மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடும்ப நிர்வாக உத்திகள்! - 24

பிசினஸ் தந்திரங்கள்! கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

 கடந்த இரு வாரங்களாக தொழில்முனைவர்கள் பற்றி பேசி வருகிறேன். ஏன் தெரியுமா? குடும்பத் தொழில்கள் என்கிற பரந்ததொரு பிரிவைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லத்தான். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்கள் குடும்பத் தொழில் நிறுவனங்களே. இந்நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரிசெய்ய பொதுவான மேனேஜ்மென்ட் ஸ்ட்ராடஜிகள் போதாது. பேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜி நிச்சயம் தேவை. குடும்பத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?  

ரு தலைமுறை கஷ்டப்பட்டு தொழிலை தொடங்கும்; அடுத்த தலைமுறை அதை மேலும் வளர்த்தெடுக்கும். ஆனால், மூன்றாவது தலைமுறை தொழிலை அழிக்கும்; அல்லது நலிவடைய வைக்கும். இதுதான் எல்லா இடங்களிலும் பொதுவாக நாம் பார்க்கக்கூடிய குடும்பத் தொழில்களின் பிரச்னை அல்லது வரலாறு.

இதற்கு விதிவிலக்காக இருக்கும்  நிறுவனங்கள் நிறையவே உண்டு. என்றாலும், முதல் தலைமுறைபட்ட கஷ்டம் எதுவும் மூன்றாம் தலைமுறைக்குத் தெரியாது அல்லது கிடையாது. தொழில் அனுபவமோ அல்லது அக்கறையோ இல்லையென்றாலும் தொழில் சொந்தமாகிவிடும். தவிர, மூன்றாம் தலைமுறையில் ஏற்படும் குடும்பக் குழப்பங்கள் காரணமாகவும் தொழில் நசிந்து, சந்தையிலிருந்து காணாமல்போகும் வாய்ப்பும் உண்டு.

குடும்ப நிர்வாக உத்திகள்! - 24

குடும்பத் தொழில்கள் இதுபோன்ற ஒரு நெருக்கடியைச் சந்திக்காமலிருக்க வேண்டுமென்றால், ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜியைப் பயன்படுத்துவது அவசியம்.

இந்த ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜியை  'த்ரீ சர்க்கிள் கான்செப்ட்’ என்கிறோம். மூன்று முக்கியமான விஷயங்களைக் கொண்டது இந்த கான்செப்ட். ஓனர்ஷிப், மேனேஜ்மென்ட்,

குடும்பம் என்பவைதான் அந்த மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் குடும்பத் தொழிலில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்.

உதாரணமாக, ஒரு குடும்பத் தொழிலை எடுத்துக்கொள்வோம். தொழிலின் உரிமை அனைத்தும் குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களால் தொழில் நிர்வகிக்கப்படும். இச்சூழ்நிலையில் என்ன நடக்கும் என்றால், தொழிலிலிருந்து கிடைக்கும் ஆதாயம் (டிவிடெண்ட்) குடும்பத்துக்கு/ குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களே நிர்வாகத்தையும் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன நடக்கும்? ஓனர்ஷிப், நிர்வாகம், தொழிலில் ஈடுபடுவது என மூன்றிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இருக்கும். அதேசமயம், குடும்பத்தின் தலையீடும் அதிகமாக இருக்கும்.

குடும்ப நிர்வாக உத்திகள்! - 24

உதாரணமாக, தொழில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் எனில், அவருக்குத் தொழிலிலும் பங்கு கிடைக்கும். நிர்வாகத்திலும் பங்குகொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதுவே, தொழில் குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் எனில், அவருக்கு நிர்வாக பொறுப்பு மட்டும்தான் கிடைக்கும். இப்படி ஓனர்ஷிப், குடும்பத் தலையீடு, மேனேஜ்மென்ட் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால்தான், பொதுவான பிசினஸ் ஸ்ட்ராடஜி மட்டும் குடும்பத் தொழிகளுக்குப் போதாது என்கிறேன்.

குடும்பத்துக்கான ஸ்ட்ராடஜியைப் பயன்படுத் துவது முதன்மையாக இருந்தாலும், நோக்கத்துக்கு ஏற்ப தொழிலை கொண்டுசெல்வதில் குடும்ப உறுப்பினர்களோடு வெளிநபர்களை ஒப்பிடவும் முடியாது. தொழிலில் ஆதாயம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்ப உறுப்பினர் பிணைப்போடு செயல்படுவது சாத்தியம். ஆனால், வெளிநபர்களிடம் அதற்கான சாத்தியங்களை எதிர்பார்க்க முடியாது.

அதேசமயம், தொழில் குடும்பமாக இருப்பது மட்டுமே தொழிலை நிர்வகிக்க போதுமான தகுதியல்ல; பெரும்பாலான தொழில் குடும்பங்கள் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கின்றன. தகுதி இல்லையென்றாலும் தங்களது வாரிசுகளை உயர்பொறுப்புக்கு கொண்டு வருவதும், எந்த அனுபமும், வேலையும் இல்லாமல் தொழிலில் பங்குகொள்வதும் சாதாரணமாக நிகழக்கூடியது. இதனால்தான் தொழில் குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்படுகிறது அல்லது தொழில் சந்தையிலிருந்து காணாமல் போகிறது.

