சொந்த வீடு - ப்ளானை புரிந்துகொள்ளுங்கள்!
##~## |
வரைபடம் தயார் செய்துகொள்வது குறித்தும், வங்கிக் கடன் பெறுவது குறித்தும் சென்ற வாரம் பார்த்தோம். வரைபடம் தயார் செய்வதில் பார்க்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? எதன் அடிப்படையில் வரைபடம் அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.
நமக்கென ஒரு வீடு கட்டும்போது நம் தேவை என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சொந்த வீடு என்பது நம் கனவு; நம் குடும்பத்தினரின் கனவு. எனவே, இந்த கனவு வீட்டை எப்படி கட்டவேண்டும் என்பது குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் விருப்பங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்பவும் செயல்பட வேண்டும்.
வீட்டின் வரைபடத்தைத் தயார் செய்யும்போது நம் பட்ஜெட்டை சொன்னவுடன், ரெடிமேடாக சில வரைபடம் வைத்திருப்பார்கள். 'இந்த ப்ளான் உங்க பட்ஜெட்டுக்கு கச்சிதமாக இருக்கும் சார்’ என்பார்கள். அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நமக்கேற்றபடி சில மாறுதல்களை அதில் செய்யலாம்.
குறிப்பாக, வீட்டு வரைபடம் போடும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்கலாம் என்று பார்ப்போம். வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் அவர்களுக்கு தரைதள பயன்பாடு அதிகமாக இருக்க வேண்டும். கூட்டுக் குடும்பம், உறவினர்கள் அடிக்கடி வரும் வீடு என்றால் ஹால் வசதி அதிகமாக இருக்கவேண்டும். முக்கியமாக, இருக்கும் இடத்தை அதிகமாக பயன்படுத்திக்கொள்வது போல வரைபடம் தயார்செய்ய வேண்டும். வாஸ்து நம்பிக்கை உள்ளவர்கள் என்றால், அதற்கேற்பவும் வடிவமைத்துக்கொள்ளலாம்.

மனையின் அளவு எவ்வளவு இருந்தாலும், அதை அப்படியே நமது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மனையின் அளவில் 65 சதவிகித இடத்தில் மட்டுமே கட்டடம் கட்டவேண்டும் என்பதுதான் அரசு விதிமுறை. இதனால் அந்த அளவுக்குள் அதிகபட்ச இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர, 800 சதுர அடிக்குள் வீடு அமைந்தால் கண்டிப்பாக ஒரு கார் பார்க்கிங் அளவுக்கு இடம்விட வேண்டும். இதனை வரைபடத்தில் காட்டவேண்டியது கட்டாயம்.
சென்னை புறநகர்ப் பகுதியன்றில் 900 சதுர அடியில் மனை வாங்கினார் ஒருவர். அதில் வீடுகட்ட திட்டமிடும்போது 585 சதுர அடிக்குள்தான் கட்டடம் அமையவேண்டும் என்பது விதி. அதாவது, நான்கு பக்கமும் இடம் விட்டு கட்டடம் அமைய வேண்டும். முன்பக்கம் ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு இடம்விட வேண்டும். இதுவே, தரைதளம் முழுவதும் கார் பார்க்கிங்குக்கு இடம்விட்டால் கூடுதலாக ஒரு தளம் கட்டிக்கொள்ளலாம் என விதிமுறை அனுமதிக்கிறது.
ஆனால், அவரோ கார் பார்க்கிங்குடன் ஒரு தளம் கட்டிக்கொள்வதுபோல ப்ளான் அமைத்துக்கொண்டார். அதாவது, 900 சதுர அடியில் தரைதளத்தில் கார் பார்க்கிங்குக்கு இடம்விட்டுவிட்டு மீதம் 500 சதுர அடியிலும், மேல்தளத்தில் 300 சதுர அடியிலுமாக மொத்தம் 800 சதுர அடியில் கட்டடம் அமைத்துக் கொண்டார். டி.டி.சி.பி அப்ரூவல் வாங்கிய மனைப்பிரிவுகளில் கார் பார்க்கிங் இடம் விடவில்லை என்றால் வரைபட அனுமதி கிடைக்காது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைப்பிரிவுகளில், வங்கிக் கடன் வாங்காமல் வீடு கட்டுபவர்கள் பொதுவாக எந்த அனுமதிகளும் வாங்குவதில்லை. அதுபோல, கட்டட விஷயங்களிலும் விதிமுறை மீறல்களைச் செய்வார்கள். இது ஏறக்குறைய தெரிந்தே செய்கிற விதிமீறல்கள். மொத்த இடத்தையும் சுற்றிவளைத்து வீட்டைக் கட்டிக்கொள்வார்கள். வீட்டைச் சுற்றி பராமரிப்பு வேலைகள் செய்வதென்றாலும், அடுத்த வீட்டு இடத்திலிருந்துதான் செய்கிறார்கள். இப்போது காலி இடமாக இருக்கும் பக்கத்து மனைகளில் நாளை வேறொருவர் குடி வந்தால் தேவையில்லாதச் சிக்கல்களை இது உருவாக்கும்.
