மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

''சொந்தமாகத் தொழில் தொடங்கப் போறீயா? ரொம்ப ரிஸ்க் ஆச்சே? ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை?'' சொந்தத் தொழில் தொடங்க ஆசைப்பட்ட கடந்த கால இளைஞர்கள் பலரும் கடந்துவந்த கேள்வி இது.

சொந்தமாகத் தொழில் தொடங்குவது ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்வது என்கிற மனநிலை கடந்த முப்பது வருடங்களுக்கு முன்புவரை இருந்ததைப் பலரும் அறிந்திருக்க முடியும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் என்றால் திருமணத்துக்கு பெண் கிடைப்பதுகூட பெரும்பாடாக இருக்கும். ஐயோ பிசினஸ் லாஸ் ஆகி விட்டால் வருமானத்துக்கு என்ன பண்ணுவது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் இதற்குக் காரணம்.

தொழில் குடும்பமாகவோ அல்லது சமூகப் பின்புலமோ இருந்தால் மட்டுமே சொந்தத் தொழிலில் வெற்றி பெற முடியும் என்கிற மனநிலை காரணமாகவும் புதியவர்கள் எவரும் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டினார்கள். இந்த சமூக விதிகளைத் தாண்டி, தொழிலில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட சிலர் சொந்தத் தொழில் முயற்சிகளில் இறங்கி னாலும், அதில் வெற்றி அடைந்தவர்களின் எண்ணிக்கைக் குறைவுதான்.

உத்தரவாதமான வருமானம் என்றால் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பதுதான். கடந்த கால வரலாறுகளைக் கேட்டறிந்தவர்கள் இதை உணர முடியும். ஆனால், இந்தப் போக்கு இன்று பெருமளவு மாறியுள்ளது. நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், அதில் ஈடுபடாமல் சொந்தமாகத் தொழில் தொடங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

இதுபற்றி எல்லாம் நான் ஏன் இப்போது பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆம், தொழில் முனைவோர்களைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போகிறேன். ஏதோ ஒரு தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது, அதற்குமேல் பேசுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், இந்த மனநிலையைத் தாண்டியவர்கள் மட்டுமே வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக நிலைத்து நிற்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்களோடு போட்டிபோட முடியாது. நம்மால் முடிந்தவரையில் செய்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சந்தையில் பெரிய நிறுவனமாக இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்பதில்லை. எங்கிருந்து எப்படி செயல்படுகிறோம், வெற்றிக்கு எப்படி திட்டமிடுகிறோம் என்பதே முக்கியம்.

தைரோகேர் டெக்னாலஜீஸ் நிறுவனம் தைராய்டு பரிசோதனை யில் இந்திய அளவில் முன்னணி பரிசோதனைக் கூடமாக உள்ளது. 700 கிளைகளுடன், ஒரு நாளில் 20,000 ஆய்வுகளைச் செய்கிறது. இதன் நிறுவனத் தலைவர் வேலுமணி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள அப்பணிக்கம்பட்டிபுதூர்தான் இவரது சொந்த ஊர். அப்பா, ஒரு கூலி விவசாயி. அரசுப் பள்ளியில் படித்தவர். இப்படியான பின்புலம்கொண்ட வேலுமணி, இன்று ஒரு பெரிய நிறுவனத்தைக் கட்டி எழுப்பியது எப்படி?

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

1996-ல் ஒரு லட்சம் ரூபாயோடு தொடங்கப்பட்ட நிறுவனம் தைரோகேர். இத்தனைக்கும் வேலுமணி மருத்துவம் படித்தவர் இல்லை.  அவர் தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவரும் இல்லை. பணம் இருக்கிறது என்பதற்காகவும் தொழில் தொடங்கவில்லை. பின் எப்படி சாத்தியமானது இந்த வெற்றி என்றால் சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றி யதுதான்.

தைராய்டு கெமிஸ்ட்ரி ஆராய்ச்சிப் படிப்புக்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்த காலத்தில், அங்குள்ள ஆய்வு மையத்தில் தைராய்டு பரிசோதனைக்காக ஏராளமான நோயாளிகள் காத்திருப்பார்கள். வரிசை சாலை வரை நீண்டு நிற்கும். அதாவது, தைராய்டு பரிசோதனைக்காக சிறப்பு ஆய்வுக்கூடம் அப்போது எங்கும் இல்லை. இந்தச் சூழலைப் புரிந்து கொண்ட வேலுமணி தைராய்டு சிகிச்சை மையத்தைத் தனியாக தொடங்கினார். பெரிய லாப நோக்கம் இல்லாமல் சமூக நோக்கதோடு தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி.

