மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் !

நாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் !

##~##

ஓர் ஆச்சர்யமான தகவல் உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? இன்றைக்கு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலரும் ஐ.டி. துறையில் வேலைக்குச் சேர விரும்புகிறார்களோ இல்லையோ, வங்கி வேலை கிடைக்காதா என ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோரது ஆசையும் வங்கி வேலை என்பதாகவே இருக்க, அந்த ஆசையை நிறைவேற்றுகிற மாதிரி வங்கித் துறையில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறார் டேலன்ட் ஸ்பிரின்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.ஸ்ரீதர். இன்றைக்கு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வங்கி வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும் என அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''இந்தியா முழுவதும் இருந்து ஒரு வருடத்துக்கு 50 லட்சத்துக்கும்  மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்கள். இவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.டி. படித்தவர்கள். இவர்களில் 10-லிருந்து 15 சதவிகித மாணவர்களுக்கு மட்டும்தான் ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு என்பது கிடைக்கிறது. மீதமுள்ள 50-லிருந்து 85 சதவிகிதத்தினருக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே உள்ளது. கல்லூரி மாணவர்களின் பணித் திறமையை அதிகரிக்க மத்திய அரசு  சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. தேசிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிற நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் என்கிற அமைப்பு அடுத்த பத்து வருடங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் முடிவுக்குள் புதிய வங்கிகள் ஆரம்பிக்க உரிமம் தந்துவிடுவோம் என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. மேலும், பொதுத் துறை வங்கிகளும் இதே நிதியாண்டில் 8 ஆயிரம் புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல, தனியார் மற்றும் கிராமப்புற வங்கிகளும் தங்களுடைய புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன.

நாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் !

தற்போது பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 11 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இதில் 30-லிருந்து 35 சதவிகித ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இதன் மூலமாக மட்டுமே 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அடுத்த ஆறு வருடங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் வங்கித் துறைக்கு தேவை என அசோசெம் ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் வங்கித் துறையில் உருவாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் வங்கித் துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகித ஊழியர்கள் புதியவர்களாக இருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள்!

வங்கிகளில் எழுத்தர், சிறப்பு அதிகாரிகள்தான் அதிகம் தேவைப்படு கின்றனர். இதில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் மார்க்கெட்டிங், ஐ.டி., இன்ஜினீயரிங், சட்டம், கணக்காளர் வருவார்கள். மேலும், தற்பொழுது ஓய்வுபெறும் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் இந்த சிறப்பு அதிகாரிகளே ஆவார்கள். எனவே, இனி வேலைக்குச் சேர்பவர்களுக்கு விரைவாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கல்வித் தகுதி!

நாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் !

எந்த இளநிலை படிப்பாக இருந்தாலும் இந்தப் பணிக்கு போதுமானதே. வங்கிப் பணிக்கு இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் மூலமாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்குதான் வேலை கிடைக்கும். எனவே, இந்தத் தேர்வை சிறப்பாக எழுத தயார்படுத்திக்கொள்வது அவசியம். சில தனியார் வங்கிகள் தாங்களே தேர்வை நடத்திக்கொள்கின்றன. இந்தத் தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது.

வங்கிப் பணிக்கான தேர்வில் பத்தாம் வகுப்பு கணிதம், ஆங்கிலம்தான் பெரும்பாலான கேள்விகளாக  இருக்கும். அதனுடன் பொது அறிவு சார்ந்த கேள்வி அதிகம் இருக்கும். தீர்வு கண்டுபிடிக்கும் திறமை, கணினி அறிவு ஆகியவை இருந்தாலே போதும்.

செய்ய வேண்டியவை!

இந்தத் தேர்வில் 200 வினாக்களுக்கு 120 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். அதாவது, ஒரு கேள்விக்கு பதிலளிக்க அதிகபட்சம் 36 வினாடிகள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, இந்தத் தேர்வில் வேகமாக பதில் கண்டுபிடிக்கும் திறமையுடையவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.

கேள்விகள் தீர்வு கண்டுபிடிக்கும் வகையிலே இருக்கும். இதில் உங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட பாடம் எவ்வளவு தெரியும் என்பதைவிட உங்களால் எவ்வளவு வேகமாக விடை கண்டுபிடிக்க முடியும் என்பதே தேர்வின் நோக்கம். தரப்படும் கணக்குக்கு வேகமாக விடை கண்டுபிடிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். இந்தத் தேர்வில் புதிர் போட்டிகளுக்கு விடை கண்டுபிடிக்கும் வகையிலும் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம்.  

பொது அறிவு என்ற பகுதியில் பொருளாதாரம், வங்கித் துறை சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படும். இதற்கு தினமும் ஏதாவது ஒரு நல்ல பிசினஸ் நாளிதழைப் படிப்பது அவசியம். அதனுடன் ஆங்கிலத்தில் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.

நாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் !

மொத்தம் உள்ள பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்ஆஃப் மதிப்பெண் உண்டு. அதேபோல, தவறான  பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் உண்டு என்பதையும் கவனியுங்கள்.  ஏனெனில், இந்தத் தேர்வில் அனைத்துப் பாடப் பிரிவிலும் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தமிழகத்தில் தேர்வு எழுதுபவர்களில் அதிகமான வர்கள் இந்தப் பொது அறிவு பகுதியில்தான் தோல்வி அடைகிறார்கள்.

அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், இதில் குடும்ப உறவுமுறைகளை வைத்து எல்லாம் கேள்விகள் கேட்கப்படும். சில கேள்விகளில் பதிலுக்காகத் தரப்படும் ஆப்ஷன்களில் இருந்தே விடையைக் கண்டுபிடிக்க முடியும். எந்த வகையான கேள்விகளில் இப்படி இருக்கும் என்பதைக் கணிக்கும் திறமை வேண்டும்.

இந்தத் தேர்வு என்பது முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெறும் தேர்வு என்பதால் நீங்கள் இதற்கு அதிக பயிற்சி எடுப்பது அவசியம். மாதத்துக்கு ஒருமுறை ஒரு பயிற்சிக்காக ஆன்லைனில் தேர்வு எழுதி பழகுவது நல்லது.

- இரா.ரூபாவதி,
படங்கள்: பா.கார்த்திக்.