மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வளர்ச்சி நிலைத் தொழில்கள்!

வளர்ச்சி நிலைத் தொழில்கள்!

 பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

ஆரம்ப நிலையில் உள்ள தொழில்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள், அதற்கு பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த வாரம் வளர்ச்சி நிலையில் உள்ள தொழில்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் அதற்கு பயன்படுத்த வேண்டிய யுக்திகள் குறித்துப் பார்ப்போம்.

வளர்ச்சி நிலையில் தொழில் எப்படி இருக்கும்? அதாவது, நமது தயாரிப்புகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. அதன் மூலம் எதிர்பார்த்த லாபம் வருகிறது என்பதுபோன்ற இளமைத் துடிப்பான காலகட்டம் இது. இந்தக் காலகட்டத்தில் நமது தயாரிப்புகள் சரியான நேரத்தில் தங்குதடையின்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். விளம்பரங்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் என எல்லா மட்டத்திலுமான உறவுகளை சரியான வகையில் கையாளத் தெரியவேண்டும். உற்பத்தியை அதிகரிப்பது, புதுமைகளைப் புகுத்துவது என்பது போன்ற முயற்சிகளைக் கணக்கில்கொண்டு நமது பிசினஸ் தந்திரங்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட முடியாத நிறுவனங்கள் அடுத்தடுத்த நிலைகளில் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

வளரும் நிலையில் தடையில்லாத விநியோகம் மிக முக்கியம். எந்த இடத்தில் சந்தையின் தேவை அதிக அளவில் உள்ளது என்பதை அறிந்து அங்கு விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்கேற்ப தொழிற்சாலைகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். அதாவது, சந்தை விரிவடைய விரிவடைய அதன் தேவைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு பக்கம், சந்தையின் தேவைகளை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டியது அவசியம். விளம்பரங்கள், விநியோகஸ்தர்களை ஊக்கப்படுத்துவது போன்ற உத்திகளை இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டும்.

வளர்ச்சி நிலைத் தொழில்கள்!

ஏனென்றால், இந்த நிலையில் தொழில் சந்திக்கும் முக்கியமான நெருக்கடி புதிது புதிதாகப் போட்டியாளர்கள் உருவாவதுதான். தொழிலில் முதன்முதலில் இறங்கிய நபர் நீங்களாக இருக்கலாம். அதிகபட்ச சந்தையை கையில் வைத்திருக்கலாம். ஆனால், தொழிலுக்கு என்று சந்தை உருவானபின் நீங்கள் மட்டுமே ராஜாவாக இருந்துவிட முடியாது. அது போட்டிகள் நிறைந்த மைதானமாகிவிடுகிறது. சந்தை போட்டியைச் சமாளிக்க உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

90-களில் டிவி என்றால் அது பி.பி.எல். டிவிதான். கணிசமான சந்தையை அது கையில் வைத்திருந்தது. டிவி என்கிற சாதனத்தின் மீது மக்களின் மோகம் அதிகரித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஏற்பட்ட பொருளாதாரத் தளர்வைப் பயன்படுத்தி இந்திய டிவி சந்தைக்கு வந்தன சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள். பி.பி.எல் நிறுவனத்தால் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. 2000-த்தில் பி.பி.எல். நிறுவனத்திற்கு சந்தையில் வேலையே இல்லாமல் போனது. சந்தையை உருவாக்கியது நீங்கள், வளப்படுத்தியது நீங்கள் என்றாலும் போட்டியாளர்கள் கைகளில் போய்விடும் சாத்தியம் உள்ளது.

வளர்ச்சி நிலைத் தொழில்கள்!

