பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PWC) அதன் உலகளாவிய நுகர்வோர் நுண்ணறிவு சர்வேயை சமீபத்தில் தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பின் படி சுமார் 74% இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட நிதிநிலையைப் பற்றிக் கவலைப்படுவதாகக் கூறியுள்ளனர். PWC-ன் சர்வேயின்படி 63% இந்திய நுகர்வோர் தங்களின் அத்தியாவசியமற்ற செலவினங்களை முழுவதுமாகக் குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 12 பெரு நகரங்களைச் சேர்ந்த 500 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. பதில் அளித்தவர்களில் 57% பேர் ஆண்கள் மற்றும் 43% பேர் பெண்கள். பெரும்பாலான இந்திய நுகர்வோர் அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து வகையிலும் தங்கள் செலவினங்களைக் குறைக்கவுள்ளதாக இந்த கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் இந்திய மக்கள் தங்களுடைய ஆடம்பரம் மற்றும் பிரீமியம் பொருள்கள், பயணம், ஃபேஷன் ஆகிய அத்தியாவசியம் இல்லாத செலவுகளை பெரு அளவில் குறைத்துவிடுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம், மளிகைப் பொருள்கள் வாங்குவதுகூட குறையும், மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களை மட்டுமே பணம் கொடுத்து மக்கள் வாங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுவதாக இந்த சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்ட பின்பு பேசிய PWC-ன் தலைவர் ரவி கபூர், ``PWC-ன் இந்தியாவுக்கான சமீபத்திய உலகளாவிய நுகர்வோர் நுண்ணறிவு கணக்கெடுப்பு, 75 சதவிகித நுகர்வோரின் வாழ்வில் நிலவும் நிதி அழுத்தத்தின் முக்கிய செய்தியை வெளிப்படுத்துகிறது. மக்கள் தங்கள் நிதி நிலைமையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். இதனால் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்குவதும் ஆடம்பர கேளிக்கை களுக்கு செலவழிப்பதையும் மக்கள் குறைத்துக்கொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.