மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்!

சொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்!

##~##

இப்போது நமது கனவு இல்லத்தின் முதல்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டோம். கட்டுமான வேலைகளுக்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் வேளையில் நமது கனவு இல்லத்துக்கான வடிவமைப்பை செய்துகொள்ள வேண்டியதும் முக்கியம்.

நமது பட்ஜெட் எவ்வளவு அல்லது நமக்கு எத்தனை சதுர அடியில் வீடு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் வீட்டுக்கான வடிவமைப்பைச் செய்துகொள்ள வேண்டும். நமது மனையின் பரப்பளவு அதில் அனுமதிக்கப்பட்ட கட்டுமானப் பரப்பளவு இவற்றைப் பொறுத்து நம் கனவு வீட்டை வடிவமைத்துக்கொள்ளலாம். அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு வடிவமைப்பாளரிடம் நமது தேவைகளுக்கு இந்த வடிவமைப்பைக் கேட்டு வாங்கவேண்டும்.

இந்த வடிவமைப்பு நமது பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். எத்தனை சதுர அடியில் வீடு அமைய உள்ளது, அதற்கு எவ்வளவு செலவாகும் என்கிற தோராய மதிப்பை வடிவமைப்பாளரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக, நமது பட்ஜெட்டைவிட தோராய மதிப்பு 6 - 8%  வரை குறைவாக இருப்பதுபோல பார்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், எதிர்பாராத செலவுகள், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம், வேறு சில சில்லறை வேலைகளைச் செய்வதற்கு என இந்தத் தொகை செலவாகும் என்பதால் நமது பட்ஜெட்டில் இந்தத் தொகையை ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்!

வங்கிகள் தரும் வீட்டுக் கடனை பெற்றுதான் நமது கனவு வீட்டைக் கட்டப்போகிறோம் எனில், எவ்வளவு தொகைவரை வீட்டுக் கடன் கிடைக்கும்? குடும்பத்தில் யார், யாருக்கு கடன் வாங்கும் தகுதி உள்ளது? கடனை திரும்பச் செலுத்தும் திறன் மற்றும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. வங்கிக் கடன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நாம் ஒரு ப்ளான் போட்டிருப்போம். ஆனால், கடன் கிடைப்பதில் சிக்கல் இருந்தால் நிலைமை சிக்கலானதாக மாறிவிடும். எனவே, வீட்டுக்கான வடிவமைப்புப் போடுவதற்கு முன்பே நமது பணபலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், நமது திட்ட வரைபடம், திட்ட மதிப்பு ஆகியவற்றையும் அளிக்க வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. எனவே, இந்த வேலைகளில் கூடுதல் கவனம் தேவை.

சொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்!

சரி, கட்டட வரைபடம் தயாராகிவிட்டது. அடுத்து, கட்டட அனுமதி வாங்குவதற்கான நடைமுறை வேலைகள் என்ன என்பதைப் பார்ப்போம். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் இதற்கான அனுமதிகள் வாங்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தால் மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி பகுதிகளில் நகராட்சி திட்ட அலுவலர்கள், ஊராட்சி பகுதிகள் என்றால் ஒன்றிய அளவிலான திட்ட இயக்குநர்களிடம் இந்த அனுமதி பெற வேண்டும். ஏற்கெனவே அப்ரூவல் வாங்கிய மனைப்பிரிவுதான் என்பதால், வரைபடமும் அதற்குண்டான விதிமுறைகளோடுதான் இருக்க வேண்டும். நமது கட்டட வரைபடம் இந்த விதிமுறைகள்படி இருந்தால் சிக்கல் இல்லை. ஆனால், விதிமுறைகளில் சற்று மாறுதல் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி சரிசெய்து தரச் சொல்லலாம். இல்லாவிட்டால் நமது வரைபடத்துக்கான அனுமதியை அதிகாரிகள் தராமல் போவதற்கு வாய்ப்புண்டு. எனவே, எந்த வகையிலும் விதிமுறைகள் மீறாமல் வரைபடம் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் கொடுத்த 30 நாட்களுக்குள் இந்த அனுமதி நமக்கு கிடைக்கக்கூடும்.  இந்தக் கட்டட வரைபட அனுமதியில் சம்பந்தப்பட்ட அலுவலரின் கையெழுத்து, முத்திரை இருக்க வேண்டும். இந்த அனுமதி வாங்கியபிறகே கட்டட வேலைகளில் இறங்க வேண்டும். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தில் வீட்டு வேலைகளைத் தொடங்க வேண்டாம். ஏனென்றால், அனுமதி இல்லாமல் வீடு கட்ட தொடங்கிவிட்டீர்கள் என்று சொல்லியே உங்களுக்கான அனுமதி தருவதில் காலதாமதம் செய்யலாம்.