அதேசமயத்தில், தொழில் குடும்பத்திலிருந்து திறமையான வாரிசுகளும் உருவாகலாம். அப்படியான வாரிசுகள்தான் தொழிலை நிலைக்கச் செய்கிறார்கள். தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்கின்றனர். டாடா குழுமம் குடும்பத் தொழிலாகத்தான் இருந்தது. ஒருகட்டத்தில் குழுமத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து டாடா விலகினாலும், குடும்ப உறுப்பினர் என்கிற அடிப்படையில் இப்போதும் அவர் மீது  நம்பிக்கை வைக்கின்றனர் முதலீட்டாளர்கள். ஏனென்றால், தொழிலை அவரால் அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என்று நம்புகின்றனர். தற்போதைய தலைவராக இருக்கும் சைரஸ் மிஸ்திரியும் ஒருவகையில் டாடா குடும்பத்துக்கு சம்பந்தப்பட்டவர்தான்.  

தொழில் குடும்பங்களின் மூன்றாவது தலைமுறை எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு பிர்லா குடும்பத்துப் பிரச்னைகளிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியும். இதுபோன்ற சூழலில்தான் இந்த ஸ்ட்ராடஜியின் தேவையைப் புரிந்துகொள்ள முடியும்.

பிர்லா குழுமத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த எம்.பி. பிர்லாவின் 5,000 கோடி சொத்துக்களை, அவருக்குப்பின் அவரது மனைவி பிரியம்வதா தேவி பிர்லா தனது நிறுவனத்தின் ஆடிட்டர் ஆர்.எஸ்.லோதாவின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிடுகிறார். பொதுவாக, நிறுவனத்தின் ஆடிட்டர் பொறுப்பில் இருப்பவர் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கக்கூடாது என்கிற விதி இருக்கிறது. தவிர, இதர வாரிசுகளின் முதலீடும் அந்தச் சொத்துக்களில் அடங்கும்.

குடும்ப நிர்வாக உத்திகள்! - 24

மேலும், இந்த உயிலில் பிர்லா குழுமத்தின் சொத்துக்களில் பொதுவான பங்குகளும் உள்ளது. அதாவது, பிலானி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளும் அடக்கம். குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரிடம் 25 சதவிகித பங்குகள் செல்லும்பட்சத்தில் தொழிலில் சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது. குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது, மூன்றாம் நபருக்கு எப்படி சொத்துக்களை மாற்றலாம் என்று ஒரு வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கு நடந்துவரும் காலகட்டத்தில் ஆடிட்டர் ஆர்.எஸ். லோதாவும் இறந்துபோக, தற்போது அவரது மகன் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தி வருகிறார். நாம் முன்பே குறிப்பிட்டதுபோல மூன்றாம் தலைமுறையில் இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்க முடியாதது.

அம்பானி குழும சிக்கல்கள் நாம் அறிந்தது தான். திருபாய் அம்பானி இருந்தவரை முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ஒன்றாக இருந்தவர்கள்தான். திருபாயின் இறப்புக்குப் பிறகு என்ன நடந்தது? இப்போது ரிலையன்ஸ் ஒரே குழும தொழில் கிடையாது. தொழில் குடும்பங்களில் ஏற்படும்  சண்டையில் தொழில் அழிந்துபோவதற்குகூட வாய்ப்புகள் உள்ளன.

சாம்சங், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, டி.வி.எஸ்., முருகப்பா என தமிழகத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களும் இப்படியான கட்டங்களைத் தாண்டி உருவானவைதான்.

சென்ற தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவோர்தான் சிவநாடார். ஆனால், இப்போது அவரது மகள் ரோஷினி நாடார் அடுத்த தலைமுறையாகத் தொழிலுக்கு வருகிறார். அதுபோலத்தான் விப்ரோ, மிட்டல் போன்ற நிறுவனங்களிலும் அடுத்தது அவரது வாரிசுகளுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி வாரிசுகளுக்கு இடம் கொடுப்பது மட்டுமல்ல, தகுதி இல்லையென்றால் தொழிலில் இடம் கொடுக்காமல்கூட இருக்கலாம். அல்லது நான்குபேர் உள்ள குடும்பத்தில் மூன்றுபேர் அதே தொழிலிலும், ஒருவர் பிரிந்து போகவும் விரும்புகிறார். இதுபோன்ற சிக்கல்களையும் தொழில் குடும்பங்கள் சந்திக்கும்.

இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதுதான் ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜி. இதை அமல்படுத்தி வெற்றிபெற்ற நிறுவனத்தின் கதையை அடுத்த வாரம் பார்ப்போம்.

(வியூகம் வகுப்போம்)