போகலாமா, கூடாதா?
நாணயம் ஜாப்
##~## |
இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, சில ஆண்டுகள் அதில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலை மாறிவிடுவது பலருக்கும் வழக்கமான விஷயமாகி விட்டது. புதிய நிறுவனத்தில் சில ஆண்டுகள் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துவிடுகிறார்கள் சிலர். இப்படி பழைய நிறுவனத்திற்கே மீண்டும் வேலைக்கு வந்து சேரும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும், என்னென்ன சிக்கல்கள் வரும், அதை எப்படி சமாளிக்கவேண்டும் என்பது குறித்து கெம்பா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டாளர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் விளக்குகிறார்.
''ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தில் இரண்டு காரணங்களுக்காக மட்டும்தான் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார்கள் பலர். உங்களிடம் உள்ள திறமைக்காக பழைய நிறுவனம் உங்களை மீண்டும் வேலைக்கு அழைக்கலாம். அல்லது, வேறு நிறுவனத்தில் உங்களால் திறம்பட செயல்பட முடியாத காரணத்தினால் மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வேலைக்கு நீங்களாகச் செல்லலாம்.

இதில் பதவி உயர்வு ஏதும் இல்லாமல் பழைய நிறுவனத்தில் பழைய பதவியிலேயே வேலைக்குச் சேரும்போது பெரிய பிரச்னை எதுவும் வராது. ஆனால், பதவி உயர்வு கிடைத்து செல்லும்போது பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும். குறிப்பாக, உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் இருந்து நிறைய பிரச்னை வர வாய்ப்புகள் உள்ளன.
பதவி உயர்வு பெற்று போகும் போது உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் வெளியே சென்றுவிட்டு வருபவர்களுக்குதான் அதிக மரியாதை என்றும், இவருக்கே நான்தான் வேலை கற்றுத் தந்தேன் என்றும் பொதுவான ஒரு பேச்சு உருவாகும். இன்று எனக்கே உயரதிகாரியாக வந்திருக்கிறார் என்றும் பேச்சுகள் வரும். இதையெல்லாம் பொதுவாக காதில் வாங்காமல் இருப்பது நல்லது.
உங்களின் திறமை என்ன என்பது நிறுவனத் திற்கு தெரியும். அதனால்தான் உங்களை மீண்டும் வேலைக்குச் சேர்த்துள்ளார்கள். எனவே, உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை
கொஞ்சமும் குறையாதவாறு பார்த்துக்கொள்வது முக்கிய கடமை.
அடுத்து, உங்களுடன் வேலை பார்ப்பவரைத் தனியாக அழைத்து, 'அலுவலகத்தில் நாம் எப்போதுமே நண்பர்கள். ஆனால், நிறுவனத்தில் நான் உனக்கு மேல்அதிகாரி. அதோடு என் திறமையை மீண்டும் நான் இங்கே நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அத்துடன் எனக்கு அதிக சம்பளமும், பதவி உயர்வும் கொடுத்தற்கு காரணம், வெளி நிறுவனங்களில் எனக்கு கிடைத்த அனுபவம், பயிற்சிதான். இதனால் நிறுவனம் என்னிடம் இருந்து அதிக திறமையை எதிர்பார்க்கிறது. அதற்காக நான் அதிகமாக வேலை பார்த்தே ஆகவேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும்’ என்று தாழ்மையாகச் சொல்லிவிடுவது நல்லது. நட்பு வேறு, பணியாளர் உறவு வேறு என்பதைப் புரியவைத்துவிட்டால், யாரும் உங்களை அதிகாரம் செய்பவராக நினைக்க மாட்டார்கள்.
ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தில் மீண்டும் வேலைக்குச் சேரும்போது சில பாசிட்டிவ் அம்சங்கள் உண்டு. அதாவது, அந்த நிறுவனத்தின் பழக்கவழக்கம், நடைமுறைகள் என்ன என்பதெல்லாம் உங்களுக்கு அத்துப்படி யாக இருக்கும். அதேபோல உங்கள் திறமை என்ன என்பதும் நிறுவனத்திற்கு தெரியும். எனவே, உங்களால் முடியாத எந்த ஒரு வேலையையும் உங்களுக்கு அந்த நிறுவனம் தராது. இதனால் தேவை இல்லாத டார்கெட், வேலை நிர்ப்பந்தம் என்பதெல்லாம் இருக்காது.

ஆனால், ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறு ஒரு செக்டாரில் இருக்கும் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு பழைய நிறுவனத்திற்கு திரும்புவதால் உங்களுக்கு சர்வீஸ் குறையும். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பெற்ற பயிற்சியும் வீணாகப் போகும். உதாரணமாக, ஐ.டி. துறையில் வேலை பார்த்த ஒருவர் மார்க்கெட்டிங் துறைக்கு வேலை மாறுகிறார். அங்கு சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் ஐ.டி. நிறுவனத்திற்கே திரும்புகிறார் எனில், இடைப்பட்ட காலத்தில் அவர் பெற்ற பயிற்சியும், சர்வீஸும் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். எனவே, ஒரு செக்டாரை விட்டு இன்னொரு செக்டாருக்குச் செல்லும்முன் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். செக்டார் மாறி, அங்கு ஓரளவு நிபுணத்துவம் பெற்ற பிறகு மீண்டும் செக்டார் மாறுவது புத்திசாலித்தனமல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய நிறுவன மாக இருந்தாலும்கூட அவர்களே அழைத்தாலும், அல்லது நீங்களே வேலை கேட்டுப் போனாலும், அந்த வேலையில் சேரும் முன்பு, எவ்வளவு சம்பளம், என்ன பதவி, சிறப்பு சலுகைகள் என்னென்ன என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வது முக்கியம். இதில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் ஏற்கெனவே நன்கு தெரிந்த நிறுவனத்தில் வேலை என்றாலும் அதைத் தவிர்த்துவிடுவதே நல்லது'' என்று எச்சரித்தார்.
பழைய நிறுவனத்திற்கே திரும்பிவிடலாமா என்று யோசிக்கிறவர்கள் இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு செயல்படுவது நல்லது!