மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் !

ஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் !

 கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

ஏற்கெனவே பலரும் பங்கு போட்டுக்கொண்டிருக்கும் சந்தையில் நாமும் போட்டியில் இறங்கி அடித்து பிடித்து சந்தையைப் பிரித்துக்கொள்வதைவிட, நாமே தனியாக ஒரு பாதையை உருவாக்கி போட்டி  இல்லாமல் பயணம் செய்யும் ஓர் உத்திதான் இந்த நீலக் கடல் உத்தி. அதாவது, புளூ ஓஷன் ஸ்ட்ராடஜி. ஒரே இடத்தில் வசிக்கும் விலங்குகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு, யார் நிலைத்து நிற்பது என்று போட்டி போடுகிறதல்லவா, அதுபோலத்தான் தொழிலிலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டுதான் தொழிலைப் பங்கு போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.

கடல் வாழ் உயிரினங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு கடல் நீரை ரத்தமயமாக்குவதற்கு பெயர் 'ரெட் ஓஷன்’ என்பார்கள். இந்தப் போட்டிகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் கடல் பரப்பை 'புளூ ஓஷன்’ என்பார்கள். தொழிலில் இப்படி எந்த அடிதடியும் சச்சரவுகளும் இல்லாமல் தனியாக ராஜபாட்டை போடுவதைத்தான் 'புளூ ஓஷன் ஸ்ட்ராடஜி’ என்கிறோம்.

பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற மேலாண்மை கல்லூரியான இன்சியாட் (INSEAD)-ல் பணிபுரிந்த பேராசிரியர்களான சான் கிம் (Chan Kim), ரெனீ மாபோர்ன் (Renee Mauborgne)ஆகிய இருவரும் சேர்ந்து Cirque du Soleil, QB ஹவுஸ், ஆப்பிள் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் தொழில் யுக்திகளை ஆராய்ச்சி செய்தார்கள்.  கிட்டத்தட்ட நூறு வருட தொழில் போக்குகளை ஆய்வு செய்து, இந்த ஆராய்ச்சி முடிவுகளை 2005-ல் நீலக் கடல் யுக்தி (Blue Ocean Strategy) என்னும் பெயர் சூட்டி வெளியிட்டார்கள்.

நீலக் கடல் யுக்தியைக் கடைப்பிடித்து ஜெயித்த இரண்டு நிறுவனங்களை சுருக்கமாக சொல்கிறேன். அதில் முதலாவது, நிர்மா சோப்.

ஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் !

டிடர்ஜென்ட் சோப் ஒரு காலத்தில் அத்தியாவசியமான பொருளாக உணரப்பட வில்லை. நகர்ப்புறங்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இருந்தது. அந்த சமயத்தில் நிர்மா சோப்பை கொண்டு வந்தார் கசன்பாய் பட்டேல். ஹிந்துஸ்தான் யுனிலீவர் சோப்பைவிட மூன்றில் இரண்டு மடங்கு விலை குறைவாகவும் கிட்டத்தட்ட அந்த சோப்பைப்போல 80 சதவிகித தரத்திலும் கொண்டுவந்ததுடன், அதற்கு கிராமப்புற சந்தையை மட்டுமே இலக்காக வைத்துக் கொண்டார். போட்டிகள் இல்லாத புத்தம் புது சந்தையில் நிர்மா சோப் வெற்றி கண்டது.

இரண்டாவது நிறுவனம் கெவின்கேர்.  பாட்டிலில் விற்கப்பட்டு வந்த ஷாம்பினை சாஷே பாக்கெட்டில் அடைத்து விற்றதன் மூலம் பலரையும் சென்று சேர முடியும் என நிரூபித்தது இந்த நிறுவனம்.

ஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் !

எந்த ஒரு சந்தையிலும் ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பதைவிட, போட்டி இல்லாத புதிய சந்தையை உருவாக்கிக்கொள்வதன் மூலம் தொழிலின் போக்கையே மாற்றியமைக்க முடியும். இதைச் செய்து காட்டின மேற்கூறிய இரண்டு நிறுவனங்களும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம்கூட இந்த புளூ ஓஷன் ஸ்ட்ராடஜியைப் பயன்படுத்திதான் வெற்றிகண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா?

இந்த ஸ்ட்ராடஜியை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளோடு பொருத்திப் பார்த்தால் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். கிரிக்கெட் என்கிற ஒரு விளையாட்டு இப்போது விளையாட்டு என்பதையும் தாண்டி மிகப் பெரிய வர்த்தகம் சார்ந்ததாகவும், மக்களின் கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்றாகவும் மாறியிருக்கிறது.