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

வேலுமணியைப்போல இன்றைக்கு பலரும் உருவாகி வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, திறமையின் மீது நம்பிக்கை, சூழலைப் புரிந்துகொள்வது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது, வாய்ப்புகளையும், வளங்களையும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக்கொள்வது என இவர்களது வெற்றிக்கு பின்புலமாக பல தொழில் தந்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சந்தையின் வாய்ப்புகளைத் தெரிந்துகொண்டு, அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் தொழில் முனைவோர்களின் அடிப்படை. அதை சரியாக பயன்படுத்தியவர்கள்  ரோல்மாடல் ஆகிறார்கள்.

தொழில் முனைவோர்கள் எப்படி உருவா கிறார்கள் என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன். ஒரு வங்கி அந்த வருடத்தின் அதிக பரிவர்த்தனைகள் செய்த ஒரு  வாடிக்கையாளரை கவுரவிக்க நினைக்கிறது. ஒரு தொழிலதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வங்கி ஒரு விண்ணப்பம் அளித்து அவரிடம் கையெழுத்து கேட்கிறது. அவரால் கையெழுத்து போட முடியவில்லை. காரணம், அவருக்கு கைநாட்டு வைக்கவே தெரியும். ''படிக்காமலே இத்தனை முன்னேற்றம் எனில், நீங்கள் படித்திருந்தால்..?'' என்று கேட்டார் மேனேஜர். ''படித்திருந்தால் கோயிலில் மணி அடித்துக் கொண்டு இருப்பேன்'' என்றார் பெரியவர்.அப்படியா என்று வாய்பிளந்து நின்ற வங்கி மேனேஜருக்கு தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் அந்தப் பெரியவர்.

''எழுதப் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே கோயிலில் வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு விதிமுறை காரணமாக எனக்கு வேலை போனது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கோயில்வாசலில் நின்றபோது, ஏழெட்டு பேர் இங்கு ஏதாவது இருக்கா என்று தேடி வந்தனர். அப்போதுதான் அந்த இடத்தில் நாம் ஏன் ஒரு பெட்டிக்கடை தொடங்கக் கூடாது  என்கிற யோசனை வந்தது. இப்படியே ஒவ்வொரு இடமாகப் பார்த்து கடை தொடங்கி தொழிலதிபர் ஆனேன்'' என்றாராம்.

ஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்

பலருக்கும் தெரிந்த வேடிக்கையான இந்தக் கதையில் ஓர் உண்மை இருக்கிறது. எந்த இடத்தில் என்ன தேவை என்பதை அறிந்து சமயோசிதமாகச் செயல்படும்போதுதான் ஒரு தொழில் முனைவோர் உருவாகிறார்.  இங்கு நான் தொழில் முனைவோர்கள் என்று குறிப்பிடுவது வெறும் லாப நோக்கத்தோடு செயல்படுபவர்களை மட்டுமல்ல, லாப நோக்கமற்ற, சேவை மனப்பான்மை கொண்ட எந்த ஒரு நிறுவனத்தைத் தொடங்குபவர்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

தொழில் அல்லது சேவை எந்தவகையிலானதாக இருந்தாலும் தொழில் தந்திரங்களைப் பயன்படுத்தும்போது லாபம் அல்லது நோக்கம் விரிவடைகிறது. வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி என எல்லாவகையிலும் தொழில் முனைவோர்கள் இந்தச் சமூகத்துக்கு பெரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.

லாபநோக்கம் கொண்ட நிறுவனமாக இருந்தால் அந்த லாபத்தை முதலீட்டாளர்கள் பிரித்துக்கொள்ளலாம். அல்லது தொழிலை விரிவுபடுத்த பயன்படுத்திக்கொள்ளலாம். சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால், அதை இன்னும் அதிக மக்களுக்கு கொண்டுசெல்ல முடியும். இன்று நூறு பேருக்கு செய்யக்கூடிய சேவையை நாளை ஆயிரம் பேருக்கு கொண்டு செல்லலாம். தேங்கி நிற்கும் சமூக வளத்தை ஒருங்கிணைப்பது, அதை வெளிக்கொண்டு வருவது என்கிற வகையில் தொழில் முனைவோர் களின் பங்களிப்பும் உள்ளது.

ஆனால், நிஜத்தில் எல்லா தொழில் முனைவோர்களும்  வெற்றி பெற்றுவிடுவதில்லை. நூறு பேர் போட்டிபோடும் இடத்தில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார் என்பதே உண்மை. ஏதோ ஒரு வேகத்தில் தொழிலை தொடங்கிவிட்டு, இடையில் ஏற்படும் தொய்வின் காரணமாக அப்படியே முடங்கிவிடுகிறார்கள். தொழில் முனைவோர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அவற்றை சரிசெய்து சமாளிக்க வேண்டிய உத்திகள் என்ன? வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களின் அனுபவம் என்ன? என்பதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

(வியூகம் வகுப்போம்)