அதுபோல ஆர் அண்ட் டி என்று சொல்லப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் வேலைகளும் இந்தக் காலகட்டத்தின் உயிர்நாடியாக உள்ளது. புதிய புதிய முயற்சிகள், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்துவது, போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பது, புதிய சந்தை வாய்ப்பை உருவாக்குவது என முயற்சிகள் செய்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு போன் தயாரிக்கிறீர்கள் என்றால் அதன் அடிப்படை தேவை தொடர்புகொள்வதுதான். ஆனால், அதை இளைஞர்களைக் கவர்வதுபோல, பிசினஸ் கிளாஸ் மக்களுக்குத் தேவையானதுபோல, வயதானவர்கள் பயன்படுத்துவதுபோல கொடுப்பது என பல செக்மென்ட்களை பிரித்துக்கொள்ள முடியும்.  பல வெரைட்டிகள் கொடுக்க முடியும். எனவே, வளர்ச்சி நிலை காலகட்டத்தில் ஆர் அண்ட் டி முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், இன்னொரு பக்கம் நினைத்துப் பாருங்கள்... முதன் முதலில் ஒரு ஊருக்கு பாதை அமைத்துச் செல்கிறீர்கள். எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள்? பல தடை களைத் தாண்டிதான் ஒரு பாதை உருவாகியிருக்கும். ஆனால், உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு அந்த சிரமங்கள் இருக்காது. அதுபோலத்தான் சந்தையும். தொழிலை நிலைநிறுத்த, சந்தையை உருவாக்க எல்லா செலவுகளையும் நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு பின்னால் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு எந்த செலவுகளும் இல்லை. அதனால் அவர்கள் குறைந்த விலைக்கு தயாரிப்புகளைக் கொடுக்க முடியும். எனவே, இதுபோன்ற ஃபாலோயர்களைச் சமாளிக்க உதவும் யுக்திகளையும் கொண்டிருக்க வேண்டும்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கணினி மென்பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனம்தான். ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை உருவானபோது, பக்காவான ஆர் அண்ட் டி செட்டப் வைத்திருந்தும் அதற்கு தேவையான மென்பொருட்களைத் தயாரிக்க காலம் தாழ்த்திவிட்டது. மைக்ரோ சாஃப்ட் கணிக்க தவறிய இடத்தை ஆப்பிள் நிறுவனமும், கூகுள் ஆண்ட்ராய்டு நிறுவனமும் பிடித்துக்கொண்டன. சந்தையின் தேவைகள் புதிது புதிதாக உருவாகும்போது அதற்கு ஈடுகொடுக்க தயாராக இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு மைக்ரோ சாஃப்ட் சிறந்த உதாரணம். தற்போது காலம் கடந்த முயற்சியாக நோக்கியாவின் போன் தயாரிக்கும் ஒரு பிரிவை விலைக்கு வாங்கியுள்ளது.  

வளர்ச்சி நிலைத் தொழில்கள்!

சந்தை விரிவாக்கம் என்பதும் இந்தக் காலகட்டத்தின் முக்கிய தேவைகளில் ஒன்று, இதற்கு ஏற்றாற்போல கூட்டு முயற்சிகள், ஒப்பந்தங்கள், கையகப்படுத்துதல் போன்ற ஸ்ட்ராடஜிகளைப் பயன்படுத்த வேண்டி யிருக்கும். நீங்கள் தென்னிந்தியாவில் ஒரு பிசினஸில் வெற்றிகரமாக இருக்கலாம். வடமாநிலங்களுக்கு பிசினஸ் சேரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் தொழிலை அங்கு ஏற்று நடத்துபவர்களைக் கண்டுகொண்டு இணைத்துக்கொள்ள வேண்டும்.

நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தியே பெரிய கூட்டுறவு வங்கியாக வளர்ந்த சாம்ராவ் விட்டல் வங்கி இதற்கு சிறந்த உதாரணம். இந்த வங்கி பல நலிவடைந்த வங்கிகளைக் கையகப்படுத்தியே தனது வங்கித் தொழிலை விரிவுபடுத்திக் கொண்டது.

இளமைப் பருவமான வளர்ச்சி நிலையில் எல்லா திசைகளிலும் பார்வையைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் தொழில் போட்டியில் என்றும் நீங்கள் நிலைத்து நிற்க முடியும்.

தொழில் வளர்ச்சியின் மூன்றாவது நிலையான சீரான நிலையில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் அந்த சிக்கல்களைத் தவிர்க்கும் யுக்திகளைப் பற்றியும் அடுத்த வாரம் சொல்கிறேன்.  

(வியூகம் அமைப்போம்)