எம்.பி.ஏ. சீட் எட்டும் தூரம்தான்!
##~## |
நுழைவுத் தேர்வில் 96 சதவிகித மார்க் வாங்கி அசத்தியிருக்கிறீர்கள். நீங்கள் அடுத்தபடி சந்திக்கப்போகும் சுற்று - குழு சார்ந்த உரையாடல்கள் (Group Discussions)எம்.பி.ஏ. வட்டாரத்தில் இதை ஜி.டி. (GD) என்று குறிப்பிடுகிறார்கள்.
பிசினஸ் ஸ்கூல்களின் ஜி.டி-யில் என்ன நடக்கும்? உங்களையும், பிற ஆறு, ஏழு விண்ணப்பதாரர்களையும் சேர்ந்து உட்கார வைத்து, உங்களிடம் ஒரு கேஸ் ஸ்டடியைக் கொடுத்து விவாதிக்கச் சொல்வார்கள். கல்லூரி சார்பாக இரண்டு அல்லது மூன்று பிரதிநிதிகள் உங்களைக் கூர்ந்து கவனிப்பார்கள். உங்கள் அணுகுமுறை, பிறர் கருத்தைக் கேட்கும் பாங்கு, அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஆகியவற்றிலிருந்து உங்களுக்குக் குழுவில் பணியாற்றும் குணநலன் இருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்து மார்க் போடுவார்கள்.
நிறையபேருக்கு ஜி.டி. என்றால் ஒரே கொலைநடுக்கம். சரவணன் பல ஜி.டி-க்களை சந்தித்தவர். அவர் சொல்கிறார்.
'பரீட்சை என்றால் எனக்கு பயம் கிடையாது. நாம எழுதறோம். விடை சரியோ, தப்போ, வேற யாருக்கும் தெரியாது. இன்டர்வியூவும் அப்படித்தான், நாம் என்ன உளறினாலும், கம்பெனிக்காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, ஜி.டி. அப்படி இல்லை. சக மாணவர்களோடு பேசற நிகழ்ச்சி. ஏதாவது ஏடாகூடமாப் பேசினா, சாயம் வெளுத்துடும்.'

சரவணன் மட்டுமல்ல, நிறையபேருக்கு ஜி.டி. என்றால் ஒரே பயமயம் - மற்றவர்கள் முன்னால் வாயைத் திறந்தால் வார்த்தை வருமா என்று பயம். வந்தாலும், இங்கிலீஷ் தப்பும் தவறுமாக இருக்குமே என்று பயம். கேட்பவர்கள் சிரிப்பார்களே என்று பயம். ஃபெயில் மார்க் போடுவார்களே என்று பயம்.
நீங்கள் எப்படி? தெனாலி கமல் டைப்பில் எல்லா வற்றையும் கண்டு பயப்படுகிற ரகமா? கவலை வேண்டாம். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் உங்களைப் போலத்தான்.
டிவியில் விசுவின் மக்கள் அரங்கம் அல்லது விஜய டி.ராஜேந்தரின் அரட்டை அரங்கம் பார்த்திருக்கிறீங்களா? குழு உரையாடல்களும் இந்த நிகழ்ச்சி மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம், குழு உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடக்கும். அந்த டி.வி நிகழ்ச்சிகளில் சின்னச் சின்னப் பொடிசுகள் எல்லாம் எப்படி பேசி விளாசித் தள்ளுகிறார்கள். பயங்களைத் தூக்கி எறியுங்கள்; தைரியமாக ஜி.டி.யை எதிர்கொள்ளுங்கள், நிச்சயம் ஜெயிப்பீர்கள்.
ஜி.டி-யில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கான வெற்றி ரகசியங்களை நான் இப்போது உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்.
பிசினஸ் ஸ்கூல்ஸ் ஜி.டி. நடத்துவது உங்களை வம்பில் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்க அல்ல. அவர்கள் கண்டுபிடிக்க விரும்புவதெல்லாம்:

ஒவ்வொருவரும் எப்படி பேசுகிறீர்கள்?
கருத்துகளில் தெளிவு, வாதங்களில் கோர்வை, ஆங்கிலத்தில் சரளம் இருக்கிறதா?
எதிர்க்கருத்துகளைக் கவனமாகக் கேட்கிறீர்களா?
எதிர்க்கருத்துகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் பதில் சொல்கிறீர்களா? என்பவைதாம். எனவே, எளிமையான கேஸ் ஸ்டடிகளைத்தான் கொடுப்பார்கள்.
