மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 3

‘குயிக்’கான லாபத்துக்கு க்வில்லிங் பிசினஸ்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

##~##

வ்வளவு வயது ஆனாலும் சரி... முயற்சியும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதும்... எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம், சென்னை, நெற்குன்றம், சரோஜா. எழுபத்திரண்டு வயதிலும் சளைக் காமல் கைவினைப் பொருட்கள் செய்து வருவதோடு, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

''பொதுப்பணித் துறையில 33 வருஷம் வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனேன். வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம கிராஃப்ட் கத்துக்கிட்ட நான், 15 வருஷமா தொடர்ந்து கிராஃப்ட் செய்துட்டிருக்கேன். பத்திரிகை, டி.வி-யில ஒரு பொருளை பார்த்துட்டா போதும்... உடனே செஞ்சு முடிச்சாத்தான் தூக்கமே வரும். என்னோட கற்பனையையும் கலந்து கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு யாருக்காவது பரிசா கொடுத்துடுவேன். ஃபேஷன் ஜுவல்லரி, ஐஸ்கிரீம் குச்சியில பைசா கோபுரம், வால் ஹேங்கிங், பென் ஸ்டாண்ட், ஜுவல் பாக்ஸ்னு பண்றதுல அவ்வளவு விருப்பம்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 3

ஸ்கூல் பசங்களுக்கு டிராமாவுக்கான கிரீ டங்களும் செஞ்சு கொடுக்கிறேன். குந்தன் கற்களை வெச்சு கோலம் வரைவேன். ஆரத்தி தட்டு, அகல் விளக்குல பெயின்ட் செய்றது, ஃப்ளவர் வாஷ், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள், மணி பர்ஸ், பேப்பர் க்வில்லிங் நகைனு நிறைய பண்ணுவேன்'' என அடுக்கிக் கொண்டே போகும் சரோஜா, ஓர் எழுத்தாளரும்கூட! 'அமுதசுரபி' நடத்திய சிறுகதைப் போட்டியில், 'முடிவல்ல, ஆரம்பம்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு வென்றிருக்கிறார்.

இங்கே... பேப்பர் க்வில்லிங் ஜுவல்லரியை நமக்குச் செய்து காட்டுகிறார் சரோஜா.

தேவையான பொருட்கள்: தேவையான கலர்களில் பேப்பர் க்வில்லிங் ஸ்டிரிப்கள் (ஸ்டேஷனரி ஷோரூம்களில் கிடைக்கும்), ஃபெவிகால் டியூப், கத்தரிக்கோல், கட்டிங் பிளேயர், கியர் ஒயர், கட்டர், கம்மல் ஹூக் மற்றும் ஜாயின்ட் பின், நெக்லஸ் ரோப், கோல்டன் பீட்ஸ், க்வில்லிங் பின், ஸ்டென்சில் ஸ்கேல்.

செய்முறை:

படம் 1: ஒரு க்வில்லிங் பேப்பரை சரி பாதியாக வெட்டிக் கொள்ளவும்.

படம் 2: ஒரு பாதியை கையில் எடுத்துக் கொண்டு 'க்வில்லிங் பின்’னில் செருகி இறுக்கமாகச் சுருட்ட வேண்டும். பிறகு, சுருட்டியது பிரிந்துவிடாதபடி உருவி எடுத்து, முடிவுப் பகுதியை 'ஃபெவிக்கால்’ தடவி ஒட்டி குளோஸ் செய்தால், ஒரு க்வில்லிங் பேப்பர் மணி தயாராகியிருக்கும். இதேபோல ஒரு நெக்லஸுக்குத் தேவையான 30 மணிகளை செய்துகொள்ள வேண்டும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 3

படம் 3: இப்போது தயாராக உள்ள கியர் ஒயரில் நான்கு கோல்டன் பீட்ஸ்களை கோத்து, க்வில்லிங் பேப்பர் மணியைக் கோக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு கோல்டன் பீட்ஸ், ஒரு க்வில்லிங் பேப்பர் மணி... என்ற வரிசையில் கோக்க வேண்டும்.

படம் 4: ஆரம்பத்தில் கோத்தது போலவே, முடிவிலும் நான்கு கோல்டன் பீட்ஸுகளைக் கோக்க வேண்டும்.

படம் 5: இறுதியில் கியர் ஒயரின் முனைகளை, நெக்லஸ் ரோப்பின் முனைகளோடு கோக்க வேண்டும். கொஞ்சம் கியர் ஒயர் இருக்குமாறு கட் செய்து, அதை, கடைசியாகக் கோத்த கோல்டன் பீட்ஸ்களுக்குள் நுழைத்துவிட வேண்டும். அப்போதுதான் உடலில் குத்தாமல் இருக்கும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 3

படம் 6, 6a, 6b : இதற்கான டாலரைத் தயார் செய்வதற்கு, ஒரு க்வில்லிங் பேப்பரை மூன்று பாகங்களாக வெட்டி... ஒவ்வொன்றையும் 'க்வில்லிங் பின்’னில் செருகி, லூஸாக சுருட்ட வேண்டும். ஸ்டென்சில் ஸ்கேலை பயன்படுத்தினால் இன்னும் எளிதாகச் சுருட்டலாம் (படம் 6). சுருட்டிய பிறகு அதை உருவி, ஒரு பக்கத்தை படத்தில் காட்டியுள்ளபடி திலகம் வடிவில் (படம் 6a)  வருமாறு அழுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல, எட்டு மணிகளை செய்துகொள்ள வேண்டும். பிறகு, வட்டவடிவில் க்வில்லிங் மணியை செய்து, அதைச் சுற்றி, திலக வடிவிலான எட்டு மணிகளையும் ஃபெவிக்கால் கொண்டு ஒட்டிவிட வேண்டும். 'ஜுவல்லரி ஜாயின்ட் பின்’ கொண்டு இதை நெக்லஸின் நடுவில் 'ஃபிக்ஸ்' செய்தால் (படம் 6b), அழகான டாலர் வைத்த க்வில்லிங் நெக்லஸ் தயார்.

திலகம் வடிவிலான க்வில்லிங் மணிகள் பத்து எண்ணிக்கையில் தயார் செய்து, டாலருக்கு செய்தது போல் வட்ட மணி இரண்டினைச் செய்து, ஒவ்வொரு வட்டத்துக்கும் தலா ஐந்து திலக மணிகள் வீதம் ஒட்டி, கம்மல் ஹூக் கோத்தால்... நெக்லஸுக்கு மேட்சாக கம்மலும் ரெடி.

நெக்லஸ் செய்து முடித்த சரோஜா, ''பத்து நிமிடங்களை ஒதுக்கினாலே போதும்... மேட்சிங் நெக்லஸ், கம்மல்களை நீங்களே தயாரித்துவிட முடியும். நெக்லஸ், கம்மல் சேர்ந்த இந்த செட்... நூறு ரூபாய்க்கு குறையாமல் விற்பனை செய்யலாம். கம்மல் மட்டுமானால் நாற்பது ரூபாய்க்கு விற்க முடியும். உங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடுகள் செய்தால், இதைவிட இரண்டு மடங்கு விலைக்கு விற்க முடியும்'' என்று கட்டைவிரல் உயர்த்தினார்.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...