மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் !

ஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் !

பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

ஒரு பிசினஸில் நான்கு நிலைகள் இருக்கும் என்பதைக் கடந்த இதழில் சொன்னேன். இந்த நான்கு நிலைகளில் எப்போது வேண்டுமானாலும்  சிக்கல் வரலாம். இந்தச் சிக்கலைத் தவிர்ப்பது எப்படி?

ஆரம்ப நிலையில் ஒரு தொழில் எப்படியெல்லாம் சிக்கல்களை சந்திக்கும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நமக்கு எந்த பெரிய அனுபவமும் இருக்காது. எல்லாவற்றையும் நாமே பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தொழிலின் போக்கிலிருந்து கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் சரியான நேரத்தில், சரியான இடத்தில், விரைவாக ஸ்ட்ராடஜியைப் புகுத்த வேண்டும். இல்லையென்றால், எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது ஆரம்ப நிலையி லேயே முடங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உணவுகள் மற்றும் காய்கள் ஆறுமாதம் வரை கெடாமல் வைத்திருக்கும் தொழிலில் இறங்கியது. தேவைக்கேற்ப சின்ன சின்ன பாக்ஸ்களில் உணவுகளை அடைத்துவைத்து தேவையானபோது எடுத்து சமைத்துக் கொள்ளலாம் என்பதே இந்தத் தொழிலின் அடிப்படை கான்செப்ட்.

'பாக்ஸில் அடைக்கப்பட்ட உணவு’ என்பது மேற்குலக நாடுகளில் இந்த கான்செப்ட் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.  ஒரு வாரத்திற்கு தேவையானதை சமைத்து ஃப்ரிஸரில் வைத்து, அவ்வப்போது எடுத்து, சூடுபடுத்தி சாப்பிடுவது அவர்களுக்கு பழகிவிட்டது.

ஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் !

ஆனால், மும்பை நிறுவனத்தின் இந்த கான்செப்ட் இந்திய சந்தைக்கு புதிது. இந்திய சந்தையில் இதற்கு எப்படி வரவேற்பு இருக்கும், சந்தையின் அளவு என்ன, எந்த வகையில் சந்தைப்படுத்துவது என்பது குறித்து அதற்கு முன்பு எந்த பாடமும் புள்ளிவிவரமும் அந்த நிறுவனத்திடம் இல்லை. என்றாலும் தைரியமாக தொழிலில் இறங்கிவிட்டது.

நம்மவர்களுக்கு சுடச்சுட சமைத்து சாப்பிடுவதுதான் பிடிக்கும். என்னதான் சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தாலும் வீட்டு வாசலில் கிடைக்கும் காய்கறிகள், கீரைகளை வாங்குவதுதான் ஃப்ரெஷானது என்கிற மனநிலைக் கொண்டவர்கள் நம் மக்கள். இப்படிப்பட்ட மக்கள் உள்ள ஒரு சந்தையை உடைத்து அந்த நிறுவனத்தால் முன்னேற முடியவில்லை. தொழிலில் இறங்கியபின், வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த சந்தை அனுபவத்தை சரிசெய்யவும் அவர்களால் முடியவில்லை. இதன்காரணமாக அந்தத் தொழிலை மேற்கொண்டு தொடர முடியாமல் அந்த நிறுவனம் கைவிட்டுவிட்டது.

ஆரம்பநிலை தொழில்களில் உள்ள சிக்கல்களுக்கு இன்னொரு உதாரணம்,  மைக்ரோ ஃபைனான்ஸ் தொழில். மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற கான்செப்ட் உருவான போது அதற்கு சந்தை குறித்த எந்த புள்ளிவிவரமும் இல்லை. இதற்கு முன்பு ஃபைனான்ஸ் இண்டஸ்ட்ரி என்பது பெரிய நிறுவனங்கள், பெரிய அளவிலான பிசினஸ், கடன் கொடுத்தால் திரும்பப் பெறமுடியும் என்கிற உத்தரவாதம் அல்லது அதற்கு ஈடான அடமானங்கள், சந்தையின் அளவு எல்லாமே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் நடந்து வந்தது.  

