மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஃபிராக்மென்ட் சூழ்நிலை!

ஃபிராக்மென்ட் சூழ்நிலை!

ஸ்ட்ராடஜி 19

##~##

எந்த ஒரு தொழிலை எடுத்துக்கொண்டாலும், உள்ளூர் அளவில் பெரும் போட்டி இருக்கவே செய்கிறது. அதாவது, ஒரு சந்தையை நிறைய நிறுவனங்கள் கூறுபோட்டு பிரித்துக்கொண்டிருப்பார்கள். பெரிய அளவில் வெற்றி அடைய முடியாமல் லோக்கல் லெவல் பிராண்டாகவே இருப்பார்கள். குறிப்பாக, மருத்துவமனை, அழகு நிலையம், கால்டாக்ஸி, ஹோட்டல் தொழில்களைக் குறிப்பிடலாம். இப்படியாக, லோக்கல் போட்டிகள் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் பெரிய பிளேயராவது எப்படி என்பதுதான் இந்த ஃபிராக்மென்ட் சூழ்நிலையில் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற போட்டிகளை, இந்த ஃபிராக்மென்ட் சூழ்நிலையைச் சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்திதான் கே.எஃப்.சி., மெக்டொனால்ட், ஹோட்டல் சரவணபவன் போன்றவை பெரிய பிளேயர்களாக உருவாகியுள்ளன.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சந்தையை அதிகபட்சமாக ஒருவர் ஒரு சதவிகிதம் வைத்திருப்பதே ஆச்சர்யம். மருத்துவமனை எனில் ஓர் ஊருக்கு பத்து மருத்துவமனைகள் இருக்கும். உணவகம், டாக்ஸி என இச்சூழ்நிலையில் முழுக்க முழுக்க லோக்கல் பிளேயர்களே இருப்பார்கள்.  இங்கு போட்டிபோடுவது சாதாரண விஷயமல்ல. உலக அளவிலான தொழில் வாய்ப்புதான் என்றாலும், உள்ளூரின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்பவர்களே நிற்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் தாக்குப்பிடிப்பதற்கும், தொழிலில் வெற்றி பெறுவதற்கும் ஏற்ப என்ன வகையிலான தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்பதற்கு முன் இதில் வெற்றிகண்ட நிறுவனமான, நமக்கு நன்கு தெரிந்த வாசன் ஐகேர் நிறுவனத்தின் கதையைப் பார்ப்போம்.

ஃபிராக்மென்ட்  சூழ்நிலை!

இந்த நிறுவனம் ஒரு சாதாரண மருந்துக் கடையாக ஆரம்பமானது. இந்நிறுவனத்தின்  இயக்குநர் டாக்டர் அருணின் தந்தையார், திருச்சியில் மருந்துக் கடை நடத்தினார். இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த டாக்டர் அருண், இந்த மருந்துக் கடையை இதே பெயரில் நகரின் பல இடங்களில் திறந்தார். எந்த இடத்தில் எந்த மருந்து தேவையாக இருக்கிறது என்பதை அறிந்து உடனுக்குடன் கொண்டு செல்வதும், முன்னணி மருத்துவர்களின் ஒத்துழைப்போடு வாசன் மெடிக்கல் ஷாப் நம்பகமான சில்லறை மருந்து விற்பனையகமாக உருவானது. தினசரி பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் என்கிற அளவில் இதன் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தினார்.

இதன் அடுத்தக்கட்டமாக, பல்துறை சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட வாசன் மெடிக்கல்

ஃபிராக்மென்ட்  சூழ்நிலை!

சென்டரை உருவாக்கினார். இந்தச் சிறப்பு மருத்துவமனை கான்செப்ட் என்பது ஒரே கூரையின் கீழ் இல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவ மையம் என்பதாக இருந்தது. குறிப்பிட்ட மையத்தில் குறிப்பிட்ட மருத்துவச் சேவை மட்டுமே கிடைக்கும். சிறப்பு மருத்துவம் கிடைக்க வாய்ப்பில்லாத இடங்களில்கூட இவர்கள் சேவையை வழங்கியதால் மக்களின் வரவேற்பைப் பெற்றது வாசன் மெடிக்கல் சென்டர்.

இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிதான் வாசன் ஐகேர். கண் மருத்துவத்திற்காக சென்னை போன்ற பெரிய நகரங்களைத் தேடிச் சென்ற மக்களுக்கு இந்தச் சேவையை, அவர்கள் ஊருக்கு அருகிலேயே கிடைக்கச் செய்தது இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.  

தொழிலில் பல்வேறு போட்டியாளர்கள் இருந்தாலும், சந்தையைத் தக்கவைத்துக்கொள்வதும், உறுதிபடுத்திக்கொள்வதிலும் புதிய புதிய அணுகுமுறைகளைக் கையாளவேண்டும். குறிப்பாக, சந்தையை விரிவுபடுத்துவது, சந்தையைப் பிரித்துக்கொண்டாலும் அதில் தனிச் சிறப்பான அடையாளத்தோடு செயல்படுவது, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என சந்தையைக் கூறுபோட்டுக்கொள்வதுபோல பல்வேறு வகைகளில் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் போட்டியில் நீங்கள் நிற்பதற்கு என்ன வகையில் தந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஃபார்முலா: ஒரேவகையிலான ஃபார்முலாவைப் பயன்படுத்துவது இதில் ஓர் உத்திதான். மெக்டொனால்ட், கே.எஃப்.சி.

