மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இரண்டு சூழ்நிலைகள்!

இரண்டு சூழ்நிலைகள்!

ஸ்ட்ராடஜி 12

##~##

ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த நான்கு நிலைகளில் பிசினஸ் யுக்திகளை மாற்றவேண்டும் என சென்ற வாரம் சொன்னேன். அந்த நான்கு நிலைகளோடு இரண்டு சூழ்நிலைகளையும் ஒரு தொழில் தனது வளர்ச்சிப் போக்கில் சந்தித்தே ஆகவேண்டும் என்று சொல்லி இருந்தேன். இந்த இரு சூழ்நிலைகளையும் தாக்குப்பிடித்து நிற்கும்போதுதான் ஒரு தொழில் தனது இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த இரண்டு சூழ்நிலைகளை இப்போது பார்ப்போம்.

தொழில் போட்டி!

ஒரு தொழிலுக்குரிய சந்தையை ஒருவரே ஏகபோகமாக வைத்திருப்பதில்லை. பல போட்டியாளர்களும் சந்தையைப் பிரித்துக் கொள்கின்றனர். இப்படி பிரித்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். என்னென்ன காரணங்கள்?

- புதிய நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கு தடை இல்லாமல் இருப்பது.

- புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பது.

- பலமான போட்டி.

- தொழிலை மேலும் வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவது.

இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.

இரண்டு சூழ்நிலைகள்!

இதனால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு ரொட்டித் துண்டை பலரும் பங்குபோட்டு சாப்பிட நினைக்கும் போது ஆளுக்கு சிறுதுண்டு கிடைக்கிற மாதிரி, ஒரு சந்தையை பல போட்டியாளர்கள் பிரித்துக்கொள்ளும்போது குறைந்த அளவு லாபமே கிடைக்கும். தவிர, சந்தையை இழக்கும் அபாயம் எந்த நேரத்திலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.

நீங்கள் ஈடுபடும் தொழில் இப்படிப்பட்ட போட்டி நிறைந்த தொழிலாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். சந்தையிலிருந்து 5 சத விகிதத்தைப் பிரித்து, அதை உங்களுடையதாக ஆக்கிக்கொள்வதற்கு நீங்கள் பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கும். காரணம், ஒரு தொழிலில் நீங்கள் 5 சதவிகித பங்குகளுக்கு மேல் வைத்திருந்தால்தான் வெற்றியாளராக இருக்கமுடியும்.

சந்தையில் உங்களுக்கான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான பிசினஸ் தந்திரங்களை நீங்கள் நடைமுறைப் படுத்தவேண்டும். ஒரே மாதிரியான தயாரிப்பு களை கொண்டிருக்காமல் அது தொடர்புடைய இதர அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டு சூழ்நிலைகள்!

ஐ.பி.எம். நிறுவனம் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம்தான். ஆனால், சந்தையில் போட்டி அதிகரித்தபோது அது அடுத்தகட்டமாக கணினி தொடர்பான சேவைகளையும் அளிக்கத் தொடங்கியது. இதனால் கணினிக்குரிய சேவையும் தொடர்ந்து கிடைக்கும் என்கிற நிலைமையை உருவாக்கியது. இதனால் சந்தையில் தொடர்ந்து தனது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்தி 3டி பிரின்டிங் தயாரிப்பு நிறுவனம் 3டி சிஸ்டத்துக் கான சர்வீஸ்களை அளிக்கத் தொடங்கியதன் மூலம் தனது தொழிலை தக்கவைத்துக் கொண்டது. தொழிலைப் பிரித்துக்கொள்ள போட்டியாளர்கள் தொடர்ந்து உருவாகிவரும் சூழ்நிலையில் லாபம் குறைந்தாலும் சந்தையைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

மின்சாதன பொருட்கள் தயாரிப்பில் தொலைக்காட்சியின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். முதலில் கறுப்பு வெள்ளை டிவி, அடுத்தது கலர் டிவி., பிறகு ஃப்ளாட் டிவி., அதன்பிறகு பிளாஸ்மா, எல்.சி.டி., எல்.இ.டி. என ஏறக்குறைய அனைத்து மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் வித்தியாசத்தைத் தருவதன் மூலம் தொடர்ந்து தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. இதை செய்யாவிட்டால் சந்தையை இழக்கவேண்டிய அபாயம் ஏற்படும். அதன்மூலம் தோல்வியைத் தழுவவேண்டிய கட்டாயமும் உருவாகும்.

ஏற்ற இறக்கம்!

நீங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில், மொத்த துறையும் ஏற்ற இறக்கமாக உள்ளது என்கிற நிலையில் ஸ்ட்ராடஜியை மாற்றிக்கொள்வது அவசியம். அலை அதிகமாக இருக்கும்போது கப்பலை முன்னோக்கி செலுத்துவதற்கு முயற்சிப்பதைவிட, அந்தக் கப்பலை ஒரு இடத்தில் நிலையில் நிறுத்துவதே முக்கியமான வேலை. அதாவது, அலையின் போக்கை கணித்து அதற்கேற்ப நங்கூரம் இடவேண்டும். இல்லாவிட்டால், அலையின் திசைக்கேற்ப கப்பலும் அடித்துச் செல்லப்பட்டு, கடைசியில் தரை தட்டி, தன் பயணத்தைத் தொடர முடியாதபடிக்கு ஆகிவிடும்.

மொத்த சந்தையும் அல்லாடிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஸ்ட்ராடஜியை மாற்றிக்கொள்ளாமல் பொதுவான பிசினஸ் யுக்திகளைப் பயன்படுத்தினால் தொழிலில் நஷ்டத்தையே சந்திப்பீர்கள். இந்த இடத்தில் அவசரகால மருத்துவச் சேவைக்கும், அதற்கு பிறகான மருத்துவச் சேவைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

இரண்டு சூழ்நிலைகள்!

உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் ஒரு நோயாளியை ஐ.சி.யூ. வார்டில் வைத்து தீவிரமாக கவனிக்கவேண்டும். முதலில் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீரான நிலைக்கு கொண்டுவரவேண்டும். அந்த நிலையை எட்டிய பிறகே ஐ.சி.யூ. வார்டிலிருந்து ஒருவரை பொது வார்டுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான அடுத்தகட்ட சிகிச்சைகளைத் தரவேண்டும்.

இதேபோல, ஒரு தொழில் மோசமான நிலையில் இருக்கும்போது அதனை ஒரு நிலைக்கு கொண்டுவரத் தேவையான ஸ்ட்ராடஜியை முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும். அந்தத் தொழில் ஓரளவு நிலைபெற்ற பிறகே அதனை லாபத்துக்கு கொண்டுவருவது பற்றி யோசிக்க வேண்டும்.

இது சாதாரண விஷயமல்ல, ஒரு குழந்தையைப் பலசாலியாகவும்; அதே சமயத்தில் புத்திசாலியாகவும் வளர்க்கும் சவால் நிறைந்த விஷயம்! இந்த சவாலில் நீங்கள் ஜெயிப்பீர்களா, இல்லை தோல்வி அடைவீர்களா என்பது நீங்கள் மேற்கொள்ளப் போகும் பிசினஸ் ஸ்ட்ராடஜியைப் பொறுத்தே அமையும்.

(வியூகம் அமைப்போம்)