சந்தை ஒரு மைதானம்!
##~## |
இந்த வாரம் நாம் கேம் தியரி என்கிற ஸ்ட்ராடஜி குறித்து பேசப் போகிறோம். அது என்ன கேம் தியரி? அதை நடைமுறைப்படுத்துவது எப்படி? அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பேசுவோம். 2008-ல் முதல் ஐ.பி.எல். போட்டி தொடங்கும்போது நடந்த சம்பவம் இது.
ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு அணியிலும் முன்னணி வீரர்கள், நடுநிலை வீரர்கள், புதிய வீரர்கள் தவிர, வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர் இருக்கவேண்டும், அவர்களை அதிகபட்சமாக எந்த விலை வரை ஏலம் எடுக்கலாம் என கட்டுப்பாடுகளை விதித்தார்கள். காரணம், ஓர் அணியில் எல்லா வீரர்களும் கலந்துகட்டி இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
யார் எந்த அணியில் இடம்பெறுவார் என்று தெரியாத நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ரிக்கி பாண்டிங் ஏலம் எடுக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகிவிட்டது. அதாவது, போட்டி எப்படி இருந்தாலும் ரிக்கி பாண்டிங்கை கொல்கத்தா அணிதான் ஏலம் எடுக்கும் என்பதை இதர அணி நிர்வாகங்கள் தெரிந்து கொண்டன. இதனால் ரிக்கி பாண்டிங்கை எந்த அணி நிர்வாகமும் ஏலம் கோரவில்லை. கடைசியில் மிகக் குறைவான தொகைக்கு ரிக்கி பாண்டிங்கை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துகொண்டது.
யூசுப் பதான், ராபின் உத்தப்பா போன்ற வளரும் நிலையில் இருந்த வீரர்களுக்கு கிடைத்த ஏலத் தொகையைவிட மிகக் குறைவான தொகைக்கு ரிக்கி பாண்டிங் விலை போனார். உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் இப்படி மிகக் குறைந்த விலைக்கு ஏலம்போக என்ன காரணம்?

கொல்கத்தா அணி என்ன விலை தந்தாவது ரிக்கி பாண்டிங்கை ஏலம் எடுக்கும் என்கிற ரகசியம் வெளியே கசிந்ததுதான். இதைத் தெரிந்துகொண்ட பிற அணி நிர்வாகங்கள் அவரை ஏலத்தில் எடுக்க முயலவில்லை. ஏலத் தொகையை உயர்த்திக் கேட்டு போட்டி போடலாம்தான். ஆனால், ஏலத்திலிருந்து கொல்கத்தா அணி திடீரென ஒதுங்கிவிட்டால், தேவையில்லாமல் அதிக விலை தரவேண்டியிருக்கும் என பிற அணிகள் நினைத்ததால் ஏலத்திலிருந்து ஒதுங்கின. அதாவது, ஓர் அணியின் நிர்வாக முடிவை, பிற அணிகளின் நிர்வாகங்கள் தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது.
தொழில் உலகிலும் இதேதான் நடக்கும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உங்களது போட்டியாளர்கள் தெரிந்துகொண்டால் என்ன நடக்கும்? அது உங்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும்? அதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? என்பதைச் சொல்வதுதான் இந்த கேம் தியரி ஸ்ட்ராடஜி. இதை இன்னொரு உதாரணம் சொல்லி விளக்குகிறேன்...

ஒரு குற்றம் நடக்கிறது. அதில் இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நபர்களையும் தனித்தனியாக விசாரிக்கிறது போலீஸ். குற்றவாளி யார் என்பது பற்றி போலீஸிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், விசாரணை எப்படி இருக்கும்? குற்றம் செய்தவர்களிடம் தனித்தனியாக வைக்கப்படும் ஆப்ஷன் எப்படி இருக்கும்?
ஆப்ஷன் 1 : குற்றத்தை நீ ஒப்புக்கொண்டு, அவன் ஒப்புக்கொள்ளவில்லை எனில் உனக்கு விடுதலை, அவனுக்கு அதிகபட்ச தண்டனை.
ஆப்ஷன் 2 : குற்றத்தை நீங்கள் இருவருமே ஒப்புக்கொண்டால், இருவருக்குமே மிகக் குறைந்தபட்ச தண்டனை.
ஆப்ஷன் 3 : குற்றத்தை நீ ஒப்புக்கொள்ளாமல், அவன் ஒப்புக்கொண்டால் அவனுக்கு விடுதலை, உனக்கு அதிகபட்ச தண்டனை.
ஆப்ஷன் 4: குற்றத்தை நீங்கள் இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை எனில், இரண்டு பேருக்குமே விடுதலை.
இப்போது எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம் என குற்றவாளி யோசிக்க வேண்டிய நேரம். அதாவது, இதில் நான்கு ஆப்ஷன்கள் உள்ளன. 1. தனக்கு மட்டும் விடுதலை, 2. இருவருக்கும் மிகக் குறைந்தபட்ச தண்டனை. 3. தனக்கு அதிகப்பட்ச தண்டனை,
4. இருவருக்கும் விடுதலை. இப்படி விசாரிப்பதன் மூலம் இரண்டு குற்றவாளிகளும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஏனென்றால், எப்படி பார்த்தாலும் குறைந்தபட்ச தண்டனையோடு தப்பித்துவிடலாம்.
இப்படியான ஒரு ஆப்ஷனல் விளையாட்டு தான் இந்த கேம் தியரி ஸ்ட்ராடஜி.

