மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அவசியமான அடிப்படை வேலைகள்!

அவசியமான அடிப்படை வேலைகள்!

##~##

வீட்டு வேலைகளைத் தொடங்கிவிட்டோம். இனி எந்த இடத்திலும் தேங்கிவிடாமல் திட்டமிட்டபடி முடிப்பதுதான் இப்போது நம் முன்னுள்ள மிகப் பெரிய சவால். சின்னச் சின்ன தடங்கல்கள் முதற்கொண்டு, பெரிய பெரிய இடையூறுகள் வரை நம்முன் வந்து வரிசைக்கட்டி நிற்கும். எதற்கும் அசராமல் ஒவ்வொன்றையும் நிதானமாக எதிர்கொண்டு தாண்டிச் செல்லும் மனநிலை கட்டாயம் வேண்டும். அதாவது, வீடு கட்டுவதைக் கிட்டத்தட்ட தவம் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் அந்தத் தவத்தைக் கலைத்துவிடக் கூடாது.

நம்மால் என்ன முடியும், எந்தெந்த வகையில் நமக்கு உதவிகள் கிடைக்கும் என எல்லாவகையிலும் யோசித்த பிறகே வீடு கட்டும் முடிவை எடுத்திருப்பதால், எந்தக் குழப்பமும் இல்லாமல் நமது வேலைகளைத் தொடங்க வேண்டும்.  

சரி, இப்போது நமது மையமான இலக்கை நோக்கி வருவோம். ஒரு முழுநிறைவான வீட்டைக் கட்டிமுடித்து கிரஹப்பிரவேசம் செய்வது வரை நமக்குத் தேவையான ஆதாரம் பணம். அதற்கு என்ன செய்யப் போகிறோம், நமது கையில் எவ்வளவு உள்ளது, வெளியிலிருந்து எவ்வளவு திரட்ட முடியும், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும், அதற்கான வழிமுறைகள் என்ன? என எல்லா வற்றையும் திட்டமிட வேண்டும். நமது மொத்த பட்ஜெட் எவ்வளவு என்கிற தெளிவு கிடைத்தவுடன்தான் வேலையில் இறங்க வேண்டும். அல்லது எத்தனை சதுர அடியில் நமக்கு வீடு தேவைப்படும், அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதைத் தெளிவாக தெரிந்துகொண்டு வேலையில் இறங்குவது சிறப்பு.  

அவசியமான அடிப்படை வேலைகள்!

இதில் முதல்கட்டமான வேலை, வீட்டுக்கு வரைபடம் போடுவது. வீட்டுக்கான வரைபடத்தை வைத்துதான் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். வங்கி யிலிருந்து வீட்டுக் கடன் வாங்காமல் வீடு கட்டுகிறோம் என்றாலும் வரைபடம்தான் முதன்மையான தேவை. இந்த வரைபடத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்து அவர்கள் வழங்கும் அனுமதியின் பேரில்தான் கட்டுமான வேலைகளைத் தொடங்க முடியும். எனவே, முதல் வேலை வீடு வரைபடம் போடுவதும், அதற்கு அனுமதி வாங்குவதும் அவசியம். இதைத் தொடர்ந்து வங்கிக் கடன் வாங்க ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.

இந்த வேலைகளை நாம் அடுத்தடுத்து விரிவாகப் பார்க்கும்முன், நமது மனையில் சில முன்னேற்பாட்டு வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த வேலைகளைச் செய்து வைத்துக்கொண்டு ரெடியாக இருந்தால்தான், வரைபடத்துக்கு அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைத்ததும் மளமளவென வேலைகளைத் தொடங்க முடியும். இல்லையென்றால் காலதாமதம் ஆவதைத் தவிர்க்க முடியாது.

அப்படியென்ன முக்கியமான வேலை என்கிறீர்களா... நாம் சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்ததைப்போல மின் இணைப்பு பெறுவதும், தண்ணீருக்கான ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும்.

அவசியமான அடிப்படை வேலைகள்!

மின் இணைப்புக்கான நடைமுறைகள் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஆம், நமக்கு உடனடி மின் இணைப்பு தேவைப்படுகிறது என்று அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறோம் என்றால், மின் வாரிய ஊழியர்கள் வந்து இடத்தைப் பார்வையிட்ட பிறகுதான் மின் இணைப்பு பெற எவ்வளவு செலவாகும் என்பதைச் சொல்வார்கள். ஏனென்றால், மனைக்கு அருகிலேயே மின் கம்பங்கள் இருந்தால் அதிக செலவுகள் கிடையாது. உடனடியாக இணைப்பு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அருகே மின் பாதைகள் இல்லாத இடமாக இருந்தால், நமது இடம் வரை மின் கம்பங்கள் நட்ட பிறகுதான் மின் இணைப்பு கிடைக்கும்.

