மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தனித்திறமை கண்டுபிடி !

தனித்திறமை கண்டுபிடி !

ஸ்ட்ராடஜி 9

##~##

மனிதவளம் முக்கியத்துவம் பெற்ற காலகட்டங்களில் கூடவே வளர்ந்த இன்னொரு கருத்தாக்கம் தனித்திறமை. அதாவது, நீங்கள் தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்துவந்தால் அதில் தனிச்சிறப்பான அனுபவம் உங்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அந்த வேலையில் நீங்கள் ஒரு நிபுணராக மாறிவிடுவீர்கள் அல்லவா? அதுபோலவே ஒரு குறிப்பிட்ட தொழிலில் தொடர்ச்சியாக இயங்கிவரும் நிறுவனம் எனில், அத்துறையில் அவர்கள்தான் நிபுணர்களாக இருப்பார்கள். அதாவது, தொடர்ச்சியான அனுபவத்தின் மூலம் அவர்கள் தங்களது தனித்திறமையை நிரூபித்திருப்பார்கள்.

இப்படி ஒரு துறையில் வெற்றி கண்டிருக்கும் நிறுவனம் வேறொரு தொழிலைத் தொடங்கவேண்டும் என நினைக்கும்போது, அந்நிறுவனம் எந்த அடிப்படையில் புதிய தொழிலைத் தொடங்குவது என்கிற குழப்பம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு சந்தையில் சிறப்பாக வரவேற்பு இருக்கிறது என்பதற்காகவோ அல்லது குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்பதற்காகவோ ஒரு தொழிலைத் தொடங்கலாமா என்பது நிறுவனங்கள் சந்திக்கும் கேள்வி. தொழிலைத் தொடங்குவதற்கான நிதி மூலதனம் இருக்கிறது, சிறப்பான மனிதவளம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு தொழிலைத் தொடங்கிவிட முடியுமா என்கிற கேள்வி இந்தக் காலகட்டங்களில் எழுந்தது.

தனித்திறமை கண்டுபிடி !

அப்படியென்றால் ஏற்கெனவே ஒரு துறையில் நன்றாக வேரூன்றி இருக்கும் ஒரு நிறுவனம் புதிய ஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்றால், எந்த வகையான தொழிலைத் தொடங்கவேண்டும் என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்கிற அவசியம் எழுகிறது. முதலீடு, சந்தை வாய்ப்புகள், போட்டியாளர்கள், மனிதவளம் இவற்றை மட்டுமே வைத்து தொழிலைத் தொடங்கிவிடவும் முடியாது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதன்படி புதிதாக இறங்க உள்ள தொழிலில் தங்களுக்கு உள்ள அனுபவம் என்ன?, 'தங்களது தனித்திறமைக்கும் அந்த தொழிலுக்கும் சம்பந்தம் உள்ளதா?' தங்களது தனித்திறமையோடு தொடர்புடைய வேறு தொழில்கள் என்ன? என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப புதிய தொழில்களில் இறங்குவது குறித்து முடிவெடுத்தார்கள். அதாவது, தனித்திறமையை அடையாளம் கண்டு அதனோடு தொடர்புடைய துறைகளில் புதிய தொழில்களைத் தொடங்குவது என்கிற கருத்தாக்கம் உருவானது.  

இந்தத் தனித்திறமை கருத்தாக்கத்தை உருவாக்கி இந்த உலகுக்கு எடுத்துச் சொன்னவர் யார் தெரியுமா? சி.கே.பிரகலாத். இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1980-85 ஆண்டுகளில் ஸ்ட்ராடஜி துறையின் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது இந்த தனித்திறமை கருத்தாக்கம், தொழில் உலகுக்கு மிகப் பெரிய பங்களிப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

தனித்திறமை கண்டுபிடி !

ஒரு நிறுவனம் புதிய தொழிலில் இறங்கப்போகிறது எனில், முதலில் தனது தனித்திறமையோடு தொடர்புடைய தொழில்களைப் பட்டியலிடவேண்டும். இதிலிருந்து கழித்துக்கட்டி தனது தனித்திறமை முக்கியமான திறமையாகத் தேவைப்படும் துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து தொழில் தொடங்க முடிவெடுக்கவேண்டும்.

இதனால் என்ன லாபம் என்றால், ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள்தான் நிபுணர் என்கிற பெயர் நிற்கும். தேவையற்ற இழப்புகளையும் நீங்கள் தவிர்க்க முடியும். மேலும், இப்படியான இந்த தனித்திறமையை அடையாளம் கண்டுகொண்டாலும், அதிலிருந்து என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என இரண்டு முக்கிய விஷயங்களையும் கவனிக்கவேண்டும். அதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லமுடியும்.

ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தை நிறுவிய சொய்சிரோ ஹோண்டா (Soichiro Honda),அடிப்படையில் ஒரு மோட்டார் மெக்கானிக், ரேஸ் பிரியரும்கூட. ஒரு மெக்கானிக் கேரேஜில் வேலை பார்த்து வந்தார். அப்போது போக்குவரத்துக்கு மக்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் என்றால் அது சைக்கிள்தான். இந்த சைக்கிள்களில் சின்ன சின்ன மோட்டார்களை இணைத்து பயன்படுத்தி வந்தனர். இந்த மோட்டார்களை ரிப்பேர் செய்வதில் நிபுணராக இருந்தார் ஹோண்டா. ஒருகட்டத்தில் சைக்கிளையும், மோட்டாரையும் இப்படி தனித்தனியாக இணைத்துக்கொள்வதைவிட,  இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு இரண்டு சக்கர வாகனத்தைத் தயாரித்தால் என்ன என்றுதான் முதலில் மோட்டார் சைக்கிளைத் தயாரித்தார்.

இதை வியாபார ரீதியாக அவர் முயற்சிக்கவில்லை. ரேஸ் பிரியரான அவர், தான் தயாரித்த மோட்டார் சைக்கிள்களை ஒவ்வொருமுறையும் மேம்படுத்தி மேம்படுத்தி அதற்கு வேகம் கூட்டினார். இப்படி இன்ஜின் செய்வதில் நிபுணராக இருந்த ஹோண்டாவுடன் அவரது நண்பர் ஒருவர் கூட்டு சேர்ந்து, தொழில்முறையிலான உற்பத்திக்கு ஊக்குவித்தார்.

ஹோண்டா  ஜப்பானின் முன்னணி நிறுவனமாக வளர்ந்தது. 1950-களில் அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்தபோது அதற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஏனென்றால், அங்கு ஏற்கெனவே பி.எஸ்.ஏ., ஹார்லி போன்ற மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் மோட்டார் மார்க்கெட்டில் இருந்தன. ஹோண்டா தனது இன்ஜின் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி அமெரிக்க மார்க்கெட்டையும் பிடித்தது.

இதன் அடுத்தகட்ட நகர்வாக புதிய தொழில்களில் இறங்கவேண்டும் என்கிற யோசனை வந்தபோது, அது வேறு தொழில்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தனது தனித்திறமையான இன்ஜின் தயாரிப்பை அடுத்தகட்டமாக கார்களுக்கு வடிவமைத்தது. அதாவது, கார்கள்

தனித்திறமை கண்டுபிடி !

தயாரிக்கக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் இருந்தும், அது தனது முக்கிய திறமையான இன்ஜின் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியது. இப்படித்தான் இன்றும் கார் இன்ஜின் தயாரிப்பில் தனக்கென தனியிடத்தை வைத்துள்ளது ஹோண்டா.

இன்னொரு வகையில், என்ன செய்யக்கூடாது என்பதையும் இந்த தனித்திறமை மூலமே அடையாளம் காணமுடியும். அந்தவகையில் எதை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக முடிவெடுத்த நிறுவனங்கள் இன்றும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு ஓர் உதாரணம், பெனிட்டான், ரீபோக் போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இந்த நிறுவனங்கள் தங்களின் தனித்திறமைகளான வடிவமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் என இரண்டில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

தங்களுக்கு தனித்திறமை இல்லாத உற்பத்தித் துறைகளில் ஈடுபடுவதில்லை. இந்த வேலைகளை அந்தந்த துறைகளில் தனித்திறமை உள்ளவர்களிடம் தந்துவிடுகின்றன. இதனால் என்ன லாபம்? இடையில் உள்ள அத்தனை வேலைகளிலும் உள்ள சுமைகள் அவர்களுக்கு குறைகிறது. அந்தநேரத்தில் அவர்கள் தங்கள் தனித்திறமையைப் பயன்படுத்தி, தங்கள் வேலையை இன்னும் கவனமாகச் செய்யலாம்.  

மொத்த வேலைகளுக்கும் தொழிற்சாலைகள், பணியாளர்கள், மூலதனம் என்று கவனம் செலுத்துவதைவிட தங்களது தனித்திறமையில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் தங்களது இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகின்றன.

அதாவது, தனித்திறமையை அடையாளம் கண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதும், அதேநேரத்தில் தனித்திறமை இல்லாத வேலைகளில் இறங்கக் கூடாது என்பதும் ஒரு முக்கிய தொழில் உத்தியாக இருக்கிறது. புதிய தொழிலில் இறங்குவதற்கு முன் தனித்திறமை குறித்த இந்த  ஆய்வு அவசியமான ஒன்று.  

(வியூகம் அமைப்போம்)