மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு

கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

நீரை. மகேந்திரன்

மனை பார்க்கலாம் வாங்க!

##~##

சொந்த வீட்டின் முதல் முயற்சி மனை வாங்குவதுதான். மனை வாங்குவது இந்த காலத்தில் மிக மிக சுலபம்; ஆனால், கொஞ்சம் கஷ்டமானதும்கூட. காலையில் டி.வி.யை ஆன் செய்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஆக்ரமிப்புதான். சிறுநகரங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் நம்மை கைப்பிடித்து இழுத்துப்போகாத குறைதான். இதுதவிர பத்திரிகைகள், போன் என எல்லா வகைகளிலும் நம்மைச் சுற்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் அழைத்துக்கொண்டே இருக்கின்றன.

பயண வழிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டிருக்கும் மனைப் பிரிவுகளைப் பார்த்திருப்போம். வண்ண வண்ண அலங்காரங்கள், கொடிகள், புத்தம் புதிதாகப் போடப்பட்ட சாலைகள், சீராக நடப்பட்டுள்ள கற்கள் என எல்லா ஏற்பாடுகளும் நம்மை கவர்வதாகவே இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, அக்கம்பக்கம் குடியிருப்போ, பேருந்து நிறுத்த வசதிகளோ இல்லாத இடத்தில் இடத்தை வாங்கி என்ன செய்வார்கள் என்று நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால், ஊரின் வளர்ச்சியைப் பொறுத்து இரண்டு, மூன்று வருடங்களில் அந்த இடம் பிக்அப் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்த இடத்தில் அது வரப் போகிறது, இந்த இடத்தில் இது வரப் போகிறது என பலவகையிலும் நம்பிக்கை கொடுத்து மக்கள் தலையில் கட்டிவிடவும் வாய்ப்புள்ளது. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், கொஞ்சம் உஷாராக இல்லை எனில் நாம் எளிதாக ஏமாந்துவிட வாய்ப்புள்ளது.

சொந்த வீடு

மனையைத் தேர்ந்தெடுக்கும்போது பல முக்கியமான விஷயங்களைக் கருத்தாக கவனிக்க வேண்டும். மனை இருக்கும் இடம் எதிர்காலத்தில் என்ன மாற்றங்களைச் சந்திக்கும் என்பதைக் கட்டாயம் பார்க்கவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இருக்கு என்கிற மாதிரியான இடங்களையோ, சுற்றுச்சூழல் பிரச்னைகள் அதிகம் உள்ள இடங்களையோ தேர்ந்தெடுப்பது கூடாது.

மனை வாங்கும் முடிவை எடுத்த பிறகு, புதிய மனைப் பிரிவில் வாங்கப் போகிறோமா, அல்லது மனைப் பிரிவில் இல்லாத இடத்தை வாங்கப் போகிறோமா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். தவிர, நீங்கள் வாங்கும் மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? எந்த வகையில் அப்ரூவல் வாங்கி வைத்திருக்கின்றனர்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

கையில் கொஞ்சம் பணமிருக்கிறது என்றோ அல்லது உடனடியாக வீடு கட்டவேண்டிய அவசியமிருக்கிறது என்றோ அவசரப்பட்டு மனை வாங்கிவிடக்கூடாது. மனையைப் பார்த்துவிட்டு வந்தவுடன் அந்த மனை மீது மட்டுமே குறியாக இருக்கக் கூடாது. நமது தேவையின் அடிப்படையில் தெளிவாக, ஒன்றுக்கு பத்து இடங்களைப் பார்த்து, அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்தப் பகுதியின் மண்தரம், நிலத்தடி நீர், வடிகால் வசதி, அக்கம்பக்கம் உள்ள தொழிற்சாலைகள், எதிர்காலத்தில் வரவிருக்கும் திட்டங்கள் என எல்லாவற்றையும் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை.

