சமாளிக்கும் உத்திகள் - ஆரம்பநிலை சிக்கல்கள்...
பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை
##~## |
ஆரம்ப நிலை தொழில்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் எப்படியிருக்கும் என்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம், மொபைல் தயாரிப்பு மற்றும் சேவை தொழிலை குறிப்பிட முடியும்.
இந்தியா போன்ற நாடுகளில் மொபைல் தொழில் இன்னும் ஆரம்ப நிலை தொழில்தான் என்கிற அளவிற்கு சந்தை வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.
அமெரிக்காவில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு மொபைல் என்கிற சாதனத்தின் பயன்பாடு வந்துவிட்டாலும், இந்தியாவில் மொபைல் சேவை பரவலாக மக்களுக்கு அறிமுகமானது 1995-க்கு பிறகுதான். ஆண்டனா வைத்த சின்ன செங்கல் சைஸ் போன், ஒரு நிமிடம் பேசுவதற்கு சுமார் 20 ரூபாய் கட்டணம், அவுட்கோயிங் கால் மட்டுமல்ல, இன்கம்மிங் கால் வந்தாலும் கட்டணம்... இதுதானே நம் செல்போனின் ஆரம்ப காலகட்டம்.
மக்களிடத்தில் பரவலான பயன்பாடு இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் மொபைல் கட்டணங்கள் அதிகமாக இருந்தது. கட்டணம் அதிகமாக இருந்த காரணத்தால் அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே மொபைல் பயன்படுத்தினார்கள். அதிலும் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய் தந்து பேசும் அளவிற்கு பொருளாதார வசதி இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லோரிடத்திலும் கிடையாது. எனவே, மொபைல் சாதனம் அப்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவே இருந்தது.

தவிர, ஒருவரிடம் செல்போன் இருந்தால் மட்டும் போதாது. பலரிடமும் இருந்தால்தான் போன் செய்து பேசமுடியும். இந்த சிக்கலை சரியாக புரிந்துகொண்ட ரிலையன்ஸ் நிறுவனங்கள் அதற்கான வழிமுறையையும் உருவாக்கியது. அதுதான் சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே சர்வீஸ் வைத்திருக்கும் இரண்டு பேர் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் சொன்னதால், செல்போன் என்னும் சாதனத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. சி.டி.எம்.ஏ. சாதனங்களில் வேறு சேவை நிறுவனங்களின் சிம்கார்டு பொருத்திக்கொள்ள முடியாது என அதன் சேவை சுருங்கியது என்றாலும், சி.டி.எம்.ஏ. சேவையால் செல்போன் என்கிற சாதனம் பரவலாக எல்லோருக்கும் கிடைத்தது. ஆனால், ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க பல வேலைகளை செய்தன.
மொபைலை பரவலாக பலரும் பயன்படுத்தத் தொடங்கியபிறகு நிறுவனங்கள் நினைத்ததும் நடந்தது. ஆனால், எதிர்பார்த்திராத இன்னொரு விநோதமும் இந்திய சந்தையில் நிகழ்ந்தது. அதுதான் மிஸ்டுகால்! இப்போதுகூட மிஸ்டுகால் தருவதில் சில நூதனமான டெக்னிக்கு களை பயன்படுத்தி வருகிறோம். பேசவேண்டிய தேவையில்லை, உணர்த்திவிட்டால் போதும் என்கிற