இந்த தியரிக்கு 1994-ல் நோபல் பரிசு வழங்கப் பட்டது. கிட்டத்தட்ட கணித முறையிலான இந்த ஸ்ட்ராடஜியைப் பொருளாதாரத் துறையில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். நாளாவட்டத்தில் தொழில் துறையிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
சந்தையில் போட்டியைச் சமாளிக்க வேண்டும்; போட்டியாளர்களோடு வித்தியாசப் பட வேண்டும்; தொழிலின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்; அதற்கு என்ன செய்யலாம் என்கிறபோது பல யோசனைகளும் உங்கள் முன் உள்ளன. இதில் எந்த யோசனையை செயல்படுத்துவது? சந்தையில் என்ன விளைவை ஏற்படுத்தும்? என்கிற கேள்விகளும் எழும். கூடவே, நாம் இதைச் செயல்படுத்தினால், போட்டியாளர்கள் இதற்கு மாற்றாக என்ன செய்வார்கள்? அதை எப்படி சமாளிப்பது என்கிற கேள்வியும் வர வேண்டும்.
உதாரணமாக, நாம் ஒரு தொழிலில் இருக்கிறோம், நமது தொழிலின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டும். அல்லது லாபத்தை அதிகரிக்க வேண்டும் என யோசனை உள்ளது. இதற்கான வாய்ப்பு என்ன? விலையைக் குறைக்கலாம்; புதிய சந்தையைத் தேடலாம்; புதிய புராடக்டை அறிமுகப்படுத்தலாம்.
சரி, இதில் முதல் ஆப்ஷனை நாம் தேர்வு செய்கிறோம் என்றால் போட்டியாளர்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும்? அவர்கள் விலையைக் குறைத்தால் போட்டி எப்படி இருக்கும்?, அந்தச் சூழ்நிலையில் நம் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?
அதாவது, இந்தத் தொழில் உத்தி எதை மையமாகக் கொண்டிருக்கிறது என்றால், நாம் ஒன்றை செயல்படுத்தும் முன், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அந்த விளைவுகளுக்கும் எப்படி செயல்படுவது என்கிற உத்திகளை வகுத்துக்கொள்வது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு போர்க்கலையை அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது என்று குறிப்பிடலாம்.

செஸ் விளையாட்டில் இப்போதும் நம்பர் ஒன் வீரராக விஸ்வநாதன் ஆனந்த் வலம் வர என்ன காரணம் என்பதை இப்போதாவது அறிந்து கொள்ளுங்கள். எதிரில் விளையாடுபவருக்கு அடுத்தது என்ன என்ன நகர்த்தல்கள் வாய்ப்பு இருக்கிறது, அவர் எந்த காய் நகர்த்தினால் நாம் என்ன காய் நகர்த்த வேண்டும் என ஒவ்வொரு நகர்த்தலுக்கும் முன்கூட்டியே யோசித்துவிடுகிறார். கிட்டத்தட்ட ஐம்பது நகர்த்தல்களை இப்படி முன்கூட்டியே யோசித்து விடுவாராம்.
அதாவது, ஒரு காயினை நகர்த்துவதற்கு முன், அப்படி செய்தால் என்ன என்ன நகர்த்தல்கள் நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டுதான் நகர்த்துவாராம். விளையாட்டாக இருக்கலாம். நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு இந்த கேம் தியரிதான் அவருக்கு கைகொடுக்கிறது. போட்டிகள் நிறைந்த சந்தையும் ஒரு மைதானம்தான் என்பது புரிந்திருக்குமே...
(வியூகம் அமைப்போம்)