மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

ஸ்ட்ராடஜி 23

##~##

தொழில்முனைவோர்கள் எப்படி உருவாகிறார்கள் என்று சென்ற வாரம் பார்த்தோம். தொழில்முனைவோர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் என்ன? என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

கனவு காணுங்கள்!

சொந்தத் தொழில் தொடங்குவதற்கான முதற்புள்ளி கனவு காணுவதுதான் என்றால் நம்புவீர்களா? சொல்வதற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் கனவு காணுங்கள் என்கிற கான்செப்ட் தொழில்முனைவோர்களை இயக்கக்கூடிய உந்துசக்திகளில் ஒன்று.

தூங்குபவர்களுக்குத்தான் கனவு வரும். விழித்திருப்பவர்களுக்கு எப்படி வரும் என்கிற கேள்வி  லாஜிக்கலாக யோசிப்பவர்களுக்கு சரியாகத் தோன்றும். ஆனால், தொழில்முனைவோர்கள், கனவை நினைவாக்கும் வரை தூக்கத்தைத் துறக்கிறார்கள். இது வெற்றி பெற்றவர்களின் பாடம். எனவே, கனவு காணுங்கள்.

ஐடியா!

சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்றால், ஐடியா புத்தம் புதிதாக இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே தொழிலில் இருக்கும் ஐடியாவிலிருந்து வித்தியாசப்பட்டிருக்க வேண்டும். உங்களுக்கான சந்தையில் அந்த ஐடியாவை வேறு எவரும் முயற்சி செய்திராத வகையில் ஸ்ட்ராங்க்-ஆனதாக இருக்க வேண்டும். சரியான ஐடியா இருந்தால்தான் அதை வைத்து வெற்றிகரமாக பயணிக்க முடியும்.

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

எதிர்பார்ப்பு!

சந்தையில் நம்மால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?, அதைச் செய்வதற்கான சூழல் இருக்கிறதா?, ஆரம்பத் தடைகளை சமாளிப்பது எப்படி?, தொழில் நடைமுறை கள் மீதான தெளிவு வேண்டும். தொழிலை தொடங்கிய பிறகு, இவற்றில் நமக்குத் தெளிவில்லை எனில், இலக்கை சென்றடைய முடியாது. நம்மால் முடியும். அதை செய்வதற்கான வழிமுறைகளை காண வேண்டும் என்கிற மனநிலை இருக்க வேண்டும்.  

சொந்தமாகத் தொழில் தொடங்க எல்லாம் சிறப்பாக அமைந்து வரலாம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துகிறபோது பல்வேறு சிக்கல்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். அப்படி எந்தவகையிலான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதைப் பார்ப்போம்.

டீம்!

தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு துறையில்தான் தேர்ச்சி பெற்றவர் களாக இருப்பார்கள். ஆனால், தொழில் வளர வேண்டும் என்றால் எல்லா வகையிலும் பன்முக ஆளுமை தேவைப்படுகிறது. ஐடியா மட்டும் போதுமானதாக இருக்காது. உற்பத்தி, சந்தைப்படுத்துதல், நிர்வாகம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தினால்தான் சந்தையில் நிற்க முடியும். எனவே, இந்த துறை சார்ந்த திறமைசாலிகளைக்கொண்ட ஒரு டீம் அவசியமாகிறது. ஆனால், நடைமுறையில் தொழில்முனைவோர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. தொழிலைத் தொடங்கினால் ஐடியா முதற்கொண்டு கணக்குவழக்குகளை கவனிப்பது வரை அவர்களே கவனம் செலுத்துகின்றனர்.

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

தெளிவில்லாத பணப் பரிவர்த்தனைகள்!  

முதலீடு சார்ந்த விஷயங்களில் தொழில் முனைவோர்கள் மிகப் பெரிய தவறுகளை சந்திக்கின்றனர். திட்டமில்லாமல் செலவு செய்வது; நீண்டகால தேவை, குறுகிய கால தேவைகளில் குழப்பமான மனநிலையோடு இருப்பது; உற்பத்தி சார்ந்த வேலைகளுக்கு மூலதனம் திரட்டினால் அதை இயந்திரம் வாங்க, கட்டடம் போன்ற நீண்டகால திட்டங்களில் முடக்குவது. உற்பத்திக்கான மூலப்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி, கடனுக்கு விற்பனை செய்வது என பணம் சார்ந்த விவகாரங்களில் நிகழும் தவறுகள்.