நீங்கள் செய்யக் கூடாதவை:
விதண்டா வாதங்கள்.
பிறர் பேசும்போது குறுக்கிடுதல்.
வளவளப் பேச்சு.
பிறரைப் பேசவிடாமல் தடுத்தல்.
ஜி.டி.-யில் உங்களிடம் இருக்கவேண்டிய திறமைகள்:
பொது அறிவு.
ஆங்கிலத்தில் பேசும் திறமை.
பிறர் கருத்துகளுக்குச் செவிமடுக்கும் குணம்.
பிறரை மதிக்கும் குணம்.
எந்த பிரச்னையிலும் சாதக, பாதகங்களை ஆலோசித்து சீர்தூக்கும் குணம்.

இவற்றை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? நாளிதழ்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை தினமும் படியுங்கள். சினிமா கிசுகிசு, கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங், அரசியல் வம்பு ஆகியவற்றை மட்டும் படித்து பேப்பரைக் கடாசாமல் பொருளாதாரம், அறிவியல், நிர்வாகம், நிதிநிலை, நிறுவனச் சேதிகள் போன்ற எல்லா விஷயங்களையும் படியுங்கள். இவற்றை உங்கள் நண்பர்களோடு விவாதியுங்கள். உணர்ச்சிவசப்படாமல், உங்கள் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் பண்பு உங்களுக்குள் வளர்வதை நீங்களே உணர்வீர்கள்.
சரி, ஜி.டி.யில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இப்போது கடைசிக் கட்டம். நேர்முகத் தேர்வு. இதை முடித்துவிட்டால் அட்மிஷன். கையில் லட்டுபோல எம்.பி.ஏ. சீட்.
நேரடிப் பேட்டிகளில் ஜெயிக்க, நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இரண்டு:
1. நேரடிப் பேட்டிகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
2. என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்?
நேரடிப் பேட்டிகளில் என்ன எதிர்பார்க் கிறார்கள்? இந்தப் பேட்டிகளில் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இருப்பார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் நாம் முன்பே பார்த்த Curiosity (அறிவுத் தேடல்), Competence (திறமை), Commitment (பொறுப்புணர்ச்சி), Communication (கருத்துப் பரிமாற்றம்) Confidence(தன்னம்பிக்கை), Compatibility (ஒத்துப்போதல்) ஆகிய 6 சி-க்கள்தாம்.
என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்?
கல்லூரிகள் சீட் தருகிற மகாராஜன்கள், என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும். நாம்தான் எல்லாவகையான கேள்விகளுக்கும் தயாராகப் போகவேண்டும். நான் ஒரு குறுக்கு வழி சொல்லித் தருகிறேன். கேட்கும் வார்த்தைகள் மாறலாம். ஆனால், சாதாரணமாக கீழ்க்கண்ட கேள்விகள்தாம் கேட்கப்படுகின்றன.
உங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சம்பவம். ஏன் அது மறக்க முடியாதது?
உங்கள் வாழ்க்கையின் ஒரே ஒரு முக்கிய சாதனை என்று எதைச் சொல்வீர்கள், ஏன்?
பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் கற்றுக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம் எது, ஏன்?

அடுத்த ஐந்து, பத்து வருடங்களில், வாழ்க்கையில் என்ன சாதிக்கவேண்டும் என்பது உங்கள் குறிக்கோள்?
உங்கள் பலங்கள் என்ன?
உங்கள் பலவீனங்கள் என்ன?
நீங்கள் ஏன் எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறீர்கள்?
பிறவியிலேயே கண்பார்வை இல்லாத ஒருவருக்கு, வானவில்லை வர்ணியுங்கள்.
உங்களை ஒருநாள் இந்தியாவின் சர்வாதிகாரியாக்கினால், நீங்கள் முதலில் செய்யும் மூன்று காரியங்கள் எவையாக இருக்கும்?
உங்கள் முன்னால் கடவுள் ஒரு நாள் தோன்றி, நீங்கள் வேண்டும் மூன்று வரங்களைத் தர தயாராக இருக்கிறார். என்ன கேட்பீர்கள்?
உங்கள் ரோல் மாடல் யார், ஏன்?
