சொந்த வீடு - தவணை மனைகள்...கூடுதல் கவனம் !
##~## |
ஓர் இடத்தைப் பார்த்து, அது நமக்குப் பிடித்துப்போய், அதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தால், அதன் விலையை எப்படி பேசி முடிக்கவேண்டும் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இனி என்ன, பத்திரப்பதிவுதானே என்று நீங்கள் நினைப்பீர்கள். பத்திரப்பதிவைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லி ஆகவேண்டும். அது, தவணைமுறையில் மாதாமாதம் பணம் செலுத்தி மனை வாங்குவதுதான்.
குறைந்தபட்சம் ஆறு மாதத்திலிருந்து அதிகபட்சம் நான்கு, ஐந்து வருடங்கள் வரை இப்படி தவணையில் பணம் செலுத்தி மனையைச் சொந்தமாக்கிக்கொள்ளும் போக்கும் புறநகரப் பகுதிகள் மற்றும் சிறு நகரங்களில் நடைமுறையில் உள்ளது. இரண்டு, மூன்று வருடங்களுக்குள் வீடு கட்ட திட்டமிடும் பலரும் இந்தவகையில் சுலபமாக மனை வாங்கிவிடலாம் என்று யோசிக்கவே, இன்றைக்கு தமிழகம் முழுக்க இந்த தவணைமுறைத் திட்டம் பிரபலமாக இருக்கிறது. எனவேதான், தவணை முறையில் மனை வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து இந்த வாரம் அலசுவோம்.
இந்தத் தவணைத் திட்டத்தை எந்த நிறுவனம் நடத்துகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சில நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்வதில்லை என்பதே உண்மை. தவணைத் திட்டத்தில் மனையை புக் செய்து ஏமாந்த ஆரோக்கியவேலின் கதையைக் கேளுங்கள்.

அரியலூருரைச் சேர்ந்த ஆரோக்கியவேல், வேலை நிமித்தமாக மாதத்தில் பாதிநாட்கள் தஞ்சாவூருக்குச் சென்று வந்தார். அரியலூர் செல்லும் வழியில் தவணையில் மனை விற்பனை விளம்பரங்களைப் பார்த்து இடமும் பிடித்துப்போக முன்பணம் செலுத்தி ஒரு மனையை புக் செய்தார். ஒன்பது மாதம் தவணைத் தொகை கட்டியபிறகு, ''சார், அந்த இடத்திற்கு லேண்ட் வேல்யூ அதிகரித்துவிட்டதால் கூடுதல் பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் வேறு ஓர் இடத்தில்தான் உங்களுக்கு ப்ளாட் கிடைக்கும்'' என்றனர்.
ஏன், எதற்கு என்று கேட்டதற்கு ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள். எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால் சட்ட ரீதியாக முரண்டு பிடிக்கவும் முடியாது என்பதைத் தெரிந்துகொண்டவர்கள், ''சார், நீங்க கட்டின வரை பணத்தைத் திரும்ப வாங்குறதா இருந்தா வாங்கிக்கோங்க'' என்கின்றனர். தவணை முடியும் முன்பே ப்ளாட் போட்டவர்கள் இப்படி பேச்சை மாற்றியதற்கு காரணம், ப்ளாட் போட்ட இடத்திற்கு அருகில் புறவழிச்சாலை திட்டம் வருவதாகக் கிளம்பிய பேச்சுதான். இதனால் அந்த இடத்தைத் தவணையில் விற்பதைவிட கொள்ளை லாபம் வைத்து விற்க ப்ளாட் போட்டவர்கள் திட்டம் போட, ஆரோக்கியவேல் போன்றவர்களை பலி தர தயாரானார்கள். ப்ளாட் போட்டவர்களின் 'தொழில் தர்மத்தை’ப் பற்றி நன்கு தெரிந்துகொண்ட ஆரோக்கியவேலும் பணத்தை வாங்கிக்கொண்டு திரும்ப வந்துவிட்டார்.
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானவுடன் கும்பகோணம் வழியில் காட்டூர், மயிலாடுதுறை வழியில் வண்டாம்பாளையம், கங்களாஞ்சேரி பகுதிகளில் தவணைமுறையில் விற்றுவந்த பல மனைப்பிரிவுகளின் விலையைத் திடுதிப்பென உயர்த்தி, அதிர்ச்சி தந்துள்ளனர் ரியல் எஸ்டேட்காரர்கள்.
ஏதாவது ஒரு வளர்ச்சித் திட்டமோ, பள்ளியோ, கல்லூரியோ அறிவிக்கப்படும்போது, அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். அதைச் சொல்லிச் சொல்லியே மனை விலைகளை ஏற்றிவிடுவார்கள். உண்மையில் அந்தத் திட்ட வேலைகள் எத்தனை வருடங்களில் தொடங்குவார்கள் என்பதுகூட தெரியாது. வாய்மொழி தகவல்களை வைத்தே விலை ஏற்றுவதில் கில்லாடிகள் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் ஆட்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக நகரப் பகுதிகளைச் சுற்றி எப்போது என்ன திட்டம் அறிவிக்கப்படும், நகர விரிவாக்கம் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாத ஒன்று. திடீரென்று அறிவிக்கப்படும் ஒரு திட்டம், அப்படியே கிடப்பில் போடப்படுவதும், அல்லது கைவிடப்படுவதும் நடக்கலாம். ஆனால், இதுபோன்ற தகவல்களே தவணைமுறையில் ப்ளாட் விற்பவர்களுக்கு முதன்மையான மூலதனம்.