வீட்டு வரைபடத்துக்கான அனுமதி வாங்கிய பிறகே வீட்டுக் கடனுக்கு வங்கியில் விண்ணப்பிக்க முடியும். நமது திட்ட மதிப்பில் 80 சதவிகிதம்வரை வங்கிக் கடன் கிடைக்கும். மீதமுள்ள தொகையை நாம்தான் ரெடி செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதைத்தான் வங்கிகள் விரும்புகின்றன. அப்போதுதான் கடனை திருப்பிச் செலுத்தும் வாய்ப்புள்ளது என வங்கிகள் நம்புகின்றன. வயது அதிகரிக்க அதிகரிக்க நமது திருப்பிச் செலுத்தும் மாதத் தவணை அதிகமாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் வயது வரம்பு சம்பளதாரர்களுக்கு ஓய்வுபெறும்வரை, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு 65 வயது வரை என வைத்திருப்பதால் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், நமது குடும்பத்தில் வேறு நபர்கள் வருமானம் ஈட்டும் தகுதியோடு இருந்தால் அவர்களையும் கடனுக்கான இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக்கொள்ளலாம். மனை நமது பெயரில் இருக்கும்பட்சத்தில் வேறு நபர்கள் பெயரில் கடன் கிடைக்காது. எனவே, முதன்மை விண்ணப்ப தாரராக நாமும், இணை விண்ணப்பதாரராக வேறு நபர்களையும் இணைத்து கடன் கோர வேண்டும்.

சொந்த வீடு : வரைபடமும் வங்கிக் கடனும்!

வீட்டுக் கடனுக்கான திட்டமிடுதலில் மனைக்குரிய ஆவணங்களோடு, கடந்த ஒரு வருடத்துக்கான மாதச் சம்பள பட்டியல், வங்கிப் பரிவர்த்தனை பட்டியல், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பான் கார்டு, வேறு கடன்கள் இருந்தால் அதுகுறித்த விவரம் போன்றவை தேவை. எனவே, இந்த ஆவணங்களையும் அடித்தல் திருத்தல் இல்லாமல் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் முன்யோசனையோடு செயல்பட்டிருந்தால்தான் நல்லது.  

ஏற்கெனவே வேறொரு கடன் இருக்கிறது அல்லது பரிவர்த்தனைகள் சரியாக இல்லை என்கிறபோது கடன் மறுக்கப்படலாம் அல்லது கடன் தொகை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும்போது சிபில் அறிக்கையில் பார்த்து, அதில் உங்களுக்கான ரேட்டிங் எப்படி இருக்கிறது என்பதைக் கட்டாயம் பார்க்கும் (பார்க்க சிபில் குறித்த பெட்டிச் செய்தி). சொந்தமாக தொழில் செய்கிறவர், சுயசம்பாத்தியம் என்றால் ஆண்டு வருமான ஆதாரங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் வீட்டுக் கடன் நிறுவனங்களை அணுகலாம். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் தவிர, இதர வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடன் வழங்கி வருகின்றன. 30 லட்சம் வரை கடன் தொகை என்றால், 10 - 12 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி இருக்கும்.

பதினைந்து முதல் இருபது வருடங்களில் இந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவேண்டும். இந்த விகிதாசாரம் நிறுவனத்துக்கு ஏற்ப வேறுபாடுகளைக் கொண்டது.

மேலும், ரிசர்வ் வங்கியின் அவ்வப்போதைய அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றங்களைக் கொண்டது. நமது கடன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அதற்கான ஒப்புதல் கடிதம் வங்கியிலிருந்து அனுப்பி வைக்கப்படும். எந்தெந்த ஸ்டேஜில் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதையும் அதில்  தெளிவாகக் கொடுத்துவிடுவதால் அதற்கேற்ப வேலைகளை வைத்துக்கொள்ளலாம்.

இந்த வேலைகள் முடிய குறைந்தபட்சம் இரண்டுமாத காலம் பிடிக்கலாம். இந்த வேலைகள் எளிதாக முடிந்துவிட்டால் நமது கனவு வீடும் விரைவாக வளர ஆரம்பிக்கும்.

சரி, வங்கிக் கடன் வாங்கியாச்சு. அடுத்து என்ன... என்பதுதானே உங்கள் கேள்வி. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(கனவை நனவாக்குவோம்)

நீரை.மகேந்திரன்

சிபில் அறிக்கை!

ஒவ்வொரு வங்கியும் தங்களது கடனாளிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் அமைப்புதான் சிபில். இந்த அறிக்கையில் உங்களுக்கு உள்ள ரேட்டிங் அடிப்படையில்தான் வங்கிகள் கடன் தரும். அதாவது, இதற்கு முன்பு வேறொரு வங்கியில் கடன் வாங்கியிருந்து அதை சரியாக திருப்பிக் கட்டியிருக்கவில்லை என்றால் இந்த சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். இப்படி சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் கிடைப்பதில் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். முதல்முறையாக கடன் வாங்குபவர்கள் எனில் சிபில் ரேட்டிங் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை.

இதில் உங்களது சிபில் ரேட்டிங்கை நீங்களே நேரடியாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் கிடைக்கிறது. அதனுடன் பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பேங்க் ஸ்டேட்மென்ட், டெலிபோன் பில், மின் கட்டணம் போன்ற ஆதாரங்களுடன் ரூபாய் 470-க்கு CREDIT INFORMATION BUREAU(INDIA)LIMITED என்கிற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பினால் உங்களுக்கான சிபில் ரேட்டிங்கை அனுப்பி வைப்பார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்க:

https://www.cibil.com/sites/default/files/pdf/consumer-request-form.pdf

முகவரி:  

CREDIT INFORMATION
BUREAU (INDIA) LIMITED Hoechst House,
6th Floor,
193 Backbay Reclamation,
Nariman Point,
Mumbai - 400 021