சிறிய அளவில் தொழில் செய்பவர்கள், தினசரி சந்தை மற்றும் வாடிக்கையாளர்களை நம்பி தொழில் செய்பவர்களுக்கான பொருளாதாரத் தேவைகள் என்பது கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தது. சின்ன அளவில் உதவி கிடைத்தாலும் அதை வைத்து தொழிலை விரிவு செய்வது அல்லது தொய்வில்லாமல் நடத்த முடியும் என்கிற நிலையில் இவர்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கு தனிநபர்களை நம்பி இருந்தனர். இது ஒரு கட்டத்தில் அவர்களது தொழிலை முடக்கவும் செய்தது.

ஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் !

இதுபோன்ற சூழலில் பங்களாதேஷில் முகமது யூனிஸ் உருவாக்கிய கிராமின் பேங்க் என்கிற மைக்ரோ ஃபைனான்ஸ் கான்செப்ட் சந்தைக்கு புதிது. அவர் கிராமினைத் தொடங்கியபோது அவருக்கு சந்தையின் அளவு என்ன? சந்தையை எப்படி அணுகுவது? எவ்வளவு பேர் இதுபோன்ற பொருளாதாரத் தேவைகளை எதிர்பார்த்து இருக்கின்றனர்? உத்தரவாதம் இல்லாமல் பணம் தந்தால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்குமா? என்பது எதுவும் தெரியாது. தொழிலை ஆரம்பித்தபிறகு கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில், சரியான நபர்களை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில், துரிதமாகச் செயலாற்றியது என பல உத்திகளைப் பயன்படுத்தியதால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது.

இதற்கு பிறகு மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற கான்செப்ட், முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவும் மாறியது. இந்த கான்செப்ட் இந்தியாவிற்கு 90-களுக்கு பிறகு வந்தபோதும் இந்தச் சிக்கல்களைச் சந்தித்தது. அதற்கு பிறகு பொதுத் துறை வங்கிகள் விழித்துக்கொண்டு, இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் தொழிலில் நுழைந்தன. இன்று மைக்ரோ ஃபைனான்ஸ் கான்செப்ட் என்பது சிறிய அளவிலான தொழில்களின் முதுகெலும்பாகவே உள்ளது.

ஆக, நீங்கள் செய்கிற தொழில், நீங்கள் இருக்கும் சந்தைக்கு புதிது எனில், அதை விளக்கிச் சொல்கிற மாதிரியான ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்கவேண்டும்.

ஆரம்பநிலையில் என்ன மாதிரியான தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது என்பதிலும் சிக்கல்கள் வரலாம்.

ஒரு தொழிலின் ஆரம்பநிலையில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் யாவும் உங்களை மட்டுமே சார்ந்தது. இதற்கு முன்பு பரிசோதித்து பார்க்கப்படாத தொழில்நுட்பம், உங்கள் ஊரில் சக்சஸ் ஆகுமா என்பது நடைமுறையில் பரிசோதித்து பார்க்கும்போதுதான் தெரியும். உங்கள் தொழிலில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் எதுவும் இல்லாத நிலையில், அனைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் மட்டுமல்ல, தொழிலில் நுழைவதற்கு முன்னுள்ள தடைகள், குறுகிய சந்தை, துணைத் தொழில்கள், தொழிலையே தவறாகப் புரிந்துகொள்வது, நிதித் தேவை என பல சிக்கல்களும் ஆரம்ப நிலையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை என்ன, எப்படி அவற்றுக்கு ஏற்ற ஸ்ட்ராடஜிகளை புகுத்தவேண்டும் என்பதையும் வரும் வாரத்தில் பார்ப்போம்.

(வியூகம் அமைப்போம்)