சென்னை பூந்தமல்லியைத் தாண்டி ஒரு கிராமம். மனைப் பகுதியைச் சுற்றி காம்பவுன்ட் கட்டி எல்லாம் பக்காவாக இருந்தது. புரோக்கர்கள் சொன்ன தொகையும் ஓகே. ஆனால், அக்கம்பக்கம் விசாரித்தபோது மழைக்காலத்தில் வெள்ளநீர் சூழ்ந்துகொள்கிறது. இரண்டு வருடங் களுக்கு முன்பு அருகாமையிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி உடைந்து வெள்ள நீர் சூழ்ந்து படாதபாடுபட்டோம். இது தெரியாமல் இந்த இடத்தை வாங்கி குடிவந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டுச் சொன்னார்கள்.  முன்பின் பழகாத ஏரியாக்களில் இடம் வாங்கும்போது இதுபோன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

அவசரப்பட்டோ, பலவிதமான ஆதாரமற்ற பேச்சுக்களை நம்பியோ மனை வாங்கி வீடும் கட்டி அவதிப்படுகிறவர்கள் பலரை நம் அனுபவத்தில் பார்த்திருப்போம். மணிகண்டனின் கதையைக் கேளுங்கள்...

தனியார் நிறுவனமொன்றில் நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்யக்கூடிய பொறுப்பில் இருப்பவர் மணிகண்டன். எப்படியாவது சொந்தமாக வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்ற ஆசையில் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் புரோக்கர்களை அழைத்துக்கொண்டு புறநகர்களில் மனை தேடினார். இவருடைய அவசரத்தையும், நேரமின்மையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட புரோக்கர் ஒருவர், 'சூப்பரான ஏரியா சார்; இந்த விலைக்கு கிடைக்கிறது கஷ்டம், உடனே அட்வான்ஸ் தந்துடுங்க. நிறையபேர் போட்டி போடறாங்க சார்...’ என்று சொல்ல, விட்டால் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து மனையை வாங்கிவிட்டார்.

வங்கிக் கடன் வாங்கி வீட்டைக் கட்டி குடியும் வந்துவிட்டார். 2006-ல் பெய்த தொடர் மழையின்போதுதான், தான் ஏமாந்துபோய்விட்டோம் என்பதை அவர் தெரிந்துகொண்டார். ஏரிக்கு நடுவே வீடு இருப்பதுபோல கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கும் தண்ணீர் சூழ்ந்து கொண்டிருந்தது. அக்கம்பக்கம் ஏரியாவில் விசாரிக்கக்கூட அவகாசம் தராமல் மனையைத் தலையில் கட்டிவிட்டி கமிஷன் வாங்கிக்கொண்டு போய்விட்டார் புரோக்கர். ஆனால், நஷ்டமும் கஷ்டமும் மணிகண்டனுக்குத்தான். இதுபோல மனையைப் பற்றி நாம் விசாரிக்கவோ, ஆலோசிக்கவோ தேவையான அவகாசத்தைத் தராமல் புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் உஷாராகிவிடுவது நல்லது. பொதுவாக ஒரு மனையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்...

மழைக் காலத்தில் பார்வையிடுங்கள்!

மனை வாங்குவது என்று திட்டமிட்டுவிட்டால், மனையைப் பார்ப்பதற்கு மழைக்காலம்தான் பொருத்தமானது. கோடை காலத்தில் பார்ப்பது சரியானதல்ல. மழைக் காலத்தில் பார்வையிடும்போது அந்த இடத்தில் தண்ணீர் தேங்குகிறதா, மண்வகை எப்படி உள்ளது என்று தெரிந்துவிடும். மழை நீர் இரண்டு மூன்று நாட்களில் வடிந்துவிடக்கூடிய அல்லது உறிஞ்சும் தன்மையுடைய மண் வாகாக இருக்க வேண்டும். மண் வகையைப் பொறுத்துதான் நாம் கட்டப்போகும் கட்டடத்தின் அஸ்திவாரம் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எனவே களிமண், சுக்கான், பாறை அதிகமாக உள்ள இடங்களில் மனை வாங்குவதைத் தவிர்க்கலாம். அல்லது அந்தந்த ஊரின் நிலைமைகளுக்கு ஏற்ப இதில் முடிவெடுக்கலாம்.

சொந்த வீடு

நிலத்தடி நீர்!

நிலத்தடி நீர் வளம் பார்த்துதான் இடத்தை முடிவு செய்ய வேண்டும். மனை விற்பவர்கள் தரும் எந்த உறுதிமொழியையும் இந்த விஷயத்தில் நம்ப வேண்டாம். அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் அல்லது அந்த நிலத்தில் ஏற்கெனவே விவசாயம் செய்திருந்தால் அவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வது முக்கியம். மனைப் பகுதியில் ஏற்கெனவே குடிநீர் இணைப்புகள் இருந்தால் அந்த தண்ணீரை குடித்துப் பார்க்க வேண்டும். எத்தனை அடியில் தண்ணீர் கிடைக்கும், அருகில் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

சீரான அமைப்பு!