ஆபரேஷனல் பவர்!

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

தொழிலில் அனைத்து வேலைகளும் தனது கண்பார்வையில் நடக்க வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மைதான் இந்த ஆபரேஷனல் பவர். பெரிய ஆர்டர்கள் முதற்கொண்டு சிறிய வேலைகள் வரை தனது முன்னிலையில் அல்லது தனது ஒப்புதலோடுதான் நடக்க வேண்டும் என்று நினைப்பது. நிர்வாக ரீதியாக சாதாரணமாக எடுக்கக்கூடிய முடிவுகளைக்கூட தனது ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும் என்று நினைப்பது. உடனடியாக செய்யவேண்டிய வேலைகள்கூட இதன் காரணமாக தாமதமாகவே நடக்கும். நிர்வாக இயந்திரத்தைக் குறுகிய வட்டத்துக்குள் செயல்படவே இது வழிவகுக்கும். இந்த மனநிலையில் நீங்கள் வேண்டுமானாலும் மனம் மகிழலாம். ஆனால், நீங்கள் நடத்தும் தொழில் வேகமாகத் தொய்வடையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சிஸ்டம்!

ஒவ்வொரு வேலைக்கும் பொறுப்பானவர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களது முடிவுகளில் தொழில்முனைவோரின் தலையீடு காரணமாக அத்தியாவசியமான, அவசியம் நடக்கவேண்டிய வேலைகள் முடங்கும். நாம் எந்த முடிவு எடுத்தாலும், அவர் தலையிட்டு வேறொரு முடிவெடுக்கக்கூடும் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டால் பணியாளர்களின் வேலைத்திறன் குறையும். அதிகாரங்களில் தலையிடும் பண்பு கொண்ட தொழில்முனைவோர்கள் வெற்றியாளர்களாக உருவாவதில்லை.

அதிகாரம் போகாது!

தொழிலை மேற்கொண்டு வளர்த்தெடுக்க கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறது அல்லது விரிவாக்க ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்கிறபோது சிலர் தயக்கம் காட்டவே செய்கின்றனர். இதனால் தனக்குள்ள அதிகாரம் கைவிட்டுப் போயிவிடுமோ என்பதே அவர்கள் காட்டும் தயக்கத்துக்கு காரணம்.  வெளி நபர்களிடத்தில் மூலதனம் திரட்டினால், அவர்களுக்கு பதில்சொல்ல வேண்டும், அல்லது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைமையைத் தொழில் முனைவோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள்!

லாபத்தைக் கட்டுப்படுத்துவது!

சந்தையில் தொழிலுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், தங்களது எல்லைக்குட்பட்ட வகையில் மட்டும் தொழில் செய்தால் போதும் என்று நினைப்பார்கள். இதற்குமேல் வளர்ந்தால் என்னால் கவனிக்க முடியாது என்கிற மனநிலை காரணமாக குறுகியவட்டத்தைத் தாண்டி வெளியேறாமல் இருப்பது. இந்த அளவுக்கு லாபம் கிடைத்தால் போதும் என்கிற வரம்பை வைத்துக்கொள்வதால் புதிய முயற்சிகளில் இறங்குவதில்லை.

மேற்கண்ட வகையில்தான் தொழில் முனைவோர்களில் தவறுகள் அமைகின்றன. இதன்காரணமாக என்ன நடக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது சந்தையைத் தாண்டி தொழில் வளர்ச்சி அடைவதில்லை. அதாவது, வளர்ச்சிக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையிலான போராட்டமும், நிர்வாகத் துக்கும், அதிகாரத்துக்கும் இடையிலான போராட்டமுமாக தொழிலின் வளர்ச்சி அமைந்துவிடுகிறது.

இந்தக் கட்டங்களைத் தாண்டிய தொழில்முனைவோர்கள்தான் தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு வளர்த்துக்கொண்டு செல்கின்றனர். இப்படி சந்தையில் நிலைத்து நிற்கும் தொழில்கள்தான் குடும்பத் தொழிலாகவும் வளர்கிறது.

(வியூகம் வகுப்போம்)