மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு - டீலிங் முடிப்போம்!

சொந்த வீடு - டீலிங் முடிப்போம்!

 கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

##~##
அலைந்து திரிந்து ஒரு மனையைப் பார்த்து, அதற்குண்டான ஆவணங்களையும் அலசி ஆராய்ந்து சரியாக இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டோம். அக்கம்பக்கம் விசாரித்த வகையிலும் திருப்தியாக இருக்கிறது. சரி, இப்போது இடத்தைப் பேசிமுடித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள்.

எங்கிருந்து பேச்சை ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பவேண்டாம். அந்த இடத்திற்கு என்ன விலை சொல்கிறார்கள் என்று ஏற்கெனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் அடிப்படையில்தான் ஆவணங்களை வாங்கியிருக்கிறோம். இப்போது அந்த விலையிலிருந்து குறைத்து வாங்க பேரம் பேசுவதும், முன்பணம் தருவதும், எத்தனை நாட்களுக்குள் இடத்தைக் கிரயம் செய்துகொள்ள போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதும், செட்டில்மென்ட் பணத்தை எந்த வகையில் தரப்போகிறோம் என்பதை எல்லாம் தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொள்வதும்தான் இந்தக் கட்டத்தின் முக்கிய வேலை.

ஏனென்றால் இந்த இடத்தில்தான் வாங்குபவருக்கும் விற்ப வருக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் பல சமயங்களில் புதிது புதிதாக பிரச்னை முளைத்து, கடைசியில் எல்லாமே சொதப்பிவிட நிறையவே வாய்ப்புண்டு. இடத்தை வாங்க முடிவு செய்துவிட்டீர்கள் என்பதை மனையை விற்பவர்களுக்கு உணர்த்திவிடுங்கள். அப்போதுதான் அவர்களும் இறங்கி வருவார்கள். ஒரே விலைதான், மாற்றமில்லை. இஷ்டம் இருந்தா வாங்குங்க என்று தடாலடியாக முறுக்க மாட்டார்கள்; அதுபோல நாமும் மொத்தப் பணத்தையும் கைவசம் வைத்துக்கொண்டு மனையைப் பார்க்கப் போவதில்லை. மனையின் விலையை இறுதி செய்தபிறகு, கைவசம் எவ்வளவு உள்ளது, மீதி பணத்தை ரெடி பண்ண எடுத்துக்கொள்ளும் காலம் போன்றவற்றைக் கணக்கிடவேண்டும். இது தவிர, வங்கிக் கடன் மூலமாக இடத்தை வாங்குவது என்றாலும், அதற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்.

சொந்த வீடு - டீலிங் முடிப்போம்!

இதில் நாம் செய்யவேண்டிய முதற்கட்ட வேலை விலையை இறுதி செய்வதுதான்.  விலையை எப்படி இறுதி செய்வது? பேரம்தான். ஆனால், பிற இடங்களில் பேரம் பேசுவதுபோல சகட்டுமேனிக்கு குறைத்துப் பேச முடியாது. ஏனென்றால், இந்த பிசினஸ் அப்படி. நீங்கள் பேசி முடித்த விலையிலிருந்து 10 ரூபாய் அதிகமாகத் தருகிறேன் என்று வேறொருவர் வந்து நின்றாலும் உடனடியாக அவர்கள் பக்கம் தாவிவிடுவார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள். இதனால் கொஞ்சம் தன்மையான அணுகுமுறையோடு பேசலாம். குறிப்பாக, மொத்தமும் பணமாக செட்டில்மென்ட் செய்கிறீர்கள் என்றாலோ அல்லது 10 நாட்கள் 20 நாட்களுக்குள் பத்திர பதிவு முடித்துக்கொள்ளலாம் என்றாலோ நாம் பேசுகிற விலைக்கு அவர்களும் இறங்கி வருவார்கள்.

அடுத்ததாக, உடனடியாக இடத்தை கிரயம் செய்யப் போகிறோமா அல்லது சில நாட்கள் ஆகுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். நல்ல இடம், ரேட்டும் பேசிவிட்டோம். ஆனால், கிரயம் செய்ய சில நாட்கள் ஆகும் என்று வாய்மொழியாக நாட்களைக் கடத்த முடியாது. கையில் பணத்தோடு வரும் வேறு நபர்களுக்கு இடத்தை விற்றுவிடும் பழக்கம் உள்ளது. இந்த விஷயத்தில் நம்பிக்கை, நாணயம் என்கிற சங்கதிகளெல்லாம் கிடையாது. இது பிசினஸ், ஒரு டீலிங் முடிந்தது, அவ்வளவுதான். எனவே, நமக்காக காத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. எனவே, இந்த இடத்தில் ஒரு முன்பணத் தொகையைக் கொடுத்து டீலிங்கை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முன்பணம் எவ்வளவு கொடுப்பது என்பது அடுத்தக் கட்டம். இடத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு போகிறது, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்து முன்பணம் பேச வேண்டும். இப்போது சராசரியாக எல்லா இடங்களிலும் சந்தை மதிப்பைவிட அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ளது என்கிற பேச்சு உள்ளது. சில இடங்களில் மட்டும்தான் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது என்கிறார்கள். எப்படி இருந்தாலும் பேசப்படும் தொகையில்

சொந்த வீடு - டீலிங் முடிப்போம்!