இதுபோன்ற வழிகாட்டுதல்களையோ அல்லது அவர்களைப் பார்த்து நாமும் விதிமீறல்களைச் செய்யலாம் என்கிற நம்பிக்கையையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். அரசு விதிமுறைகள் என்னவோ அதைக் கடைப்பிடித்தாலே மனநிறைவாக
வீடு கட்ட முடியும். தவிர, விதிமீறல் செய்திருக் கிறோம் என்கிற புகார்களும் நம் மீது வராது. எனவே, இந்த விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
வரைபடம் அமைக்கும்போதே சில விஷயங்களில் நமக்கும் தெளிவு கிடைக்க வேண்டும். அது என்னென்ன விஷயங்கள் என்று பார்ப்போம்.
கழிவுநீர் இணைப்பு வசதி இல்லாத பஞ்சாயத்துப் பகுதிகள் அல்லது சில காலங்களுக்குப் பிறகு கிடைக்கலாம் என்கிற நகர விரிவாக்கப் பகுதிகளில் கழிவுநீர் வெளியேற செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்திக் கொள்வதுதான் நடைமுறை. ஆனால், இதை வீட்டின் பின்பக்கம் அமைவதுபோல இல்லாமல், முன்பக்கம் அமைத்துக்கொள்வதுதான் நல்லது. செப்டிக் டேங்கை பின்பக்கம் அமைத்துக் கொண்டால் சுத்தம் செய்கிறபோது தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்படும். முன்பக்கம் அமைத்துக்கொண்டால் சுலபமாக இருக்கும். பிற்காலத்தில் கழிவுநீர் இணைப்பு வசதி வந்துவிட்டால் சுலபமாக இணைப்பு வேலைகளைச் செய்துகொள்வதற்கும் இந்த முறைதான் எளிதானது.
குடிநீர் இணைப்புக்கான தொட்டியும் முன்பக்கம் அமைத்துக்கொள்வதுதான் சிறந்தது. குறிப்பாக, கார் நிறுத்தும் இடத்தில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் மேலே அமைக்கப்படும் வாட்டர் டேங்க் அவசியமானது என்றாலும், அதை காங்ரீட்டில் அமைத்துக்கொள்ள வேண்டாம். மிக எளிதாகக் கையாளக்கூடிய வாட்டர் டேங்குகளை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக, கிராமப்புறங்களில் வீடு கட்டுபவர்கள் அல்லது மனையில் தாராளமாக இடவசதி இருப்பவர்கள் பாத்ரூமை வீட்டுக்கு வெளியே வைக்கச் சொல்வார்கள். ஆனால், இப்படி செய்யக்கூடாது. மழைக்காலங்களிலோ அல்லது வயதானவர்கள் பயன்படுத்துவதற்கோ இது சிரமத்தைக் கொடுக்கும். மிக எளிதாக அவசரத்துக்குப் பயன்படுத்துவதுபோல இருக்க வேண்டும். அதற்கேற்ப வீட்டுக்குள்ளும் ஒரு பாத்ரூம் அமைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்திய டைப் பாத்ரூம் ஒன்றும் வெஸ்டர்ன் டைப் பாத்ரூம் ஒன்றும் அமைத்துக் கொள்வது நல்லது.

வீட்டுக்குள் சமையலறை பகுதிக்கு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைப்பதுபோல ப்ளான் அமைக்க வேண்டும். தவிர, சமையலறை தாராளமான இடவசதிக் கொண்டிருக்க வேண்டும். இப்போதைய வசதியை மட்டுமே கவனத்தில்கொண்டு சமையலறை அமைக்கக் கூடாது. வசதி அதிகரிக்கும்போது சமையலறை பொருட்கள்தான் கூடுதலாக இடத்தை அடைக்கும். ஃபிரிட்ஜ், கிரைண்டர், காஸ் சிலிண்டர், வாட்டர் டிஸ்பென்ஸர் என கூடுதலான இடத்தைக் கோருவது சமையலறைதான் என்பதால் அதற்கேற்ப ப்ளான் வேண்டும்.
ஏன் இந்த விஷயங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகிறோம் எனில், உங்கள் தேவை எப்படி அமையவேண்டும் என்பதற்குத்தான்.
நீங்கள் பலரது வீடுகளில் பார்த்திருக்கலாம், மாடிப்படிகளுக்கு இடையில் உள்ள இடத்தில்தான், மின்இணைப்புக்கான பெட்டியை வைத்திருப்பார்கள். மின் கணக்கீடு எடுக்க வரும்போது வீட்டில் ஆட்கள் இல்லையென்றால், முன்னுள்ள கணக்கின்படியே மின்கட்டணம் கட்டவேண்டியிருக்கும். நாம் குறைவாக பயன்படுத்தி இருந்தாலும் அதற்கு ஏற்ப கட்டணம் கட்ட முடியாது. வீட்டில் ஆட்கள் இருந்தால்தான் மின் ஊழியர்கள் கணக்கெடுக்க முடியும் என்கிற நிலைமையில் வைத்திருப்பார்கள். ஏன் இப்படி ஆகிறது என்றால், இது அந்த இடத்தில்தான் மின் இணைப்பு பெட்டி அமையவேண்டும் என்று திட்டமிடாததுதான் காரணம்.
எனவேதான், வீட்டுக்கான ப்ளான் போடும்போதே அதற்கு இந்த இடம், இது இப்படி அமையவேண்டும் என்று ஒதுக்கிக்கொண்டால், இதுபோன்ற சிக்கல்கள் வராது. இதைக் கவனிக்காமல் விடும்போதுதான் பின்நாட்களில் சிலவற்றை இடித்துக் கட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சரி, நாம் கட்ட இருக்கும் சில வீடுகளின் மாடல் ப்ளான்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
(கனவை நனவாக்குவோம்)