இறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்!
பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை
##~## |
ஒரு தொழிலின் இறுதிநிலை போக்குகள் எப்படியிருக்கும்? இறுதிநிலை அடைந்துவிட்டது என்றால் எந்த மாதிரியான தொழில் தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.
கடந்த காலங்களில் ஒரு தொழில் ஓஹோ என்று இருந்திருக்கலாம்; நிறுவனத்தின் லாபம் 40 - 50 சதவிகிதமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இறுதிநிலையில் தொழிலின் வளர்ச்சி என்பது மிக மோசமான நெகட்டிவ் போக்கில் இருக்கும். கிட்டத்தட்ட நஷ்டக் கணக்காகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். இந்த நேரத்தில் மனதில் உறுதியோடு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி எடுக்கவில்லை எனில் அந்தத் தொழிலுக்கு முடிவுரையை நீங்களே கூடிய சீக்கிரம் எழுத வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இறுதிநிலை தொழிலுக்கு சிறந்த உதாரணம் மோஸர் பேயர். இந்நிறுவனம் 1988-ல் கம்ப்யூட்டர் ஃப்ளாப்பி டிஸ்க்குகளைத் தயாரிக்கத் தொடங்கியது. 1996-ல் ஃப்ளாப்பியிலிருந்து வட்ட வடிவிலான குறுந்தகடுகளைத் தயாரிக்கும் வேலையைச் செய்யத் தொடங்கியது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மாறியதற்கு ஏற்ப தனது தொழிலையும் விரிவு செய்ததன் மூலம் குறுந்தகடு சந்தையில் உலகளவில் 17 சதவிகித சந்தையைக் கைவசம் வைத்திருந்தது மோஸர் பேயர் நிறுவனம்.
இதே காலகட்டத்தில் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்த பல்வேறு முதலீடுகளையும் செய்தது. இதற்காக பல நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களையும் வாங்கியது. வெளிநாடுகளில் தொழிற்சாலைகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு என பல விரிவாக்க நடவடிக்கைகளைச் செய்தது. 1999-ல் 150 மில்லியன் யூனிட் உற்பத்தித் திறன் கொண்டிருந்த மோஸர் பேயர் 2001-ல் 380 மில்லியன் யூனிட் குறுந்தகடுகளை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு வேகமான வளர்ச்சியைக் கண்டது.

பல்வேறு வகையில் முதலீடுகளைத் திரட்டி திரைப்படங்களை குறுந்தகடாக வெளியிடும் தொழிலில் இறங்கியது. இதே காலகட்டத்தில் சோலார் பேனல்கள் தயாரிப்பு என தொழிலையும் விரிவுபடுத்தியது. ஆனால், 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சந்தை தேக்கநிலையை அடைந்தது. உற்பத்தி கடுமையாக முடங்கியது. நிதி மூலதன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடன்களுக்கு வேறு வட்டியோடு தரவேண்டும். இன்னொரு பெரிய அதிர்ச்சி, அந்தக் கடனெல்லாம் வெளிநாட்டு கரன்சியில் வாங்கியவை. கடன் வாங்கியபோது டாலர் மதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், இப்போது டாலர் மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு டாலர் கடன் வாங்கி, ஒன்றே முக்கால் டாலரை திரும்பத் தரவேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்திற்கு.
சோலார் பேனல்களுக்கு சந்தையில் தேவை இருந்தும் உற்பத்தி முடக்கம் ஒரு பக்கம், மோஸர் பேயரைவிட குறைந்த விலைக்கு சீன நிறுவனங்கள் சோலார் பேனல்களைக் கொடுக்கத் தொடங்கியது இன்னொரு பக்கம் என பல்வேறு காரணங்களால் சந்தையை இழந்தது இந்த நிறுவனம்.
அந்த சமயத்தில், குறுந்தகடுகளிலிருந்து பென்டிரைவ் என்கிற வகையில் கணினி தொழில்நுட்பமும் மாறிக்கொண்டிருந்தது. கடன் சுமை மற்றும் புதிய முதலீடுகள் இல்லாமல் முடங்கிய காரணத்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது இந்த நிறுவனத்தால்.
