மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு

கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

##~##

 மனைத் தேர்வு... அவசரம் வேண்டாம் !

பொதுவாகவே ரியல் எஸ்டேட்காரர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள். எந்த விஷயத்தை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதை அறிந்து, அதை மட்டும் பக்காவாகச் செய்து வைத் திருப்பார்கள். இந்த மேக்-அப்களைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது. தப்பித் தவறி மயங்கினால், மனை வாங்கிய பிறகு சிக்கல் வந்தால் நாம்தான் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி நடைமுறையில் நாம் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திப்போம் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சுந்தரமூர்த்தி திருப்பூரில் பின்னலாடை நிறுவனமொன்றில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டு சிறிய அளவில் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கினார். ஆரம்பத்தில் பிசினஸ் நன்றாக இருக்கவே, திருப்பூரிலேயே வீடுகட்ட முடிவெடுத்து அவிநாசி பக்கம் இடத்தையும் வாங்கி போட்டுவிட்டார்.

அடுத்தடுத்த வருடங்களில் பின்னலாடை தொழிலில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, தொழிலையே கைவிட வேண்டியதாகிவிட்டது. வாங்கிய இடத்தை விற்றுவிடலாம் என்றால், வாங்கிய விலையைவிட குறைவான விலைக்குத்தான் கேட்கிறார்கள் என்று சும்மாவே போட்டுவைத்துள்ளார்.

இது ராமசுந்தரத்தின் கதை. நீதித் துறையில் பணியாற்றுகிறார். சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலைநிமித்தம் பல்வேறு ஊர்களில் அரசுக் குடியிருப்புகளிலேயே காலத்தைக் கழித்தவர், கடைசியாக இப்போது பணியாற்றிக்கொண்டிருப்பது திருவாரூரில். வந்த இடத்தில் ஊர் பிடித்துவிட, நகரத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு கிராமத்தில் இடத்தை வாங்கிவிட்டார். எப்படியும் இந்த வருடத்திற்குள் வீடு கட்டும் வேலையைத் தொடங்கிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு மீத்தேன் வாயுத் திட்டத்தின் மூலம் வந்தது அதிர்ச்சி.

சொந்த வீடு

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு அதிகளவில் இருப்பதால் அந்தப் பகுதிகள் சமீப காலங்களில் அதிக அளவில் செய்திகளில் அடிபடுவதைக் கவனித்திருக்கலாம். குறிப்பாக, திருவாரூர் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் இதற்கான ஆய்வு வேலைகள் நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட மீத்தேன் வாயு எடுப்பதற்காக மத்திய அரசிற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்கள் முடிந்துள்ள நிலையில் இடம் கையகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. ஆசை ஆசையாக வாங்கிய இடம் அரசாங்கத் தேவைக்கு கையகப்படுத்தப்படலாம் என்கிற நிலையில் என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்.

கடலூரிலிந்து சிதம்பரம் வழியில் ஒரு கிராமம். இப்போதும் ரியல் எஸ்டேட்காரர்கள் மனைப் பிரிவுகள் போட்டு வைத்திருந்தாலும் வாங்குவதற்குத்தான் ஆளில்லை என்கிறார்கள். ''கடலுக்கு பக்கத்துல இருந்தாலும் நிலத்தடி நீர் இளநீர் மாதிரி இருக்கும். அதைப் பார்த்துட்டு தான் இங்க இடம் வாங்கி வீடு கட்டலாம்னு முடிவெடுத்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கெமிக்கல் தொழிற்சாலை வந்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது மட்டுமில்லை; கழிவு நீரை அப்படியே தேக்கிவச்சதினால இப்ப நிலத்தடி நீர் படுமோசமா மாறிவிட்டது. குடிக்கவே முடியலை, ஏன்டா இங்க குடிவந்தோம்னு இருக்கு'' என்கிறார் கடலூர் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணியாற்றும் சிவமூர்த்தி.

சொந்த வீடு

தூத்துக்குடி மாநகராட்சி, துறைமுகம், விமான நிலையம், தொழில்நகரம் என பல முகங்களைக் கொண்டிருந்தாலும் புறநகர விரிவாக்கம் என்பது குறைவாகவே உள்ளது. காரணம், புறநகரப் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் வளரவில்லை. இங்குள்ள ஆசிரியர் காலனியை ஒட்டிள்ள பகுதிகள்தான் பெரும்பான்மையான மக்களின் தேர்வாக உள்ளது. இந்தப் பகுதியில் புதிய மனைப்பிரிவுகள் இல்லையென்றாலும், இரண்டாவது, மூன்றாவது நபர்களைத் தாண்டி மறுவிற்பனை என்கிற வகையில்தான் மனை விற்பனை நடந்து வருகிறது.

இந்தப் பகுதியில் குடியிருப்புகள் வளர்ந்து கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆலைகளிலிருந்து வரும் புகைக்கழிவு களால் அவதிபடுகிறார்கள் மக்கள். இந்த ஏரியாவுக்கு வரும்போது இந்தச் சிக்கல் இல்லை. புதிது புதிதாக வரும் தொழிற்சாலைகளின் புகைக்கழிவுகளால் அவதிபடுகிறோம். துணிகளை உலர்த்தி காயவைத்தால் சாம்பல்

சொந்த வீடு

படிந்துவிடுகிறது. ஜன்னல்களை மூடியே வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் இந்தப் பகுதியில் குடியிருக்கும் சாம்பசிவம்.