இப்படி மின் கம்பங்கள் நடுவதற்கான தொகையை நாம்தான் முழுவதுமாகக் கட்ட வேண்டியிருக்கும். அந்தப் பகுதிக்கு மின் பாதை வரும்வரை காத்திருக்கலாம் என்றால் திட்டமிட்டபடி வேலையைத் தொடங்க முடியாது. இப்படி நாம் மட்டும் மொத்த செலவும் செய்து மின் இணைப்பு கொண்டு வந்திருப்போம். ஆனால், அடுத்தடுத்து அந்தப் பகுதியில் வீடு கட்டுபவர்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருக்காது. தவிர, நாம் செலவு செய்ததை

அவசியமான அடிப்படை வேலைகள்!

அவர்களிடம் பெறவும் முடியாது.

ஆகவே, சில இடங்களில் இந்த சுமை நம்மைச் சார்ந்ததாகவே இருக்கும். இதில் நமது வசதி எப்படியுள்ளது என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும். மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க நம்மைப் பற்றிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கிய சான்று, பட்டா மற்றும் ஆவணங்களின் நகல்கள் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த இடத்தில் வசிக்கிறோம் என்பதற்கான சான்று நமக்கு எதுவும் இருக்காது என்பதால், இந்த ஆவணங்களை இணைப்பது அவசியமாகும். மேலும், இந்தக் காலகட்டத்தில் கட்டட வரைபட அனுமதி வாங்கப்பட்டிருந்தால் அதில் ஒரு காப்பியும் இணைப்பது நல்லது. மின் வாரிய ஊழியர்கள் வந்து பார்வையிட்டு, மின் இணைப்புக்கான முன் ஏற்பாடுகளை வலியுறுத்துவார்கள். அதற்கேற்ப நமது மனைக்குள் ஓர் ஓரமாக சிறு கீற்றுக் கொட்டகை அமைத்து மின் பெட்டியை அமைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த மனை காலியாகத்தானே இருக்கிறது என்று நமது மனைக்கு வெளியே இந்த வேலைகளைச் செய்யக்கூடாது.

இதே நாட்களில் செய்யவேண்டிய இன்னொரு வேலை, நாம் வீடு கட்டப்போகும் இடத்துக்கு இதுவரை சொத்து வரிதான் கட்டி வந்திருப்போம். அதாவது, காலிமனை என்கிற அடையாளம்தான் இருக்கும். இதை மாற்றி வீட்டு வரி என்கிற வகைக்குள் கொண்டுவர வேண்டும். கட்டட வரைபட அனுமதியோடு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அணுகினால் இந்த மாற்றத்தைச் செய்து தருவார்கள்.

அடுத்ததாக, தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். இது சம்பந்தப்பட்ட பகுதி சார்ந்து செலவு வைக்கும். சில இடங்களில் முப்பது அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும். சில இடங்களில் நூறு, இருநூறு அடிகள் கீழே செல்லலாம். ஆனால், எப்படி இருந்தாலும் நமக்கு என்று சொந்தமாக ஒரு போர்வெல் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டுமான வேலைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், இந்த வேலையையும் முன்னமே முடித்துக் கொள்ள வேண்டும்.

முப்பது அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் பகுதியாக இருந்தால், குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். தவிர, நமது தேவைக்கு ஏற்ப மின் மோட்டார் வாங்கிக்கொள்ளலாம்.  கடின மண்வாகு கொண்ட இடங்கள் அல்லது நூறு, இருநூறு அடிகளுக்கு கீழே இறக்கினால் 35,000 முதல் அதிகபட்சமாக 50,000 வரை செலவு பிடிக்கும். நிலத்தடி நீர் இல்லாத இடமாக இருந்தால் கட்டுமான வேலைகளுக்குத் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கவேண்டும். அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆனால், வாய்ப்பிருக்கும் இடங்களில் போர்வெல் போட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நாம் இதையெல்லாம் அழுத்திச் சொல்லக் காரணம், ஒவ்வொரு விஷயத்திலும் எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறையாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். சில நேரங்களில் இந்த வேலைகளை 'கொஞ்சம் முன்ன பின்ன பார்த்துக்கலாம்’ என்று அசட்டையாக இருப்போம். இதுவே, நமக்கு சிக்கல்களை உருவாக்கும். வேலைகளை முடித்துக்கொண்டு போய் நின்றால், அனுமதிகள் கிடைப்பதற்கோ, ஆவணங்கள் மாற்றுவதற்கோ காலதாமதம் ஆகலாம், அல்லது வேறு வகைகளில் உங்களுக்கு பண விரயம் ஆவதற்கு வழிவகுக்கும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்கும்போது சட்டரீதியாக நாம் பாதுகாப்பான பயணத்தில் இருக்கிறோம் என்பதால் எந்தச் சிக்கல்கள் வந்தாலும் எதிர்கொள்வதில் நேர்மையாகச் செயல்பட முடியும்.

இப்போது நமது கனவு இல்லத்தின் முதல்கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளோம்... சரி, கனவு இல்லம் எப்படி அமையும்? எந்த வகையில் வரைபடம் வடிவமைப்பது? அதற்கான அனுமதிகள் எங்கு வாங்குவது? குழப்பமாக இருக்கிறதா..? அடுத்த வாரம் தெளிவாகப் பார்த்துவிடலாமே!

(கனவை நனவாக்குவோம்)

நீரை. மகேந்திரன்