ஃபிராக்மென்ட்  சூழ்நிலை!

கஃபே காபி டே கடைகள் இந்தவகையில் வெற்றி பெற்றவைதான். ஒரேமாதிரியான தோற்றத்தைத் தருவதும், உணவின் ருசி, உள்அலங்கார அமைப்பு போன்றவற்றில் மையப்படுத்த ஒரு ஃபார்முலாவில் செயல்படுவதும் ஓர் உத்திதான். கஃபே காபி டே என்றால், எந்த ஊரில் காபி குடித்தாலும் ஒரேமாதிரியான உணர்வு கிடைக்கும். வெவ்வேறு ஊர், சூழ்நிலை, கலாசார பழக்கவழக்கங்கள் என்றாலும் ஒரே வகையிலான உணர்வு கிடைக்க செய்வதன் மூலம் நமது தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வது.

குறைந்த விலை: ஒரே தொழிலில் பல்வேறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதன் மூலம் சந்தை போட்டியைச் சமாளிப்பது. உதாரணமாக, சில வர்த்தக அங்காடிகளில் எம்.ஆர்.பி. விலையிலிருந்து தள்ளுபடியில் பொருட்களைத் தருவார்கள். இதுதவிர, லாபத்தைக் குறைப்பதன் மூலம் விற்பனையை அதிகரிக்கும் உத்தியாகத்

ஃபிராக்மென்ட்  சூழ்நிலை!

தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்கும் நடவடிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒப்பீட்டளவில் போட்டியாளர்களைவிட குறைந்த விலை என்பது சில்லறை வர்த்தகத்தில் முக்கியமான தொழில் தந்திரம். உலக அளவில் முன்னணி சில்லறை வர்த்தக அங்காடியான வால்மார்ட் வெற்றி பெற்றது இப்படித்தான் என்பதே இந்தத் தொழில் உத்திக்கு சிறந்த உதாரணம்.

தனிக்கவனம்: ஒரு குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பிரிவில் தனிக் கவனத்துடன் செயல்படுவது: தையல் தொழிலை இதற்கு சிறந்த உதாரணமாகப் பார்க்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு இந்தத் தொழில் எப்படி இருந்தது. ஒரு டெய்லரே ஆண்கள், பெண்களுக்கு என எல்லா உடைகளையும் தைத்துக் கொடுத்தார். அதற்குபிறகு இதில் ஆண்களுக்காக உடைகள், பெண்களுக்கான உடைகள் என சிறப்புக் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இப்போது இதிலும் தனிக் கவனம் கொண்ட பிரிவுகள் தேவையாக இருக்கிறது. கோட், குர்தா, சுடிதார், ஜாக்கெட் என இதில் தேர்ந்தவர்கள் மட்டுமே நிலைக்க முடிகிறது. எனவே, குறிப்பிட்ட துறையில், குறிப்பிட்ட பிரிவில் தனிச் சிறப்பான நபராக விளங்குவதன் மூலம் சந்தையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட வாசன் ஐகேர் வெற்றி பெற்றது இப்படித்தான்.

ஃபிராக்மென்ட்  சூழ்நிலை!

வாடிக்கையாளர்கள்: தொழிலில் வாய்ப்புகள் தாராளமாக இருந்தாலும், பல போட்டியாளர்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சந்தைக்கு மட்டும் கவனம் செலுத்துவது. இதுபோன்ற சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதற்கு வங்கித் தொழிலை உதாரணமாகக் காட்டலாம். அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் பொத்தாம் பொதுவான சேவை வழங்குவதைவிட, குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சேவை புரிவது என்கிற உத்தியில் சில வங்கிகள் செயல்படுகின்றன. இதற்கு உடன்பட்ட நபர்களுக்கு மட்டுமே சேவை வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட சந்தையைக் கூறுபோட்டுக் கொள்கின்றன. உதாரணமாக, டாய்ட்ச் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 25,000 வைப்பவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். இதன்மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப சேவையை வழங்க முடியும்.

இதுபோல, பொருட்களின் அடிப்படையில், ஏரியா அடிப்படையில் சந்தையைக் கூறு போட்டுக்கொள்வதை ஓர் உத்தியாகப் பின்பற்ற முடியும். இப்படி கூறுபோட்டுக் கொள்ளும் சந்தையில் நீங்கள் நிற்க நினைப்பது சாதாரணமில்லை. மேற்சொன்ன தொழிலில் உங்கள் ஊரில், உங்கள் கண் எதிரே எத்தனை பேர் காணாமல் போனவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், அதன் கஷ்டம் புரியும்!    

(வியூகம் வகுப்போம்)