பணத்தைக் கட்டு; வேலை ரெடி! மெயில்கள் ஜாக்கிரதை!
##~## |
''இந்த வருடம் படிப்பை முடித்தவரா நீங்கள்..? அரசு அங்கீகாரம் பெற்ற எங்கள் நிறுவனத்தில் உங்களுக்காக வேலை உள்ளது. உடனே எங்கள் நிறுவனத்தின் பெயரில் 17 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அனுப்புங்கள்; அல்லது எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கட்டிவிடுங்கள்!''
சமீப காலமாக இப்படிப்பட்ட அழைப்பு மெயில்கள் பலருக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த அழைப்பை நம்பி சிலர் எந்த விசாரணையும் செய்யாமல் பணம் கட்டி, வேலைக்கான ஆர்டர் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக்கிடக்க, தாங்கள் ஏமாந்து போனதைத் தெரிந்து கடைசியில் சொல்ல முடியாத துக்கத்தில் ஆழ்ந்துபோனார்கள். கொஞ்சம் உஷாரானவர்கள், அந்த மெயில் பற்றி மேலும் விசாரித்து, பிற்பாடு பணம் அனுப்பலாம் என்று இருந்தவர்கள் தப்பித்தார்கள். இப்படிப்பட்ட மோசடி மெயில்களில் இருந்து எப்படி தப்புவது என்பது குறித்து மனிதவள மேம்பாட்டாளர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் விளக்குகிறார்.
''2013-ல் நடந்த இன்ஜினீயரிங் தொழில் படிப்புக்கான கலந்தாய்வில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. தமிழகத்தில் 550 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சம் இடங்கள் உள்ளன. 40 சதவிகித இடங்கள் காலியாக கிடக்க மிக முக்கியமான காரணம், பெரும்பாலான கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவை கடந்த வருடம் நடத்தாததுதான். பல பிரபலமான பெரிய கல்லூரி களிலும்கூட கேம்பஸ் இன்டர்வியூ நடக்கவில்லை. நான்கு வருடத் திற்கு முன்பு கேம்பஸ் இன்டர்வியூ உள்ளது என்பதாலேயே பல கல்லூரிகளை மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள். இதற்காக அதிக பணம் தந்து கல்லூரிகளில் சீட் வாங்கியவர்களும் உண்டு.

கடந்த சில வருடங்களாக பொருளாதார வளர்ச்சி என்பது பெரியதாக இல்லை. எனவே, பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடக்கிறது. இதனால், புதிதாக வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, எப்போது வேலை கிடைக்கும் என பலரும் காத்திருக்கிறார்கள். பலரும் பணம் தந்தாவது நல்ல நிறுவனங்களில் சேர்ந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். வேலை தேடுகிறவர்களின் இத்தகைய மனநிலையைப் பயன்படுத்திதான் சிலர் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள்.
பெரிய நிறுவனங்களின் பெயர்களில் போலி யாக ஒரு மெயில் ஐ.டி.யை இணையதளத்தில்

உருவாக்கி, அதன்மூலமாக பலருக்கும் மெயில் அனுப்பி, உங்களிடமிருந்து பணத்தை கறப்பது தான் அவர்களின் திட்டமே.
வேலை தேடுகிறவர்கள் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். புரொஃபஷனலாக நடக்கும் எந்த நல்ல நிறுவனமும் தனிப்பட்ட ஒருவருக்கு மெயில் அனுப்பி, எங்கள் நிறுவனத்தில் வேலை உள்ளது என்று சொல்லாது. அந்த நிறுவனத்திற்கு பணியாளர்கள் தேவை எனில் சம்பந்தப்பட்ட கன்சல்டிங் நிறுவனத்திடம் தெரிவித்து, அதன் மூலமாகவேதான் பணியாளர்களை தேர்வு செய்யும். மேலும், எந்த நல்ல நிறுவனமும் பணம் கேட்காது. பணம் கேட்டாலே அது போலியான மெயில் என்பதை நீங்கள் உறுதி செய்துவிடலாம்.
எல்லா நிறுவனமும் தகுதியானவர்களையும், திறமை உடையவர்களையும்தான் வேலையில் அமர்த்த விரும்புகின்றன. எனவே, நிறுவனங்கள் பணியாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வேலை தராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதோடு, உங்களுக்குவரும் மெயில் முகவரி, இணையதள முகவரியை சரிபார்த்து, அதன்பிறகு முடிவு எடுப்பது நல்லது. எனவே, இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் செய்யவேண்டிய வேலை ஒன்றுதான். அதாவது, வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வதுதான். படிக்கும் காலத்தில் விடுமுறையின்போது நேரத்தை வீணாக கழிக்காமல், பயிற்சி எடுப்பது அவசியம். இப்படி செய்யும்போது உங்களுக்கு பணி அனுபவம் கிடைக்கும். எளிதில் வேலையும் கிடைத்துவிடும்'' என்றார்.
தகுதியை வளர்த்துக்கொண்டால் வேலை நிச்சயம். போலிகளிடம் ஏமாறவேண்டிய சூழ்நிலை உருவாகாது.