மனையின் நான்கு எல்லைகளும் சீரான அளவுகளோடு பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். முதன்மை சாலை 40 அடி அல்லது குறைந்தபட்சம் 30 அடியாவது இருக்கவேண்டும். உட்சாலைகளுக்கு குறைந்தபட்சம் 23 அடி அல்லது 20 (பஞ்சாயத்து அப்ரூவல்)அடியாவது விடப்பட்டிருக்கவேண்டும். மனையில் போடப்பட்டுள்ள சாலைகள் தரைமட்டத் திலிருந்து உயர்வாக அமைக்கப்படிருக்க வேண்டும்.

மனைகள் தாறுமாறான அளவுகளோடு அமைந்திருக்கூடாது. 1 கிரவுண்ட் (2,400 சதுர அடி) எனில்  60X40 என செவ்வக வடிவில் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். 1,800 சதுர அடி என்றால் 60X30 என்றும், 1,200 சதுர அடி என்றால் 40X30 என்கிற அளவிலும் அமைந்திருக்கவேண்டும்.

சொந்த வீடு

மனைப் பிரிவில் பூங்கா, விளையாட்டுத் திடல், சமூக கூடங்களுக்கான பொதுவான இடங்கள் முறையாக விடப்பட்டிருக்க வேண்டும். அப்ரூவல் வாங்கிய பிறகு இந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கக் கூடாது. பொதுவாக அரசின் வழிகாட்டு விதிமுறைகள் மீறாத மனைப் பிரிவாக இருக்கவேண்டும்.

சாலை வசதி !

புறநகர்ப் பகுதியில் மனை பார்க்கிறோம் எனில், அதிகபட்சம் 15 - 30 நிமிடங்களுக்குள் நகரத்துக்குள் செல்லும் தூரத்திற்குள் இருக்க வேண்டும். பேருந்து, ரயில் வசதிகள் அடிக்கடி இருக்கவேண்டும். மனை அமைந்துள்ள இடம் குடியிருப்பாக வளரும் பகுதியாக இருக்க வேண்டும். முதன்மை சாலையிலிருந்து செல்ல வேண்டும் என்றால் இணைப்பு சாலைகள் முறையாக இருக்க வேண்டும். நமது தேவைகளுக்கு ஏற்ப அலுவலகம், கல்லூரி போன்றவற்றை இணைக்கும் போக்குவரத்து வசதி உள்ள பகுதிகள் சிறப்பானது.

மனையைப் பற்றி அறிந்துகொள்ள குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது நேரில் சென்று பார்க்கவும். வேலைநாட்களில் செல்லாமல் விடுமுறை நாட்களை இதற்கு ஒதுக்கவேண்டும். முதல்முறை மனை பார்க்க செல்லும்போது நிறுவனங்கள் சொல்லும் அனைத்து விவரங்களையும் குறித்துக்கொண்டு, அதற்கடுத்த முறை தனியாகச் சென்று பார்த்து வரவேண்டும். அப்போதுதான் உண்மை விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

சொந்த வீடு

இதுபோன்ற அடிப்படை விஷயங்களை மனை பார்க்கும்போது கவனிக்க வேண்டும்.

'சார் சைட் விசிட்... சும்மா வந்து பார்த்துட்டு போங்க’ என்று யார் அழைத்தாலும், நாம் செல்லும்போது இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்த விலையில் மனை கிடைக்கிறது என்பதற்காக நகரத்தைவிட்டு தொலைவில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. குடும்பத்தின் அனைவரது தேவைகளும் என்ன, எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தால் பொருத்தமாக இருக்கும் என எல்லோரது விருப்பத்தினையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களோடு உங்கள் குடும்பமும் அந்த வீட்டில் காலகாலத்துக்கும் வசிக்கப் போகிறது. அவர்களுக்கும் இந்த சந்தோஷம் கிடைக்கட்டுமே!

(கனவு நிறைவேறட்டும்)
படங்கள்: கே.குணசீலன், வீ.சிவக்குமார்