20 - 40 சதவிகிதத் தொகை முன்பணமாகத் தரலாம். பத்திரப்பதிவு உடனடியாக முடிக்கப்போகிறோம் என்றால் முன்பணம் தரத் தேவையில்லை. ஆனால், இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கிரயம் செய்துகொள்ள முடியும் என்கிறபோது முன்பணம் தந்து உறுதி செய்துகொள்வது நடைமுறையில் உள்ளதுதான்.  இப்படி தருகிற முன்பணத்திற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த சர்வேயில் உள்ள இடத்தை, இன்னாரிடமிருந்து இன்னார் வாங்க சம்மதிக்கிறேன். அதற்காக இவ்வளவு தொகையை முன்பணமாக அளிக்கிறேன். இத்தனை மாதத்திற்குள் இடத்திற்குண்டான முழுத் தொகையையும் தந்து இடத்தை கிரயம் செய்துகொள்கிறேன் என கொடுத்த பணத்திற்குண்டான விவரங்களை முத்திரைத் தாளில் எழுதி இதைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்துகொண்டால் அந்த இடத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதிக விலைக்குக் கேட்கும் வேறொருவருக்கு விற்க முடியாது. ஒருவேளை குறிப்பிட்ட நாட்களுக்குள் நம்மால் வாங்க முடியவில்லை, காலதாமதமாகிறது என்கிறபோது இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கோரலாம். அல்லது முறித்துக்கொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இதிலும் சிலர் சிக்கல் தருவார்கள். ஒப்பந்தக் காலத்திற்குள் பேசியபடி இடத்தை வாங்கவில்லை; அதனால் எங்களுக்கு நஷ்டமாகிவிட்டது. எனவே, வாங்கிய முன்பணத்தைத் திரும்பித் தரமாட்டோம் என நெருக்கடி தருவார்கள். கவலை வேண்டாம். இந்த ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும். வாங்குபவருக்கு பாதுகாப்பைத் தருவதால் பெரும்பாலான மனை விற்பனையாளர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், இதற்கு ஒப்புதல் சொல்லும் ரியல் எஸ்டேட்காரர்களை ஓரளவு நம்பத்தகுந்தவர்கள் என்று சொல்லலாம்.

சந்தை விலையைக் காட்டிலும் அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கிறது என்கிறபோது, பண விவகாரங்களில் எந்தச் சிக்கலும் இருக்காது. அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவோ, அதைக் குறிப்பிட்டு பதிவு செய்து, பணத்தை செட்டில்மென்ட் செய்துகொள்ளலாம். ஆனால், வழிகாட்டி மதிப்பைவிட சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது என்கிறபோது, பண விவகாரங்களில் உஷாராக இருக்கவேண்டும். ஏனென்றால், பத்திரப்பதிவு ஆவணங்களில் அரசு வழிகாட்டி மதிப்பிற்குத்தான் வாங்குகிறோம் எனக் குறிப்பிடுவோம். ஆனால், நடைமுறையில் சந்தை விலையைக் கணக்கிட்டு பணத்தைத் தருவோம். இதனால் கூடுதலாகத் தரும் பணம் கணக்கிற்கு வராமல் போகும்.

பொதுவாக, இதுபோன்ற நிலைமைகளில் ரியல் எஸ்டேட்காரர்கள் ''சார், ஹாட் கேஷ்’ கொடுத்துடுங்க என்று டீலிங் பேசுவார்கள். அந்த சிக்கல் வரும், இந்த சிக்கல் வரும் என ஏகப்பட்ட காரணங்கள் சொன்னாலும், நம்மிடமிருந்து செல்லும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் சரியான கணக்கு வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, வங்கிக் காசோலை மூலமாக அல்லது வரைவோலை என சாட்சி ஆவணம் உள்ள வழிகளில் பணப்பரிமாற்ற வேலைகளை வைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். மேலும், இடத்தை உங்கள் பெயருக்கு கிரயம் செய்துகொள்வதற்குமுன் முழுத்தொகையையும் தரக்கூடாது என்பதும் புத்திசாலித்தனமான விஷயம். அதேபோல, பத்திரப்பதிவு முடிந்த பிறகு முன்பணத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ளலாம்.  

இந்த வேலைகள் அனைத்தும் இடம் பார்த்துவிட்டு வந்தபிறகும், கிரய வேலை களுக்கு முன்னருமான இடைப்பட்ட நிலையில் செய்கிறோம். இது எல்லாமே ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் என்று சொல்வார்கள். இதில் நமது சாமர்த்தியத்தைப் பொறுத்து சாதகங்கள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதேநேரத்தில், எல்லா விஷயத்திலும் கண்கொத்தி பாம்பாக நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

(கனவை நிஜமாக்குவோம்)