கட்டுரைகள்
Published:Updated:

வரவு - செலவு... சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற 5 கட்டளைகள்!

சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற
5 கட்டளைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற 5 கட்டளைகள்!

- ராம பழனியப்பன்

சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் செய்யும் பொதுவான தவறு ஒன்று உள்ளது. அது, தனிநபர் வரவு செலவையும், வியாபார வரவு செலவையும் ஒன்றாகக் கலப்பது. ‘என் பணம், என் வியாபாரம், ஏன் கலக்கக் கூடாது?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படிச் செய்யும்போது, ‘அடிப்படையில் எது என் பணம், எது வியாபாரத்தின் அல்லது நிறுவனத்தின் பணம்’ என்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கும் (பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரியானவை, வேறுபாடு இல்லை). வரவு செலவைக் கண்காணிப்பது, கணக்கு எழுதுவது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது என்று பலவற்றையும் இது கடினமாக்கும். சமயங்களில் தனிநபர் மற்றும் நிறுவன சொத்துகளை ஆபத்தில் கொண்டுசென்று விடும் அபாயமும் இருக்கிறது.

சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற
5 கட்டளைகள்!
சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற 5 கட்டளைகள்!

நீங்கள் வேறு, உங்கள் நிறுவனம் வேறு

உங்கள் பணத்தையும் நிறுவனத்தின் பணத்தையும் வேறுபடுத்தி வைக்க வேண்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள்... உங்கள் பணத் தேவையும் உங்கள் நிறுவனப் பணத் தேவையும் ஒன்றாக இருக்கிறதா? உதாரணமாக, உங்களுக்கு ஒரு சட்டை தேவைப்படும். ஆனால், உங்கள் நிறுவனத்திற்கு மூலப்பொருள்கள் தேவைப்படும். இப்படியாகப் பல்வேறு தேவைகளைச் சொல்லலாம். உங்கள் பணத்தை வியாபாரத்தின் பணமாக நினைத்தால், பின்பு உங்களுக்கு என்று பணம் இருக்காது. மாறாக வியாபாரத்தின் பணத்தை உங்கள் பணமாக நினைத்தால் வியாபாரத்திற்குப் பணம் இருக்காது. ஆக, நீங்கள் வேறு; உங்கள் நிறுவனம் வேறு.

Iராம பழனியப்பன்
Iராம பழனியப்பன்

உங்கள் சம்பளம் எவ்வளவு?

‘நான் முதலாளி, எல்லாப் பணமும் என்னோடதுதான். எனக்கு எதுக்கு சம்பளம்?’ என்று கேட்கத் தோன்றும். ஆனால், நீங்கள்தான் உங்கள் நிறுவனத்தின் முதல் தொழிலாளி. மற்ற தொழிலாளர்களைப் போல் நீங்களும் உங்கள் நேரத்தையும் திறமையையும் உங்கள் நிறுவனத்திற்காகச் செலவிடுகிறீர்கள். மற்ற தொழிலாளர்களைப் போல் உங்களுக்கும் சம்பளம் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வருடம்தோறும் லாபத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் பணத் தேவைகளையும் குடும்பத்தினரின் பணத் தேவைகளையும் கவனித்துக்கொள்ள முடியும்.

உங்கள் வியாபாரம் தடுமாறும்போது நீங்கள் தடுமாறக்கூடாது!

உங்கள் வியாபாரம் தடுமாறும்போதுகூட, உங்களால் உங்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிய வேண்டும். அப்போதுதான் உங்கள் வியாபாரத்தை முன்னேற்ற, கவலையின்றி உற்சாகமாகப் பாடுபட முடியும். உங்கள் வியாபாரம் தடுமாறும்போது நீங்கள் தடுமாறாதீர்கள்.

‘எல்லாம் சரி. ஆனாலும் என் பணம் எது, என் வியாபாரத்தின் பணம் எது என்று எப்படிப் பிரிப்பது?’ என்பவர்களுக்கு இந்த 5 வழிமுறைகள்...

 தனித்தனி வங்கிக் கணக்குகள்: நிறுவனத்திற்கும் உங்களுக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை ஆரம்பியுங்கள். நிறுவனக் கணக்கில் நிறுவன வரவு செலவையும், உங்கள் சேமிப்புக் கணக்கில் உங்களுக்கான தனிப்பட்ட வரவு செலவையும் செய்திடுங்கள். இதனால் எது உங்கள் பணம் எது நிறுவனப் பணம் என்ற தெளிவு கிடைக்கும். வியாபாரத்தின் லாப, நட்டத்தையும் மிகச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற
5 கட்டளைகள்!
சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற 5 கட்டளைகள்!

 பட்ஜெட் போடுங்கள்: நிறுவனத்திற்கென்று வாடகை, மின்சாரக் கட்டணம் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கிய பட்ஜெட்டை உருவாக்குங்கள். அனைத்துச் செலவுகளையும் சரிவர குறித்து வைத்து, அந்தச் செலவுகள் பட்ஜெட்டுக்கு உட்பட்டுதான் நடக்கின்றனவா என்று அவ்வப்போது கண்காணியுங்கள். அதேபோல உங்களுக்கென்றும் ஒரு தனி பட்ஜெட்டைப் போட வேண்டும்.

 சம்பளம் பெற்றுக்கொள்ளுங்கள்: உங்கள் சம்பளத்தைத்தான் நீங்கள் உங்களுக்கென்று தொடங்கிய வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆன அனைத்துத் தேவைகளுக்கும் உங்கள் சம்பளத்தில் இருந்துதான் செலவிட வேண்டும்.

 தனித்தனிக் கடன் அட்டை: நீங்கள் கடன் அட்டை உபயோகிக்கும் தொழில்முனைவோர் என்றால், உங்களுக்கு ஒன்று, நிறுவனத்திற்கு ஒன்று என்று தனித்தனிக் கடன் அட்டை வாங்கிவிடுங்கள்.

 கணக்காளரிடம் ஆலோசியுங்கள்: ஒரு நல்ல கணக்காளரிடமோ, பட்டய கணக்காளரிடமோ தனிநபர் நிதியையும் நிறுவன நிதியையும் எப்படிச் சிறப்பாகப் பிரித்துக் கையாள்வது என்று ஆலோசனைகள் பெறுங்கள்.

சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற
5 கட்டளைகள்!
சிறு நடுத்தர வணிகர்கள் வெற்றி பெற 5 கட்டளைகள்!

நீங்கள் உங்கள் வியாபாரத்திற்காகக் கடினமாக உழைக்கிறீர்கள். ஆனால் தனிநபர் வரவு செலவையும், வியாபார வரவு செலவையும் ஒன்றாகக் கலப்பதன் மூலம் வியாபாரத்தின் வெற்றிதோல்விகளை அறிந்துகொள்ள முடியாமல் போகிறது. உங்கள் உழைப்பு விழலுக்கு இறைத்த நீரா அல்லது கனி தரும் மரமா என்று தெரிந்துகொள்ள, மேலே சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் வியாபாரத்தின் வெற்றிதோல்விகளை மிகச் சரியாகக் கண்டறிந்து முன்னேற்றப் பாதையில் சென்றிடுங்கள்.