நேரங்களில் மிஸ்டுகால் தந்தனர் நம்மவர்கள். நாம் எதிர்பார்த்த ஒரு விஷயம், சந்தையில் வேறொன்றாக புரிந்துகொள்ளப்படும்போது தொழிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆதாயம் குறைந்துவிடும். இந்திய சந்தையில் இந்தச் சிக்கல்களை எல்லாம் மொபைல் தொழில் சந்தித்தது.
இதேபோலத்தான் எஸ்.எம்.எஸ். அனுப்புகிற பழக்கமும். மொபைல் சாதனத்தின் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் உலக அளவில் இந்தியாதான் முன்னணி நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் எஸ்.எம்.எஸ். பயன்பாடு என்பது வெகுகுறைவு. எனவே, சந்தையைப் புரிந்துகொண்டு, சந்தையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களுக்கு ஏற்ப நம் உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
செல்போன் என்பதே பேசத்தான். ஆனால், வேறு சில சேவைகளை அளிப்பதன் மூலமும் நிறைய வருமானம் ஈட்டமுடியும் என்பதை செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் கண்டுகொண்டன. போன் செய்தால் கேட்கும் வழக்கமான ஓசைக்குப் பதிலாக, வாடிக்கையாளர் விரும்பும் பாடல்களை வழங்குவது, சினிமா நடிகர், நடிகை படங்களை வழங்குவது, செய்திகளை வழங்குவது இதன் அடுத்த கட்டமாக மொபைல் சாதனத்தின் வழியிலான இணையதொடர்பு என இந்தத் தொழிலின் மூலமான துணை வருமான வாய்ப்புகளையும் நிறுவனங்கள் உருவாக்கிக்கொண்டது.
ஒரு நிமிடம் பேச 20 ரூபாய் என்று ஆரம்பித்த செல்போன் சேவை, இன்று அனைவருக்கும் எட்டும் ஒரு தொழில்நுட்பமாக மாறிவிட்டது.
சரி, ஆரம்பநிலை தொழில்கள் இதுபோன்ற சந்தை வாய்ப்புகளைத் தவறவிட்டால் என்ன நடக்கும்? இதற்கும் மொபைல் சாதனத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
மொபைல் சேவை அறிமுகமானபோது, இந்திய சந்தையில் மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்தது நோக்கியா நிறுவனம். சுமார் 75 சதவிகித சந்தையை வைத்திருந்தது. பெரிய போட்டியாளர்கள் எவரும் இல்லாததால் நோக்கியா தருவதுதான் போன் என்ற நிலைமை இருந்தது. ஆனால், இன்றைய நிலைமையில் நோக்கியாவின் இந்திய சந்தை பங்களிப்பு 25 சதவிகிதம்தான். நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையை சரியாகப் புரிந்து கொள்ளாததே இதற்கு காரணம்.

ஆரம்பத்தில் நோக்கியா போன்தான் பெஸ்ட் என்கிற நிலைமை இருந்தபோது விலை அதிகமான போன்களை மட்டுமே அது தயாரித்தது. ஆனால், சந்தை விரிவடைந்தபோது அதன் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடான இந்தியாவில் மிக குறைந்த விலைகொண்ட போன்களின் தேவை அதிகரித்தது. ஆனால், நோக்கியா குறைந்த விலை போன்களை தயாரிக்கவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சீன நிறுவனங்கள் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டன.
அதேபோல இணைய வழி சேவைகளைத் தரும் ஸ்மார்ட் போன் துறையிலும் நோக்கியா சந்தையை இழந்தது. விலை அதிகம் உள்ள மாடல்களைத் தயாரித்தாலும், நோக்கியா போனில் கிடைக்கும் வசதிகளைவிட அதிகமாக ஆப்பிள், சாம்சங் போன்களில் கிடைப்பதால் இந்த சந்தையிலும் நோக்கியா வின் ஏகபோகம் கைவிட்டுப் போனது. அதாவது, போட்டியாளர் உருவாகும் நிலைமையில் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் போட்டி. இதற்கு சந்தையைக் கவனித்துக்கொண்டெ இருக்கவேண்டும். எதிர்காலத்தைக் கணித்துக்கொண்டே இருக்க வேண்டும். முதலில் யார் கைப்பற்றுவது, அதிலும் அதிகமாக யார் கைப்பற்றுவது என்பதுதான் முக்கியம்.
ஆரம்பநிலை தொழிலுக்குரிய அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் மொபைல் போன் நிறுவனங்கள், புதிதாக வேறு என்ன தரலாம் என்று யோசித்துகொண்டே இருக்க வேண்டும். தகவல் பரிமாற்றம் என்கிற கட்டத்தைத் தாண்டி அது ஒரு ஃபேஷன் அக்சசரிஸ் என்கிற கருத்து உருவாகியுள்ளது. இதுதவிர, துணை சேவைகளாக மீனவர்களுக்கு கடலில் இருந்தபடியே சந்தையைத் தொடர்பு கொள்ளும் வசதி, மருத்துவத் துறையில், கல்வித் துறையில் என புதிய வாய்ப்புகளைக் கொண்டது.
சந்தையில் புதிய புதிய தேவைகளை உருவாக்குவதும், சந்தையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களைத் தொகுத்து, அதிலிருந்து உத்திகளை உடனுக்குடன் மாற்றிக்கொள்வதை ஆரம்ப நிலை தொழில்கள் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க வேண்டும்.
(வியூகம் அமைப்போம்)