MBA - மூன்றெழுத்து மந்திரம்

##~## |
உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் கல்லூரிகள் எவை என்று கண்டுபிடித்துவிட்டீர்கள். இந்தக் கல்லூரிகளுக்கு அப்ளை செய்வதற்கு சில அடிப்படைத் தகுதிகள் அத்தியாவசியம். இந்திய பிசினஸ் ஸ்கூல்களில் நுழைய நீங்கள் பட்டதாரியாக இருக்கவேண்டும். இலக்கியம், வரலாறு, இயற்பியல், வேதியியல், பி.காம், இன்ஜினீயரிங், சார்ட்டர்டு அக்கவுன்ட், எம்.பி.பி.எஸ். என எந்த படிப்பை படித்திருந்தாலும் எம்.பி.ஏ. சேரலாம். இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் வாங்கியிருக்க வேண்டும். தேர்வில் மிச்சப் பாடங்கள் (Arrears) எதுவும் இருக்கக்கூடாது.
50 சதவிகிதம் என்பது குறைந்தபட்சத் தேவை. அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களும், இறுதித் தேர்விலும்; படிப்பு முழுக்கவும் மதிப்பெண்களில் முன்னணியில் இருப்பவர்களுக்குமே முதலிடம்.
மதிப்பெண்களும், படிப்பில் ஜொலிப்பதும் முக்கியம்தான். ஆனால், எம்.பி.ஏ. அட்மிஷனுக்கு, வெறும் புத்தகப் புழுவாக இருக்கக்கூடாது. எம்.பி.ஏ. படிக்கும் இளைஞனும், இளைஞியும் மேனேஜர்கள், ஊழியர்களின் வழிகாட்டிகள், அவர்களை வழி நடத்துபவர்கள், நாளைய கம்பெனி தலைவர்கள். இவர்களுக்குப் பிறரிடம் பழகத் தெரியவேண்டும்; நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான திறமைசாலிகளை அணைத்துப் போகத் தெரியவேண்டும்; அவர்களுக்குத் தலைமை தாங்கத் தெரியவேண்டும். படிப்பில் கிடைத்த மதிப்பெண்களுக்கும், இந்தத் திறமைகளுக்கும் தொடர்பே கிடையாது.

படிப்பைத் தாண்டிய விளையாட்டுகள், பேச்சு, எழுத்துத் திறமைகள், நிகழ்ச்சிகள் நடத்தும் சாமர்த்தியம்

ஆகியவை இத்திறமைகளின் வெளிப்பாடுகள், தலைமைப் பண்புகளின் அடையாளங்கள். ஆகவே, படிப்பைத் தாண்டிய ஈடுபாடுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எம்.பி.ஏ. அட்மிஷனில் முக்கியமான மதிப்பு தரப்படுகிறது. அதுபோலவே, பேச்சு, எழுத்து போன்ற கம்யூனிகேஷன் திறமைகளும், நிகழ்ச்சிகள் நடத்தும் அனுபவங்களும் தலைமைப் பண்பின் அடையாளங்கள்.
சரி, எப்படி அப்ளை செய்வது? கல்லூரி களின் விளம்பரங்கள் நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் வெளியாகின்றன. நீங்கள் அப்ளை செய்கிறீர்கள். அட்மிஷன் ஃபார்ம் வருகிறது. அடித்தல், திருத்தல் இல்லாமல் ஃபார்மை நிரப்புங்கள். படிவத்தை நிரப்பும் பாணியிலிருந்தே, உங்கள் தெளிவான சிந்தனையையும், தந்த பணியை எத்தனை நேர்த்தியாக நீங்கள் செய்வீர்கள் என்பதையும் சில கல்லூரிகள் எடை போடுகின்றன.
இந்த ஃபார்ம்களை டைப் செய்யாமல், கையால் எழுதச் சொல்வார்கள். காரணம், எல்லோர் கையெழுத்தும் ஒரேமாதிரி இருப்பதில்லை. கையெழுத்தால், எழுதியவரின் குணங்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று கிராபாலஜி (Graphology) என்னும் கலை சொல்கிறது. சில கல்லூரிகள் விண்ணப்பதாரர்களின் ஆளுமையை எடை போட கிராபாலஜியைப் பயன்படுத்துகின்றன.
சில கல்லூரிகளில், கேள்விகள் கேட்பார்கள். பல நூறு வார்த்தைகளில் பதில்கள் எழுதச் சொல்வார்கள். 'உங்கள் வாழ்க்கைத் தொழில் திட்டம் (Career Plan) என்ன?', 'உங்கள் பலங்கள், பலவீனங்கள் எவை, எவை?' என்பவை சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள். நன்கு திட்டமிட்டு இந்தக் கேள்வி களுக்குப் பதில்கள் எழுதுங்கள். நேரடிப் பேட்டிக்கு உங்களை அழைக்கும்போது, இந்தப் பதில்களின் அடிப்படையில் துருவித் துருவி உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஃபார்மில் மட்டுமல்ல, எம்.பி.ஏ. கல்லூரிகளின் அட்மிஷனில் பொதுவாகச் சோதிக்கப்படுபவை இவைதான்:
ஆங்கில அறிவு, கணித அறிவு, வேகமாக வினாக்களுக்குப் பதில் அளித்தல், புரிந்து கொள்ளும் திறன், தர்க்கத் திறமை (Logical Ability),ஆதாரங்களை ஆராயும் திறமை ((Data Interprtetation), தலைமைப் பண்புகள், முடிவெடுக்கும் திறமை, கருத்துப் பரிமாற்றத் திறமை.
இந்தச் சோதனை, மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது - நுழைவுத் தேர்வுகள், (Entrance Tests), குழு விவாதங்கள் (Group Discussions), நேரடிப் பேட்டிகள் (Personal Interviews). இவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
எம்.பி.ஏ.வைப் பொறுத்தவரை, இருபதுக்கும் அதிகமான நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. சில முக்கிய தேர்வுகளையும், அவற்றை யார் பயன்படுத்துகிறார்கள் என்னும் விவரங்களையும் எதிர்ப்பக்கத்தில் உள்ள பட்டியலில் தந்திருக்கிறேன். (ஐ.ஐ.எம்-கள் CAT மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. சில கல்லூரிகள் CAT, MAT போன்ற பல தேர்வுகளின் மதிப்பெண்களை ஏற்கின்றன. நீங்கள் சேர விரும்பும் கல்லூரி, பயன்படுத்துவது ஒரே ஒரு நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணா அல்லது நமக்குவேண்டிய நுழைவுத் தேர்வைப் பயன்படுத்தலாமா என்னும் விவரங்களை, அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளங்களில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.)