இவை உதாரணங்கள் அல்ல, நடைமுறை அனுபவங்கள். எல்லாம் பிரமாதமாக பொருந்திவந்த மனைகள்தான். ஆனால், நடைமுறையில் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய முடியும், நடப்பதுதான் நடக்கும் என்று சமாதானம் அடைந்துகொள்வதைவிட கொஞ்சம் முன்னோக்கி யோசிக்க வேண்டும்.  

ஒரு பக்கம் இதுபோன்ற சிக்கல்கள் உருவாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அந்தப் பிரச்னைகள் பூதாகாரமாக வடிவம் எடுப்பதற்குள் மனைகளை விற்றுவிட வேண்டும் என்று பல ரியல் எஸ்டேட்காரர்கள் சலுகைகளை அள்ளிவிட்டு அந்த இடங்களை நம் தலையில் கட்டிவிடவும் வாய்ப்புள்ளது.

''சார், சைட் சீயிங்தான்... சும்மா நீங்க வந்து பார்த்துட்டு போங்க, வேன் நாங்களே அரேஞ்ச் பண்றோம்'' என்று வாய் மணக்க மணக்க கூப்பிடுவார்கள். நம்மோடு சேர்த்து வேறு நான்கைந்து பேரையும் அதே வேனில் கூப்பிட்டிருப்பார்கள். சைட்டுக்கு சென்றதும் அங்கு ஏற்கெனவே ஏழெட்டு பேர் நின்றுகொண்டிருப்பார்கள். இந்தப் பரபரப்பில் ''சார், கைவசம் நாலே நாலு ப்ளாட்தான் இருக்கு. இப்ப புக் பண்ணிட்டா ஆஃபர் கொடுக்கிறோம். பத்திரப்பதிவு செலவு எங்களோடது. டாக்குமென்ட் சார்ஜ் கிடையாது'' என்று நாம் மேற்கொண்டு யோசிக்க முடியாதபடிக்கு பேசுவார்கள் புரோக்கர்கள்.

சொந்த வீடு

இடம் பார்க்க வந்தவர்களில் இரண்டு பேர் இவர்கள் செட்டப் செய்த ஆளாக இருப்பார்கள். ''ஆமா சார்... பக்கா இடம், அதோ, அங்கதான் அந்த ஃபேக்டரி வரப்போகுது, அது வந்தா இந்த இடத்தோட மதிப்பே தனி சார். நான் ரெண்டு ப்ளாட் புக் பண்ணிட்டேன்'' என்று செட்டப் ஆட்கள் நம்மை உசுப்பேற்றுவார்கள். இதுபோன்ற விற்பனை டெக்னிக்குகளில் எல்லாம் நாம் சிக்கிவிடக் கூடாது.  

அந்த மனைப் பகுதியிலிருந்து எவ்வளவு தூரத்தில் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன? அவர்கள் சொல்கிற மாதிரி எந்த நிறுவனம் தொழிற்சாலை அமைக்கப் போகிறது? அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் போன்றவற்றை  நிதானமாக யோசிக்க வேண்டும். அருமையான இடம் உடனே வாங்க வேண்டும் என்றோ அல்லது இந்த மனை நம் கைவிட்டுப் போய்விடுமோ என்கிற சபலமோ ஏற்படக்கூடாது. நீங்கள் இரண்டு மனதோடு இருப்பது தெரியவந்தால் எந்த இடத்தையும் உங்கள் தலையில் கட்டிவிட முடியும் என்று முடிவு செய்துவிடுவார்கள். அடிப்படை தகவல்களைக் கேட்டுக்கொண்டு, வீட்டில் கலந்துபேசி முடிவு எடுக்கணும் என்று சொல்லிவிட்டு வருவதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் யோசிப்பதற்கும், விசாரிப் பதற்கும் அவகாசம் எடுத்துக்கொள்ள முடியும்.  

சுழி பார்த்து மாடு வாங்கணும்; அப்பதான் உழவுக்கு உதவும் என்பது கிராமத்து விவசாயிகளின் நடைமுறை அனுபவம். அதுபோலத்தான் மனை பார்ப்பதிலும் சில நெளிவு சுளிவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நெளிவு சுளிவுகளில் அசட்டையாக இருந்துவிட்டால் பின்னாட்களில் நஷ்டப்படப் போவதும் கஷ்டப்படப்போவதும் நாம்தானே!  

எனவே, நாம் சில முக்கியமான விஷயங்களிலும் தெளிவடைந்துகொள்ள வேண்டும். வாங்கப்போகும் மனையை அரசாங்கம் கையகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதா? அதை எப்படி தெரிந்துகொள்வது? அந்த இடம் குடியிருப்புக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம்தானா? குடியிருப்புக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம்தான் என்றாலும், வசிப்பதற்கு ஏதுவான சூழல் உள்ளதா? என மனை பார்ப்பதில் நாம் கவனிக்கத் தவறும் விஷயங்கள் ஏராளம். இவைகளையும் கவனித்து மனை வாங்கினால்தான் நிம்மதி நீடிக்கும்.

(கனவை நிஜமாக்குவோம்)

நீரை. மகேந்திரன்
படங்கள்: வீ.சிவக்குமார்.