நாடுகளுக்கிடையிலான பன்முகத் திறமையையும் வெளிப்படுத்தும் டெஸ்ட் போட்டி, 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி போன்றவற்றின் மரபுகளையும், விதிகளையும் உடைத்தெறிந்திருக்கிறது. ஆட்ட விதிகள் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்கிற மனநிலையை மாற்றி, கிரிக்கெட் போட்டிகள் என்றால் சினிமாவுக்கு சென்று வருவதுபோல ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி இருக்கிறது.

டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டி மைதானங்களில் கூடும் கூட்டங்கள் கிரிக்கெட் ரசிக்கத் தெரிந்த வழக்கமான பார்வையாளர்கள்தான். ஆனால், ஐ.பி.எல் மைதானங்களில் கூடும் கூட்டமோ முற்றிலும் மாறானது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என கிரிக்கெட் தெரியாதவர் களையும் மைதானத்துக்குள் கொண்டுவந்தது. ஏனென்றால், ஐ.பி.எல். போட்டிகள், கிரிக்கெட் தவிர பன்முக கேளிக்கைகள் கொண்டதாக இருக்கிறது. பல மாநிலங்கள், பல மொழிகள் பேசும் மக்களின் ரசனை வேறுபாடுகளைக் கருத்தில்கொண்டு, கிரிக்கெட் ரசனையில் புதிய பாதையை உருவாக்கியுள்ளது.  

ஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் !

வழக்கமான கிரிக்கெட் விளையாட்டுதான். ஆனாலும், அதிலிருந்து மாறுபட்டு வேறு தளத்தில் பயணிக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். மூன்று மணி நேரத்திற்குள் ஆட்டத்தின் வெற்றி தோல்வி தெரிந்துவிடும். 20 ஓவர்கள்தான் என்பதால் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும். அல்லது ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

பல நாடுகளிலிருந்தும் வரும் திறமையான வீரர்கள் கொண்ட கலவையான அணி, ஒவ்வொரு நகரத்திற்கும் முக்கியத்துவம், விளையாட்டுக்கு இடையில் கேளிக்கைகள் என பல அம்சங்களைக்கொண்டு கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு இந்திய தீவுகள் தேசிய அணியில் வாழ்நாள் முழுவதும் விளையாடினாலும் கிடைக்கும் ஊதியத்தை ஐ.பி.எல். ஒரு சீஸனில் சம்பாதித்துவிட முடியும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே கண்ணில்படுகிறார் கம்ரான் கான் என்கிற ஒரு வேகப்பந்து வீரர். இரண்டாம் ஆண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வீரராக வலம் வருகிறார். அந்த ஆண்டு அவரது சம்பளம் சுமார் 10 லட்சம். யாரென்றே தெரியாத ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரர் திடீரென்று ஜொலிக்கிறார்.

சர்வதேச வீரராக இருந்தாலும் இந்த வேக திருவிழாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் காணாமல் போவதும் நடக்கிறது.  விளையாட்டு உணர்ச்சி மட்டுமல்ல, அதையே கேளிக்கை நிகழ்வாக, கொண்டாட்டமாக புதிய பரிமாணத்தில் கொடுக்கத் தொடங்கியதுதான் ஐ.பி.எல். வெற்றிக்கு காரணம். மேற்கண்ட நிறுவனங்களின் வெற்றியும், ஐ.பி.எல். போட்டிகளின் வெற்றியும் இந்த புளூ ஓஷன் ஸ்ட்ராடஜியைக் கடைப்பிடித்ததால்தான்.

ஏற்கெனவே நம்மிடம் இருந்துவரும் தேவையில்லாத நடைமுறைகளை நீக்குவது, போட்டியாளர்களிடம் அளவுக்கு அதிகமாக உள்ள நடைமுறைகளை நீக்கிவிட்டு, நாம் எளிமைப்படுத்திக் கொடுப்பது, புதிய சந்தையைத் தேடிச் செல்ல உள்ள தடைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதை முற்றிலும் நீக்கினார்கள், அல்லது குறைத் தார்கள்.

இதேபோல, போட்டியாளர்களைவிட மேம்படுத்திய அம்சங்களோடு சந்தையைக் கைப்பற்றுவது, சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய ஒன்றை உருவாக்கியதும் மேற்கண்ட வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதை இதன்மூலம் அறிந்துகொள்கிறோம்.

உலக அளவில் இப்போது வெற்றிகரமான உத்தியாக வலம் வருகிறது இந்த நீலக் கடல் உத்தி. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இன்று இந்த உத்திகளைத்தான் பின்பற்றி வருகின்றன.

(வியூகம் அமைப்போம்)