மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

தம்பி வா, தலைமை ஏற்க வா!

##~##

கடந்த 53 வாரங்களாகத் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஒரு தந்தையாக, ஆசிரியனாக, நண்பனாக, என் அறிவுத்தேடல்களையும், அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்தத் தொடரின் எல்லைகள் விரியவும், விசாலமாகவும் முக்கிய காரணமாக இருந்தவை உங்கள் கேள்விகள்.

'தமிழ்நாட்டில் சிறந்த ஐந்து எம்.பி.ஏ. கல்லூரிகள் எவை?'

'எம்.பி.ஏ. படிக்க மொத்தம் எவ்வளவு செலவாகும்?'

கன்சல்டிங், புரொடக்ஷன், ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங் ஆகியவற்றில் எதில் வேலை வாய்ப்புகள் அதிகம்?' என்பனபோன்ற அடிப்படைக் கேள்விகள்தான்.

அறிவு சார்ந்த பல கேள்விகள், கார்ப்பரேட் உலகில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களையும், சில பேராசிரியர்களையும் தொடர்புகொண்டு விடை தேடவைத்த வினாக்கள்:

'ஐ.ஐ.எம். அஹமதாபாத்தில் இரண்டு ஆண்டு ஃபீஸ் 14.4 லட்சம்; அண்ணா பல்கலைக்கழகத்தில் 55,650 ரூபாய்; சென்னை பல்கலைக்கழகத்தில் 46,000 ரூபாய். இவை அனைத்திலும் சிலபஸ் ஒன்றுதானே? நான் ஏன் அஹமதாபாத் அட்மிஷனுக்கு அலையவேண்டும்?' என்று கேட்ட இளைஞர்களின் கேள்வி ஒருபக்கம்.

'என் மகள் இன்ஃபோசிஸ் கம்பெனியில் மாதம் 30,000 சம்பாதிக்கிறாள். அடிக்கடி அமெரிக்கா ட்ரிப் உண்டு. ஏனோ, எம்.பி.ஏ. படிக்க ஆசைப்படுகிறாள். அவள் முடிவு சரியா, தப்பா?' என்கிற நடுத்தர வர்க்கத்து அப்பாக்கள் கேட்ட கேள்வி இன்னொரு பக்கம்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

'நான் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறேன். என் பத்து வயது மகனை அஹமதாபாத்தில் படிக்கவைக்க, இப்போதிருந்தே எப்படி தயாராக்குவது?' என நெஞ்சை நெகிழவைத்த சில அப்பாக்களின்  பிரமிக்கவைத்த கேள்விகளும் உண்டு.

மூன்றெழுத்து மந்திரம் எம்.பி.ஏ. தொடர் ஆரம்பித்தபோது, எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள், எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்கள், அவர்களின் பெற்றோர் ஆகியோர் என் இலக்கு. ஆனால், சில வாரங்களிலேயே, இந்த மேடை எட்டும் வாசகர் வட்டம் மிக மிகப் பெரியது என்பதை உணர்ந்தேன்.

'நான் தஞ்சாவூரில் நகைக் கடை வைத்திருக்கிறேன். தொடரில் வரும் சில மேனேஜ்மென்ட் கொள்கைகளைப் பின்பற்று கிறேன். என் போன்றவர்களுக்கு உதவும் விஷயங்களை எழுதுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தவர்கள் உண்டு.

'தமிழில் மேனேஜ்மென்ட் பற்றி படிக்கும் போது, முன்னமே தெரிந்த சில மேனேஜ்மென்ட் கொள்கைகளின் நுணுக்கங்கள் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்' என்று சொன்னார் ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்யும் ஒரு பிரபல பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் சி.இ.ஓ.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

'பெஞ்ச் மார்க்கிங் பற்றி எழுதினீர்கள், Balanced Score Card, Blue Ocean Strategy பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும்' என்று அன்புக் கட்டளையிட்டார்கள் சில பேராசிரியர்கள்.

இந்த நெகிழ்ச்சிகளுக்கும், பிரமிப்புகளுக்கும்,  நடுவே, எனக்கு மிகவும் வருத்தம் தரும் சமாசாரம் ஒன்று இருக்கிறது.  

எம்.பி.ஏ. படிப்பது பற்றி ஏராளமான இ-மெயில்கள். பட்டதாரி மாணவர்கள் அனுப்பிய இந்த மின்னஞ்சல்களின் ஆங்கிலத் தரம் அதிர்ச்சி அடைய வைத்தது. எட்டாம் வகுப்பு மாணவனே செய்யக்கூடாத இலக்கணத் தவறுகள்!

பள்ளிக்கூடமே போகாத எத்தனையோ பேர் பிசினஸில் ஜெயித்திருக்கிறார்களே! ஆங்கிலத்தில் தவறுகள் செய்தால், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கக் கூடாதா? என்று சிலர் கேள்விகளும் கேட்டார்கள். பிசினஸ் நடத்த ஆங்கிலப் புலமை தேவையில்லை. ஆனால், எம்.பி.ஏ. படிக்க ஆங்கிலத் தேர்ச்சி அவசியம். இன்று இணையதளமும்,

மின்னஞ்சலும், பிசினஸை உலகமய மாக்கிவிட்டன.  ஜப்பானிலேயே, இன்று எல்லோரும் ஆங்கிலம் கற்று வருகிறார்கள். ஆங்கிலம்தான், அறிவின் அடையாளம் என்பது நடைமுறை நிஜம். எனவே, எம்.பி.ஏ. படிக்க மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் ஜெயிக்க மட்டுமல்ல, எந்தத் துறையில் சிகரம் தொடவும், எழுதுவதிலும், பேசுவதிலும் ஆங்கிலத் திறமை அவசியம்.

