏ. படித்து முடித்து வேலையில் சேரும் நீங்கள் இன்று ஓரிரு ஊழியர்களையும், நாளை பிரமாண்ட கம்பெனியையும் வழி நடத்தும் தலைவர். உங்களால் இதைச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையைப் பிறர் மனங்களில் நீங்கள் உருவாக்கவேண்டும்.
இதற்கு, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று முதலில் நீங்கள் நம்பவேண்டும். இடியே தலையில் விழுந்தாலும், கொஞ்சமும் துவளாமல், தயங்காமல் செயலாற்றவேண்டும்.
ஒத்துப்போதல் (Compatibility)
உங்களுக்கும், எனக்கும், நம் எல்லோருக்கும் தனித்துவமான ஆளுமை (Personality) இருக்கிறது. உங்கள் நண்பர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். 'அருண் பொய்யே சொல்லமாட்டான்’, 'ஜெயந்திக்கு கோபமே வராது’ என்று ஒவ்வொருவர் ஆளுமை பற்றியும் நமக்குத் தெரியும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கம்பெனிகளுக்கும் இந்த ஆளுமை உண்டு.
நடைமுறைப் பயிற்சியில் நல்ல புராஜெக்ட்கள் கிடைக்கவும், எம்.பி.ஏ. முடித்தபின், நீங்கள் ஆசைப்படும் வேலை கிடைக்கவும், இந்த 6சி-க்களை மறக்காமல் செயல்படுத்துங்கள். உங்கள் வேலை பயணம் எல்லா வெற்றிகளும் நிறைந்ததாக இருக்கும், வாழ்த்துக்கள்!
(கற்போம்)