இப்படி தவணைமுறையில் மனை விற்கும் திட்டத்தில் நடந்த இன்னொரு நூதன மோசடியைப் பார்ப்போம். இந்த மோசடியில் சிக்கியவர் வந்தவாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். சொந்த ஊருக்கு அருகில் என்பதால் செய்யாறு வழியில் தவணைத் திட்டத்தில் ஒரு மனையை புக் செய்துள்ளார். நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வாங்கிய அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில் ரியல் எஸ்டேட்காரர்கள் மனைகளைத் தவணையில் பிரித்து விற்பனை செய்கின்றனர். இரண்டு வருடங்களுக்குள் மனைகளுக்குரிய மொத்தப் பணத்தையும் செட்டில் செய்துவிட வேண்டும் என்பது அவர்களுக்குள் ஒப்பந்தம். ஆனால், ரியல் எஸ்டேட்காரர்கள் இரண்டு வருடங்களுக்குள் நிலத்தின் உரிமையாளருக்கு பணத்தை செட்டில் செய்யவில்லை. ஆனால், எல்லா மனைகளையும் தவணையில் விற்று பணத்தைப் பார்த்துவிட்டனர். அவர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் இழுபறியில் முழுப் பணத்தையும் கட்டியபின் ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகே மனையைக் கிரயம் செய்து தந்துள்ளனர்.
இவரது நல்ல நேரம் மனை கைக்கு கிடைத்து விட்டது. பேசியபடி பணத்தை செட்டில்மென்ட் செய்யவில்லை என்று நிலத்தின் உரிமையாளர் பவரை ரத்து செய்திருந்தால் யாரிடம் போய் நிற்பது? மனையை விற்றவர்கள் பணத்தைச் சுருட்டிக்கொண்டு போயிருப்பார்கள். நிலத்தின் உரிமையாளர் வேறொருவருக்கு பவர் கொடுத்துவிட்டு அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

பெருவாரியான மனைப்பிரிவுகள் அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில்தான் விற்கப்படுகின்றன. ஒன் டைம் பேமன்ட் என்கிறபோது ஒரு சில மாதங்களுக்குள் கிரயம் செய்துகொள்ள முடியும். இதுவே தவணை மனை என்கிறபோது பவர் நீண்ட காலத்திற்கு வாங்கியிருப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் பவர் கொடுத்தவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் நமது நிலைமை சிக்கலானதாக மாறிவிடும். ஒருவேளை அவரது வாரிசுகள் பவரை நீட்டித்துத் தரலாம். அல்லது நிலத்திற்கு கூடுதல் விலை தர வேண்டும் என்று டிமாண்ட் செய்தால் அதுவும் நம் தலையில்தான் விடியும்.
எனவே, தவணைத் திட்டத்தில் சேர்ந்தவுடன், மனையை விற்பனை செய்ய அதிகாரம் கொண்டவரோடு ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. மனையின் விவரம், அதன் இன்றையச் சந்தை மதிப்பு, கொடுத்துள்ள முன்பணம், மாதாமாதம் கட்டவேண்டிய தொகை போன்ற விவரங்கள் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு அதைப் பதிவும் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் எதாவது பிரச்னை என்றால் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும். மனையின் சந்தை விலை எதிர்காலத்தில் அதிகரித்தாலும், இப்போதைய ஒப்பந்த விலைக்கே விற்பதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்கிற ஒரு வரியும் அதில் இடம் பெற வேண்டும்.
தவணையில் மனை வாங்குவது எளிமை யானதுதான். சிறுக சிறுக கட்டி ஒரு மனையைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்தான். ஆனால், மேற்சொன்ன விஷயங்களைக் கவனித்து, தவணைமுறைத் திட்டத்தில் நாம் பணம் கட்ட ஆரம்பித்தால்தான் நம் பணத்திற்கு பாதுகாப்பு!
(கனவை நிஜமாக்குவோம்)
எச்சரிக்கை டிப்ஸ்...
தவணைத் திட்டங்களில் பணத்தைக் கட்டி ஏமாறாமல் இருக்க, இதோ சில எச்சரிக்கை டிப்ஸ்கள்...
உடனடி பத்திரப் பதிவுதான் தீர்வு. தவணைத் திட்டத்தில் சேர்ந்து மனையை புக் செய்தவுடன் குறிப்பிட்ட அளவுக்கு முன்பணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.
மனையைப் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன வகையிலான ஆவணங்களைப் பார்க்க வேண்டும் என சென்ற வாரங்களில் பார்த்த அனைத்து வேலைகளையும் தவணைத் திட்ட மனைகளுக்கும் பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில் உடனடியாக உங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு முடித்துக்கொள்ள வேண்டும். மனைக்குரிய முழுப் பணத்தையும் கட்டியபிறகு பத்திரத்தை உங்களிடம் திருப்பித் தந்தால் போதும் என்று சொல்லுங்கள்.
நம்பிக்கையான நிறுவனங்கள் மேற்கண்ட நடைமுறையைத்தான் கடைபிடிக்கின்றன. இதுதான் சரியானது. நமது பணத்திற்கும் கனவுக்கும் பாதுகாப்பு. கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.
மொத்த பணமும் கட்டியபிறகுதான் பத்திரப்பதிவு செய்யமுடியும் என்கிறவர்களிடம் உஷாராக இருங்கள்.
நான்குக்கு நான்கு அகலம் கொண்ட ஓர் அலுவலகம், ஒரு சீட்டு, மாதா மாதம் குலுக்கலில் பரிசு பொருள், பணம் கட்டிய ரசீது. இவை மட்டுமே உங்கள் மனைக்கான ஆதாரமாக இருந்தால் நீங்கள் ஏமாளியாகலாம். கூடுதல் எச்சரிக்கை அவசியம்.