2007 ஜூலையில் 514 ரூபாய் என்கிற அளவில் இருந்த அந்த நிறுவனத்தின் பங்கு விலை, தற்போது வெறும் 2.70 ரூபாய்க்கு சரிந்திருக்கிறது என்பதிலிருந்து அந்த நிறுவனத்தின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
மோசமான நிதி நிலைமை, சந்தை இழப்பு, போட்டியாளர்கள் என எல்லாவகையிலும் மோஸர் பேயர் தொழிலில் இறுதிநிலைக்கு முன்னுதாரணமாக ஆகிவிட்டது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவிற்கு தொழிலில் நம்பிக்கை யான நபராக இருந்தாலும், சந்தை நம் பக்கம் இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் இந்தச் சந்தை விளையாட்டில் நாம் ஜோக்கராக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் சந்தையில் உங்கள் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்வதுதான் முதல் போராட்டமாக இருக்க வேண்டும்.

வயோதிக நிலை அடைந்துவிட்டால் நாம் அப்படியே விட்டுவிடுவதில்லையே... உடல்நிலையை சீராக வைப்பதற்கும், இன்னும் சில நாட்கள் தாக்குப்பிடிப்பதற்கும் எப்படி மருத்துவம் பார்க்கிறோம். அதுபோலதான் தொழிலில் சிக்கலான நிலைமையில் தாக்குபிடிப் பதும். தொழிலில் நஷ்டம் என்று அப்படியே கைவிட்டுவிடுகிறோம் என்றால் சேதாரம் அதிகமாக இருக்கும். இந்தச் சேதத்தைத் தடுத்துக்கொள்ளவும், குறைந்த பாதிப்புகளோடு வெளியேறுவதும் ஓர் உத்திதான்.
சரி, தொழிலிலிருந்து வெளியேறுவது இருக்கட் டும், முதலில் தாக்குப்பிடிப்பதற்கான மருத்துவம் எப்படி இருக்கவேண்டும்? உனக்கு எவரும் எதிரிகளாக இருக்கக்கூடாது என்றால், முதலில் எதிரிகளை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள் என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதுதான் இங்கும் கடைப்பிடிக்க வேண்டும். சந்தையில் போட்டியாளர்களே இல்லாத நிலைமை உருவாக வேண்டும் என்றால் போட்டி நிறுவனங்களோடு ஐக்கியமாகிவிட வேண்டும். அல்லது உங்களது போட்டி நிறுவனத்தை நீங்கள் கையகப்படுத்துவது புத்திசாலித்தனம். இதன்மூலம் சந்தையின் பங்களிப்பு உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இந்தவகை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இன்னொரு முக்கியமான முடிவு காஸ்ட் கட்டிங் எனப்படும் செலவினங்களை கட்டுப்படுத்துவது. இந்த காஸ்ட் கட்டிங் முடிவுகளை எடுக்கும் நிர்வாகம் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவரைப்போல சமரசமின்றி முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டதாக இருக்கவேண்டும். சுமையாக இருக்கும் தொழிற்சாலைகளை மூடுவது, உற்பத்திக் குறைப்பு, தேவைக்கு அதிகமான பணியாளர்களைக் குறைப்பது, நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகளில் மாற்றம் என கடுமையான பணிகளை மேற்கொள்வது போல இருக்கும். செலவுகளைக் குறைப்பதன் மூலம் நஷ்டத்தைப் பெருமளவு குறைக்க முடியும் என்பதுதான் இதன் அடிப்படை.
சந்தையைத் தக்கவைப்பது, போட்டி யாளர்களைச் சமாளிப்பது, விலை குறைப்பு, செலவினங்களைக் கட்டுப்படுத்துவது என இறுதிநிலை தொழிலின் முக்கிய தந்திரங்களின் இறுதிக் கட்டம் ஒரு தொழிலை அபாய நிலையிலிருந்து நிச்சயம் காப்பாற்றும்.
தொழில் மோசமான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதற்காக தடாலடியாக வெளியேறிவிட முடியாது. சரியான நேரத்தில் வெளியேறுவதும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் மோஸர் பேயர் கதையை இன்னொருமுறை படித்துப் பாருங்கள்.
(வியூகம் அமைப்போம்)