மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்கு நிலைகள் !

நான்கு நிலைகள் !

 ஸ்ட்ராடஜி 11

பிசினஸ் தந்திரங்கள்!

கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

பிசினஸ் தந்திரங்களும் புதிது புதிதான யுக்திகளும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானதுதான். ஆனால், அவற்றை எப்போது பயன்படுத்துவது என்பது அதைவிட முக்கியமான விஷயம். அதாவது, எந்த நிலையில் ஒரு பிசினஸ் தந்திரத்தைப் பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்துதான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

ஒரு தொழிலை எல்லாம் பக்காவாக ஆய்வு செய்து தொடங்கிவிட்டோம் என்று  உட்கார்ந்துவிட முடியாது. வளர்ச்சி எப்படி இருக்கிறது, நாம் பயன்படுத்தியுள்ள ஸ்ட்ராடஜி நடைமுறையில் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். நமது ஸ்ட்ராடஜி எதிர்பார்த்த லாபம் தரவில்லை என்றால், உடனடியாக வேறு ஸ்ட்ராடஜியை மாற்று வதற்கும் தயங்கக் கூடாது. ஆனால், நமது தொழிலின் வளர்ச்சிப் போக்கில் இயல்பாகவே நான்கு நிலைகளில் நாம் புதிய ஸ்ட்ராடஜியைப் புகுத்தவேண்டும்.  

நமது தொழிலை வெற்றிகரமாக நிலைநிறுத்துவது கிட்டத்தட்ட ஒரு குழந்தையை வளர்ப்பது போன்றதுதான். பத்து வயது வரை குழந்தையைக் கவனித்து கொள்வதற்கும், அதற்குபிறகு குழந்தையைக் கையாளுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

நான்கு நிலைகள் !

பத்து வயது குழந்தைக்கான தேவை வேறு, இருபது வயதில் அதற்கான தேவை வேறு. சாதாரணமாக உணவு முறையில்கூட இந்த வித்தியாசம் வெளிப்படும். அதேபோல நாற்பது வயதில் உள்ள ஒருவரது நடவடிக்கைகளுக்கும், வயதான காலத்தில் நடந்துகொள்வதற்குமான வித்தியாசங்களும் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நாம் செயல்பட்டால் சீரான மனித வளர்ச்சி இருக்கும்.  

பொத்தாம் பொதுவாக ஒரே அளவுகோல் களை எல்லா வயதினருக்கும் கையாள முடியாது. குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் ஒருவரால், வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதில் சிறப்பாகச் செயல்பட முடியாது. இரண்டு பேரையும் கையாளுவதற்கான நுணுக்கங்கள் வேறு வேறாக இருக்கும். இந்த நிலைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தொழிலும் இதேபோலத்தான். அந்தந்த காலத்து நிலைகளைப் புரிந்துகொண்டு பிசினஸ் தந்திரங்களை மாற்றிக்கொண்டால்தான் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அந்த நான்கு நிலைகள் என்ன என்று பார்ப்போம்.

ஆரம்ப நிலை!

இது தொழிலின் முதல் நிலை. தொழில் தொடங்கிய இந்தக் குழந்தைப் பருவத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம், அதிலிருந்து கிடைக்கும் லாபம் என்ன, போட்டியாளர்கள் யார், சந்தையில் உள்ள வாய்ப்புகள் என்ன, நமது திறமை எப்படி என்பது போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு நமது பிசினஸ் தந்திரங்கள் வடிவமைக்கப்படவேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்படும் நிர்வாகத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். இந்த நிர்வாகம் மூலப்பொருட்கள், உற்பத்தி, விநியோகம் போன்றவற்றில் முழுத் திறனையும் காண்பிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

வளர்ச்சி நிலை!

நான்கு நிலைகள் !

நமது தயாரிப்புகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. அதன் மூலம் எதிர்பார்த்த லாபம் வருகிறது என்பது போன்ற இளமைத் துடிப்பான காலகட்டம் இது. இந்தக் காலகட்டத்தில் நமது தயாரிப்புகள் சரியான நேரத்தில் தங்கு தடையின்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். விளம்பரங்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் என எல்லா  மட்டத்திலுமான உறவுகளை சரியான வகையில் கையாளத் தெரியவேண்டும். உற்பத்தியை அதிகரிப்பது, புதுமைகளை புகுத்துவது என்பது போன்ற முயற்சிகளைக் கணக்கில் கொண்டு நமது பிசினஸ் தந்திரங்களை மாற்ற வேண்டும்.

சீரான நிலை!

லாப விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே இருக்கிறது. அல்லது ஒரே சீரான அளவில் இருக்கிறது என்றால் நாம் வளர்ச்சியின் மூன்றாவது கட்டத்தை அடைந்து விட்டோம் என்று சொல்லலாம். இரண்டு சதவிகிதம் அல்லது மூன்று சதவிகிதம் மட்டுமே லாபம் வரும் சமயமிது. இந்நிலைகளில் உடனடியாக லாபத்தைத் தக்கவைப்பது, அதை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும். உற்பத்தியை மேம்படுத்துவது, போட்டியாளர்களை சமாளிப்பது, சந்தையை மீண்டும் கைப்பற்றுவது என உத்திகளை வகுத்துக்கொள்ளவேண்டும்.  

இறுதி நிலை!

லாப விகிதம் மொத்தமாகச் சரிந்துவிட்டது அல்லது தொழில் நஷ்டத்தைச் சந்திக்கிறது என்கிற நிலைமையில் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று சொல்லலாம். இந்நிலையைச் சமாளிக்க செலவுகளைக் குறைப்பது, லாபம் தராத தொழில்களை கைவிடுவது அல்லது எந்த வருமானமும் தராத சொத்துக்களை விற்பது என சில யுக்திகளை கையாளவேண்டியிருக்கும். இந்த நிலையில் சமாளிக்கக்கூடிய, உறுதியான முடிவுகளை எடுக்கும் நிர்வாகம் இந்த நேரத்தில் இருக்கவேண்டும்.

நான்கு நிலைகள் !

மேற்கண்ட இந்த நான்கு நிலைகளிலும் வெவ்வேறு வகையான பிசினஸ் தந்திரங்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். எனவேதான், ஒரே வகையிலான பிசினஸ் தந்திரத்தை அடிப்படையாகக்கொண்டிருக்க முடியாது என்கிறோம். தொழிலின் வளர்ச்சிப் போக்கு மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல அதை செயல்படுத்துவதற்கான நபர்களையும் மாற்றவேண்டும். வளர்ச்சி நிலையில் துடிப்பாக முடிவெடுக்கும் அதிகாரியால் இறுதிக்கட்டத்தில் நிகழும் சிக்கல்களை கையாளத் தெரியாது. சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த ஓர் அதிகாரி அமைதியான நேரத்தில் பணியாற்றுவதில் சொதப்பிவிடுவார். எனவேதான், ஒரே வகையிலான ஸ்ட்ராடஜி, ஒரே வகையிலான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு லாபத்தை உறுதி செய்ய முடியாது என்கிறோம்.

அதேபோல, ஒரு தொழில் இந்த வளர்ச்சிப் போக்கில் இரண்டு நெருக்கடியான காலகட்டங் களையும் சந்திக்கிறது. அது என்ன என அடுத்த வாரம் சொல்கிறேன்.

(வியூகம் அமைப்போம்)