மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

##~##

நம்மில் ஏராளமானவர்களுக்கு எம்.பி.ஏ. படிக்க ஆசை. ஆனால், மனசு முழுக்கக் கேள்விகள் - எம்.பி.ஏ. படிப்பை நன்றாக கற்றுத்தரும் கல்லூரிகள் எவை?, இவற்றில் எப்படி அட்மிஷன் கிடைக்கும்?, இந்தியாவில் 4,000-க்கும் அதிகமான எம்.பி.ஏ. கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றுள் எது சூப்பர் ஸ்டார், எது சுப்ரீம் ஸ்டார், எது அல்டிமேட் ஸ்டார்?

எக்கனாமிக் டைம்ஸ், பிசினஸ் டுடே, பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் இந்தியா, அவுட்லுக், வீக் போன்ற பிரசுரங்களும், Careers360.com, eduniversal.com, mbauniverse.com போன்ற ஏராளமான இணையதளங்களும், ஒவ்வொரு வருடமும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களோடு கைகோத்து இந்தக் கல்லூரிகளை எடை போடுகின்றன. இவர்கள் பயன்படுத்தும் அளவுகோல்கள் பல. உதாரணமாகச் சில இதோ:  

1. பேராசிரியர்களின் பின்புலம், திறமைகள், அனுபவம், ஆராய்ச்சிகள், எழுதிய கட்டுரைகள், பங்கேற்ற கருத்தரங்குகள், கார்ப்பரேட் உலகத்தோடு இருக்கும் தொடர்புகள், அவர்களுக்கு பிசினஸ் ஆலோசனை வழங்கும் (Consulting) அனுபவம்.

2. பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் விகிதம் (Ratio).  

3. பாடப் புத்தகங்கள், கேஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றின் தரம், கற்பிக்கும் முறைகள் (சொற்பொழிவுகள், கேஸ் விவாதங்கள், கார்ப்பரேட் அனுபவங்களை மாணவர்களைக்கொண்டு நடிக்கவைக்கும் Role-playing,, மாணவர்களின் Presentations)  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

4. மாணவர்களின் திறமைகள் மலரக் கொடுக்கப்படும் வாய்ப்புகள்.  

5. கல்லூரியின் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகள், ஹாஸ்டல்களில் வை-ஃபை (Wi-Fi) போன்ற கட்டமைப்பு வசதிகள்.

6. வெளிஉலகம், முன்னாள் மாணவர்கள், இன்றைய மாணவர்கள்,  கார்ப்பரேட் நிறுவனங்கள், கம்பெனி மேனேஜர்கள், ரெக்ரூட்டர்கள் போன்ற பல்வேறுபட்டோரின் கண்ணோட்டங்களில் கல்லூரியின் மதிப்பு எப்படி இருக்கிறது?  

7. பிற பிசினஸ் ஸ்கூல்களுடன் இருக்கும் தொடர்புகள்.

8. வெளிநாட்டுப் பிரபல எம்பி.ஏ. கல்லூரி களுடன் இருக்கும் உறவுகள், இந்தத் தொடர்புகளால் கிடைக்கும் நன்மைகள்.

9. நடைமுறைப் பயிற்சிக்கும், வேலைகளுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க கேம்பஸுக்கு  எந்தெந்த கம்பெனிகள் வருகிறார்கள், எத்தகைய வாய்ப்புகள் தருகிறார்கள்?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

10. எல்லா மாணவர்களுக்கும் கேம்பஸ் ப்ளேஸ்மென்டில் வேலை கிடைத்ததா?, எந்த கம்பெனிகளில்?, எத்தகைய வேலைகள்?, மாணவர்களுக்குக் கிடைத்த அதிகபட்ச, குறைந்த, சராசரி சம்பளம் எவ்வளவு?, கடந்த சில ஆண்டுகளில் இவை ஏறுமுகமா, இறங்குமுகமா? பிற கல்லூரிகளோடு இவற்றின் ஒப்பீடு.      

இவைபோன்ற கணிப்புகளின் அடிப்படையில், எம்.பி.ஏ. கல்லூரிகளை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த விவரங்களை அறிய நான் மேலே சொன்ன பத்திரிகைகளின் இணையதளங்களைச் சொடுக்கிப் பாருங்கள். ஆனால், இவற்றுள் எந்தக் கணிப்பையும் நான் வரிசைப்படுத்தவில்லை, பரிந்துரைக்கவும் இல்லை. நீங்களாகவே சென்று தேடிப் பார்த்து தெரிந்துகொள்ள இவை கொஞ்சம் உதவும். மற்றபடி முழுமையாக அறிந்துகொள்ள நீங்களே களத்தில் இறங்கி ஆராய்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி இறங்கி செய்தால்தான் சரியான முடிவை எடுக்க முடியும்.

நல்ல கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க இன்னும் சில முக்கிய வழிகள் இருக்கின்றன. சில கல்லூரிகளில் ஓப்பன் ஹவுஸ் (Open House) என்று குறிப்பிட்ட நாட்களில், அவர்களுடைய வளாகத்தைச் சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறார்கள். இவற்றுக்கும், உங்களை அனுமதிக்கும் பிற கல்லூரிகளுக்கும் விசிட் அடியுங்கள். உங்கள் பெற்றோரையோ அல்லது நீங்கள் மதிக்கும் ஒன்றிரண்டு பேரையோ உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கல்லூரிப் பேராசிரியர்களைச் சந்திக்க முயற்சியுங்கள். அவர்கள் நேரம் பொன்னானது. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வம். அப்படி சந்திக்க முடிந்தால், அவர்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டும், எப்படி ரத்தினச் சுருக்கமாகக் கேட்கவேண்டும் என்று விசிட் அடிக்கும் முன்னால் உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

விசிட்டின்போது, உங்கள் கண்களும், காதுகளும் கூர்மையாக இருக்கவேண்டும். மாணவ மாணவியரின் கட்டுப்பாடு, நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றைக் கவனியுங்கள். கணிப்புகள் சொல்லாத, சொல்லமுடியாத ஆயிரம் ஆயிரம் விஷயங்களை இவை உங்களுக்குச் சொல்லும். சில மாணவர்களிடம் பேச்சுக்கொடுத்துப் பாருங்கள். எதையாவது விசாரியுங்கள். அவர்கள் பழகும் முறையில் கல்லூரி நல்ல பழக்கவழக்கங்களை, பண்பாட்டை, மாணவ மாணவியரிடம் வளர்க்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும்.    

ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியரின் ஆளுமையில் இருக்கும் எல்லாப் பரிமாணங்களையும்  தெரிந்துகொள்ள மிகச் சிறந்த இடம், கல்லூரி கேன்டீன்தான். எனவே, கல்லூரி கேன்டீனில் காபி சாப்பிடச் செல்லுங்கள். மாணவ, மாணவியரின் நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கவனியுங்கள். அவர்களின் குணநலன்களை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேதிச் சுரங்கங்கள். இவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த மேனேஜர்கள், ஊடகங்களில் பிசினஸ் பற்றி எழுதுபவர்கள் போன்றோர் உங்கள் தொடர்பு வளையத்துக்குள் வரட்டும். இவர்களுள் எல்லோருமே பதில் தருவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். சிலருக்கு நேரம் இருக்காது, பலருக்கு விருப்பம் இருக்காது.  

இன்று ஏராளமான கல்வித் துறை ஆலோசகர் கள் இருக்கிறார்கள். கட்டண அடிப்படையில், உங்கள் கேள்விகளுக்குப் பதில் தருவார்கள், சந்தேகங்களைத் தீர்த்துவைப்பார்கள். இவர்களுள், மேதைகளும் உண்டு, போலிகளும் உண்டு. எனவே, கவனம் தேவை.  

பத்திரிகைகள், இணையதளங்கள் ஆகியோரின் கணிப்புகள், கல்லூரிகள், பேராசிரியர்கள், இன்றைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், கம்பெனி மேனேஜர்கள், ஊடகங்களில் பிசினஸ் பற்றி எழுதுவோர், கல்வித் துறை ஆலோசகர்கள் ஆகிய பல்வேறு சேதி மையங்களிடம் உங்கள் தொடர்பு உருவாகட்டும். இவை ஒவ்வொன்றும் புள்ளிகள். இந்தப் புள்ளிகளை இணைத்தால், கோலங்கள் வரும், ஒவ்வோரு கல்லூரியையும் பற்றிய தெளிவான ஐடியா கிடைக்கும்.

இத்தனை சிரமப்பட வேண்டுமா என்று உங்களில் சிலர் கேட்கலாம். நீங்கள் எடுக்கப் போவது, உங்கள் வருங்காலம் சாதாரணமானதா, ஒளிமயமானதா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவு. இன்று சோம்பலை மறந்து உழைத்தால்தான், நாளைய நாட்கள் நல்லவையாக இருக்கும்.

உங்கள் கனவுகளை எந்தக் கல்லூரிகள் நனவாக்கும் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள். இன்னொரு முக்கிய சமாசாரம் இருக்கிறதே? எம்.பி.ஏ. படிப்பு என்பது உங்கள் வருங்காலத் திற்காக நீங்கள் செய்யும் பல லட்சம் ரூபாய் முதலீடு. உங்கள் பெற்றோர் வியர்வை சிந்தி உழைத்துச் சேர்த்த பணம். எல்லா எம்.பி.ஏ. கல்லூரிகளிலும், ஒரே கட்டணம் (திமீமீs) இல்லை. கல்லூரிக்குக் கல்லூரி அவர்கள் வசூலிக்கும் கட்டணத்தில் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. பார்க்க, எதிர்பக்கத்தில் உள்ள பட்டியல்!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இதனுடன், ஹாஸ்டல் செலவுகள், பிற வகைச் செலவுகள் போன்றவை சுமார் 2 லட்சம் ரூபாய் ஆகலாம். ஆக, மொத்தச் செலவைக் கணக்குப் போடுங்கள்.  

பெரும்பாலான எம்.பி.ஏ. கல்லூரிகளில் படிப்பதற்கு வங்கிகள் கடன் தருகின்றன. படிப்பை முடித்து வேலை கிடைத்தபின், சுமார் ஐந்து ஆண்டுகளில் கடனை மாதத் தவணைகளில் திருப்பி அடைக்கவேண்டும். ஆகவே, லட்சக்கணக்கில் உங்கள் பெற்றோரிடம் சேமிப்பு இல்லை என்றாலும், இந்த பணமுடை, நீங்கள் எம்.பி.ஏ. சேரத் தடையாக இருக்காது. காரணம், எம்.பி.ஏ. ஓரளவுக்கு நல்ல கல்லூரியில் எனில் வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

இது செலவு விவரம். கட்டணம் வித்தியாசப் படுவதுபோல, படித்து முடிக்கும்போது கிடைக்கும் வேலைகளுக்கான சம்பளத்திலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வரவு, செலவு, உங்கள் பெற்றோரின் செலவிடும் திறன் ஆகிய பல அம்சங்களைக் கணக்கில் எடுத்து, உங்கள் சக்திக்கு ஏற்ற எம்.பி.ஏ. கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள்.

(கற்போம்)

படம்:  ர.சதானந்த்