தேர்வுகள் பலவகை என்கிறபோதும், இவற்றுக்குள் இழையோடும் ஒற்றுமை இருக்கிறது. எல்லாத் தேர்வுகளும், சோதனை செய்யும் திறமைகள், ஆங்கில அறிவு, கணிதத் தேர்ச்சி, ஆதாரங்களை ஆராயும் திறமை (Data Interpretation),தர்க்கத் திறமை (Logical Ability).
இந்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கவும், சகபோட்டியாளர்களை முந்தவும், இந்தத் திறமைகள் மட்டும் போதாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாகச் சிந்திப்பது இந்தத் தேர்வின் முக்கிய சவால். வேகமாக, அதிவேகமாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படுகிறீர்களா? பயமே வேண்டாம். இவை அத்தனையும் தொடர்ந்த பயிற்சியால் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமைகள்.
பயிற்சிக்கான கருவிகளும் உங்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் - தேர்வுகளின் முந்தைய வருடங்களின் கேள்வித்தாள்கள், விடைகள், விடைகளைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றைத் தரும் ஏராளமான கையேடுகள் (Guides) கிடைக்கின்றன. வரையறுக்கப்பட்ட காலக்கெடுவில் இந்தத் தேர்வுகளுக்குப் பதில் எழுதுங்கள்.
நுழைவுத் தேர்வுகள் எழுதும்போது, நீங்கள் இரட்டைக் குதிரை சவாரி செய்வீர்கள். இலக்கியம், வரலாறு, இயற்பியல், வேதியியல், பி.காம்., இன்ஜினீயரிங், சார்ட்டர்டு அக்கவுன்டன்சி போன்ற படிப்புகளின் இறுதி வருடத்தில் இருப்பீர்கள். அந்தத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும், நுழைவுத் தேர்விலும் ஜொலிக்கவேண்டும், எனவே, நேர நிர்வாகம் (Time Management) மிக முக்கியம். இதற்கு 24 மணி நேரமும் படிக்கவேண்டும் என்பதில்லை. கொஞ்சம் டிவி, கொஞ்சம் கிரிக்கெட், கொஞ்சம் அரட்டை, நிறைய படிப்பு படித்தால் வெற்றி நிச்சயம்.
எம்.பி.ஏ. நுழைவுக்கு வழி காட்டும் பல பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. இவர்களின் கட்டணம் பல்லாயிரம் ரூபாய்களில். ஆனால், இது செலவல்ல, வருங்காலத்துக்கான மூலதனம். ஆனால், பெரும்பணத்தைச் செலவிடும்முன், இந்த நிறுவனங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விவரங்கள் இதோ:
இங்குள்ள ஆசிரியர்களின் திறமை எப்படி?, கற்பிக்கும் ஆற்றல் எப்படி?, ஆசிரியர் - மாணவர் விகிதம் என்ன?, மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்துவார்களா? ஒவ்வொரு மாணவனின் பலங்களையும், பலவீனங் களையும் சரியாக எடைபோட்டு, முன்னேற்ற வழி காட்டுவார்களா?
ஓகே, நன்றாகப் படித்து, நுழைவுத் தேர்வு எழுதிவிட்டீர்கள். 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் வாங்கினால்தான், நல்ல எம்.பி.ஏ. கல்லூரிகளில் அட்மிஷன் கிடைக்கும். உங்கள் மார்க் என்ன? என்ன, 90 சதவிகிதத்துக்கும் அதிகமா? கங்கிராட்ஸ். வாருங்கள், உங்கள் முன்னேற்றப் பயணம் தொடரட்டும்!
(கற்போம்)
படம்: ர.சதானந்த்