நான் மேலே தந்திருக்கும் ஒரு டஜன் கேள்விகளையும் தாண்டி, இன்டர்வியூவில் கேள்வி கேட்டால்:
உலகத்தின் மாபெரும் கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? அமெரிக்க ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுக்கூடத்தில் (Oak Ridge National Laboratory) இருக்கும் டைட்டன் (Titan) கம்ப்யூட்டர்தான் உலகமகா கம்ப்யூட்டர் என்று விக்கிப்பீடியா இணையதளம் சொல்கிறது. நம்பாதீர்கள், உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா?
உங்கள் வலது கையைத் தூக்குங்கள். உங்கள் தலைக்குமேல் வையுங்கள். ஆமாம், அங்கே இருப்பதுதான், உலகத்தின் பெரிய சக்திவாய்ந்த கம்ப்யூட்டர். மனித மூளையின் பிராஸஸிங் வேகம் 700 பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு சமம்: நினைவாற்றல் 3,90,625 பெர்சனல் கம்ப்யூட்டர்களை மிஞ்சும்.
இன்டர்வியூவில் எதிர்பாராத கேள்விகள் கேட்டால், உங்கள் மூளைக் கம்ப்யூட்டரை ஆன் செய்யுங்கள்.
நேரடிப் பேட்டிகளுக்குப் போகும்போது கடைப்பிடிக்கவேண்டிய சில அடிப்படை விதிகள் உண்டு. உங்களுக்கு அவை தெரிந்திருக்கலாம். ஆனாலும், சொல்கிறேன்.
ஆல்பர்ட் மெஹ்ராபியன் (Albert Mehrabian) அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப் பேராசிரியர். மாமேதை. சைலன்ட் மெசேஜஸ் (Silent Mesaages) என்ற தன் புத்தகத்தில் சொல்கிறார்: 'உங்களை யாராவது சந்திக்கும்போது, அவர்கள் மனதில் முதலில் ஏற்படும் அபிப்ராயம்தான் நிலைக்கும். இந்த அபிப்ராயம் 55 சதவிகிதம் வெளித்தோற்றத்தால் உருவாக்கப்படுகிறது.'
இன்டர்வியூ செய்பவர்கள் மனதில் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் உருவாக்குவதுதானே உங்கள் குறிக்கோள்? தோற்றம், உடை, கை குலுக்கும் விதம், கண்களைப் பார்த்துப் பேசுதல், முகபாவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பிறரைப்பற்றிய அபிப்ராயங்கள் நம் மனத்தில் உருவாகின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்டர்வியூ போகும்போது இந்த அம்சங்களில் தனிக்கவனம் செலுத்துங்கள்.
இன்னும் மூன்று முக்கிய அறிவுரைகள்:
1. இன்டர்வியூவுக்குக் காலதாமதமாகப் போகவே கூடாது.
2. செல்போனை சைலன்ட் மோடில் வைக்கவேண்டும்.
3. நானும் என் போன்றோரும் அடிக்கடி சந்திக்கும் நிகழ்வைச் சொல்கிறேன். பலர் தங்கள் சான்றிதழ்களைக் கந்தரகோலமாக அள்ளிக்கொண்டு வருவார்கள். பட்டப் படிப்புச் சான்றிதழைக் கேட்போம். அப்போது இவர்கள் தங்கள் பேப்பர்களுக்குள் துலாவுவதைப் பார்த்தால், எரிச்சல் சிரிப்பு இரண்டும் சேர்ந்து வரும்.
பல பிரிவுகள்கொண்ட கோப்புகள் (Files) எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. படிப்பு, நடத்தை, விளையாட்டு, படிப்பு தாண்டிய சாதனைகள் ஆகிய ஒவ்வொரு வகைச் சான்றிதழ்களையும் கோப்பில் தனித்தனி அறைகளில் பிரித்து வையுங்கள்.
இன்டர்வியூ செய்பவர்கள் சான்றிதழைக் கேட்டால், உடனே எடுத்துக் கொடுக்க முடியும். இந்த ஒழுங்குமுறை உங்கள் செயலாற்றலுக்கு உதாரணமாக அவர்களுக்குத் தெரியும்.
கடைப்பிடித்துப் பாருங்கள். இன்டர்வியூ விலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
(அடுத்த வாரம் முடியும்)
படம்: ரா.நரேந்திரன்.
பெருகும் யூரியா இறக்குமதி!
இந்த நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 20 லட்சம் டன் யூரியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. 2012-13-ல் மட்டும் 70 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஓர் ஆண்டு முழுவதும் 3 கோடி டன் யூரியா தேவைப்படுகிறது. இதில் 2.20 கோடி டன் யூரியா மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் இருக்க, செயற்கை யூரியா எதற்கு?