சென்னையிலும், பிற நகரங்களில் குறிப்பிட்ட சில பள்ளி, கல்லூரிகளிலும், ஒருவருக்கு ஒருவர் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். பிற கல்வி நிலையங்களிலும், குறிப்பாக தமிழ் மீடியத்திலும் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. இந்த மாணவர்கள் ஆங்கிலம் அறிந்தவர்களாக இருந்தாலும், பேசப் பயப்படுகிறார்கள். இந்தப் பயம் கூச்சத்தை ஏற்படுத்தி, அடுத்து தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி, தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது. தன்னம்பிக்கையை இழந்தவன் தன்னையே இழந்தவன்; என்றுமே ஜெயிக்க முடியாதவன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஏன் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்? என் ஐ.ஐ.எம், அஹமதாபாத் நண்பர் மாரிமுத்து, தன் ஆங்கிலத் திறமையை எப்படி வளர்த்துக்கொண்டார் தெரியுமா? 'என் ஊர் கன்னியாகுமரி பக்கத்தில் ஒரு குக்கிராமம். எட்டாவது படிக்கும்போது என் வகுப்பாசிரியர் எனக்கு ஒரு கடமை தந்தார். தினமும் நூல் நிலையம் போகவேண்டும்; ஆங்கில நாளிதழ் படிக்கவேண்டும்; ஐந்து புதிய வார்த்தைகளை எழுதிக்கொண்டு வரவேண்டும். ஆசிரியர் அகராதியிலிருந்து அந்த ஐந்து வார்த்தைகளின் அர்த்தம் கண்டுபிடிக்கச் சொல்வார். அந்த வார்த்தைகளையும், அர்த்தங்களையும் நான் மனப்பாடம் செய்யவேண்டும்.'

மிக மிக எளிய முறை! இதன்படி, மாரிமுத்து ஒரு வருடத்தில் கற்ற புதிய ஆங்கில வார்த்தைகள் 1,500. ப்ளஸ் 2 முடிக்கும்போது, அவர் கற்றிருந்த ஆங்கில வார்த்தைகள் 7,500. சராசரியாக ஓர் ஆண் தினமும் 7,000 முதல் 10,000 வார்த்தைகளும், ஒரு பெண் 22,000-த்திலிருந்து 25,000 வார்த்தைகளும் பேசுவதாக ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள். ஐந்தே வருடங்களில் மாரிமுத்து கற்ற 7,500 புதிய வார்த்தைகளால் அவருடைய ஆங்கில ஞானம் எத்தனை பிரமாதமாக வளர்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

இன்று மாரிமுத்து, சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத் தலைவர். அவருடைய வெற்றிக்கு அவர்  வகுப்பாசிரியர் சொல்லித் தந்த டெக்னிக்கை நாம் ஏன் பின்பற்றக்கூடாது? ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறமை இருந்தால், வாழ்க்கையில் நீங்கள் கற்பனை செய்து பார்த்தேயிராத மாற்றங்கள் வரும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் தலைமை பண்பை வளர்க்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மியூசிக் கிளப், டான்ஸ் கிளப், எக்கனாமிக்ஸ் கிளப், காமர்ஸ் கிளப், டெக்னாலஜி கிளப் என பல அமைப்புகளில் சேர்ந்து பொங்கும் உற்சாகத்தோடு பங்கெடுங்கள்.

பள்ளிகள், கல்லூரிகளில் நடக்கும்  பல நிகழ்ச்சிகளில் சின்னச் சின்னதாக முடிக்க வேண்டிய பல பொறுப்புகள். அழைப்புக்குக் காத்திராமல், நீங்களே களத்தில் குதியுங்கள்.  எடுபிடி வேலைகள் தந்தாலும் தனித்துவத்தோடு செய்து முடியுங்கள்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இன்றைய உலகம் ஃபாஸ்ட் ஃபுட் உலகம். பணம், பதவி, புகழுக்கு எல்லோரும் ஏங்குகிறோம், சாதனையாளர்களைக் கண்டு வியக்கிறோம். வெற்றிக்குக் காரணம், அவர்களுடைய குடும்ப பின்புலம், குறுக்குவழிகள், குள்ளநரித்தனங்கள் என்று காரணங்களைப் பட்டியலிடுகிறோம். இந்த வாதம் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், எல்லா சாதனைகளின் பின்னாலும், கட்டாயம் இருக்கிறது கடும் உழைப்பு.

லாங்க்ஃபெல்லோ (Longfellow) என்னும் ஆங்கில கவிஞர் இதை அழகாகச் சொல்கிறார்,

The heights by great men reached and kept
were not attained by sudden flight.
But they, while their companions slept,
were toiling upward in the night.

(இதன் எளிமையான அர்த்தம்: சிகரங்களில் ஏறி, அவற்றை தங்களுடையதாக ஆக்கிக் கொண்ட மாபெரும் மனிதர்களின் வெற்றிகள் திடீரென வந்துவிடவில்லை. தம் சகாக்கள் தூங்கிய நள்ளிரவுகளில் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள்!)  

ஆங்கில அறிவு, அதனால் தொடரும் ஆளுமை, கடும் உழைப்பு, உங்கள் காலடியில் பதவிகளையும், கிரீடங்களையும் கொண்டுவந்து கொட்டும். மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும்போது, உங்களுக்கு மாலைகள் குவியும்;  கைதட்டல்கள் ஆர்ப்பரிக்கும். அதில் முதல் கரவொலி என்னுடையதாக இருக்கும். அந்த நாளை எதிர்பார்த்து உங்களோடு நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை slvmoorthy@yahoo.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

(முற்றும்)
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, 
 ர.சதானந்த்.