மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... நீரை. மகேந்திரன்

##~##

கட்டட வேலைக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது மணல், செங்கல், சிமென்ட், ஜல்லி மற்றும் கம்பிகள். வீடு கட்ட ஆரம்பித்தபிறகு நம் தேவைக்கு ஏற்ப இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.

கம்பி, ஜல்லி, சிமென்ட் வகைகள் கிடைத்துவிடும். ஆனால், மணல், செங்கல் போன்றவை மழை நாட்களில்  தேவைக்கு ஏற்ப கிடைப்பதில் தாமதம் ஆகலாம். இதனால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போகலாம்.  எனவே, மணலும் செங்கல்லும் குறைந்த விலையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு அஸ்திவாரத்துக்கு தோண்ட ஆரம்பிக்கலாம்.

இந்த நேரத்தில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, வடிவமைப்பு,  இட அமைப்பு, கட்டுமானப் பரப்பு, செய்யும்முறை இவற்றை முடிவு செய்தபிறகு, கட்டும்போதோ இடையிடையேயோ கண்டிப்பாக மாற்றங்களைச் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கட்டுமான செலவு அதிகரிக்கும். தவிர, அனுமதி வாங்கியுள்ள ப்ளானில் மாற்றங்கள் செய்வது போல இருக்கும். நாம்தானே வேலைகளை மேற்கொள்கிறோம் என்று இடையிடையே மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சரி, வேலையைத் தொடங்கியாச்சு. இனி  கட்டுமான உத்திகள், கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்துவதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வோம். இதன்மூலம் கட்டுமான செலவுகளை கணிசமாகக் குறைக்க முடியும்.

அடித்தளம்  

கட்டடத்தின் அடித்தளம் அமைப்பதைப் பொறுத்துதான் அதன் உறுதியையும், நீண்டநாள் உழைப்பையும் உறுதிசெய்ய முடியும். எனவே, இதில் எந்த சமரசமும் வைத்துக்கொள்ள வேண்டாம். எந்த மாதிரியான அடித்தளம் அமைப்பது என்பதை நாம் மட்டுமே முடிவு செய்யாமல் மனை இடத்தின் மண்ணின் தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தெரிந்து கொள்ள மண் பரிசோதனை செய்வது அவசியம்.  அந்தப் பகுதியில் நீங்கள்தான் முதன்முதலில் வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் இதை அவசியம் செய்யவேண்டும். ஏற்கெனவே வீடுகள் உள்ள பகுதியாக இருந்தால் எந்தவகையான மண், அவர்கள் எந்தவகையில் கட்டட அடித்தளம் அமைத்துள்ளார்கள் என்பதைக் கேட்டு அறியலாம்.

இந்த மண் பரிசோதனைக்கு 15 - 20 ஆயிரம் வரைதான் செலவாகும். இதை செய்வதன்மூலம் எந்தவகையான அடித்தளம் அமைப்பது என்பதைத் துல்லியமாக முடிவெடுக்க முடியும். தவிர, அடித்தள கட்டுமான செலவில் 10 - 25 சதவிகிதம் வரை செலவைக் குறைக்க முடியும்.  

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

தாங்குதிறன் குறைந்த மண்அடுக்கு இடமாக இருந்தால் மண்ணை உறுதிபடுத்தும் வேலைகளைச் செய்யவேண்டும். குறிப்பாக, சரிவுகள், ஏற்றஇறக்கங்களைத் தடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

நமது மனையில் மண் அமைப்பு களிமண் எனில், அடித்தளத்தின் துணை அடித்தளமாக (Sub base) வெறும் மணலைபோட்டு நிரப்பக்கூடாது.  கல்லுடைத்த தூள் (stone crusher dust) மற்றும் செஞ்சரளை மண் ( Gravel) இரண்டையும் 1:3 என்கிற விகிதத்தில் நன்றாகக் கலந்து குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 3 முதல் 4 அடி உயரம் வரை, 3 முதல் 6 அடுக்குகளாகப் போட்டு கெட்டிப்படுத்த வேண்டும்.  இதற்குமேல் பிசிசி எனப்படும் சாதாரண காங்க்ரீட்டை 100 மி.மீ உயரத்துக்குப் போடவேண்டும். இந்த காங்க்ரீட்டில்தான் ஆற்று மணலை போட வேண்டும். இந்த ஏற்பாடுகளுக்குப் பிறகுதான் ஆர்சிசி காங்க்ரீட் வேலைகள் செய்யவேண்டும். இப்படி ஒவ்வொரு வகை மண்ணுக்கும் ஒவ்வொருவிதமாக அடித்தள தாங்குதிறனை அமைக்க வேண்டும்.  

 தரைமட்டம்

தரைமட்ட அளவுக்கு கீழே வடிவமைத்திருக்கும் மட்ட விட்டம் (Grade beam) இணைத்து, அதற்குமேல் தளமட்டம் (Plinth Level) வரை செங்கற்கள், கட்டுமான வேலைக்கு காங்க்ரீட் கற்கள் ( Precast Solid Concrete Block)அல்லது உலர் சாம்பல் செங்கற்களையோ பயன்படுத்தலாம். இதன்மூலம்  தரைமட்டத்தின் வலிமை அதிகரிக்கும். செலவும் 2 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு. வேலையும் விரைவாக முடியும்.

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

விரிவடையும் இணைப்பு ( Expansion joint) தேவைப்படும் இடங்களில் இரட்டைத் தூண்கள் (Twin columns) போடாமல், ஆர்சிசி பிராக்கெட் அல்லது கார்பெல் (RCC bracket / Corbel) அமைத்து கட்டுமான செலவினைக் குறைக்கலாம்.  

 தளமட்டம்!

தளமட்டம் நிரப்புவதற்கு கிரஷர் டஸ்ட், செஞ்சரளை மண் கலவை மற்றும் செங்கல் ரப்பீஸ், காங்க்ரீட் ரப்பீஸ் போன்றவற்றை அடுக்கு அடுக்காகக் கொட்டி கெட்டிப்படுத்த வேண்டும். இதுதான் சரியான முறை. ஆற்று மணலையோ அல்லது அடித்தளம் வெட்டிய களிமண்ணையோ அப்படியே பயன்படுத்துடுவது சரியான முறை அல்ல.

தரைமட்ட தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றை செங்கற்களைக் கொண்டு கட்டாமல், நாம் முன்பு குறிப்பிட்ட காங்க்ரீட் கற்கள் கொண்டு கட்டினால் உறுதியாகவும் இருக்கும், செலவையும் குறைக்கலாம்.

இதுபோன்று ஒவ்வொரு வேலைகளிலும் நுணுக்கங்களையும், புதிய தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொண்டால் தரமாகவும் குறைந்த செலவிலும் வீட்டை கட்ட முடியும்.

இனி கட்டுமானத் துறையில் புதிதாக பயன்படுத்தப்படும் மாற்றுப் பொருட்களையும் பார்த்துவிடுவோம்.

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

 ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் கற்கள்!

செங்கற்களைவிடவும் தரத்தில் மேம்பட்டதாகவும், கட்டுமானத்துக்கு உறுதி தரக்கூடியதாகவும் எரி சாம்பல் கற்கள் எனப்படும் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் கற்கள் உள்ளன. செங்கற்களைவிட கூடுதலான தாங்குதிறன் கொண்ட இந்த கற்கள் சரியான பக்கஅளவுகள், குறைந்த சேதாரம், குறைவான தண்ணீரை உள்ளிழுப்பது,  பூச்சு கலவை செலவுகள் குறைவது, விரைவான கட்டுமானம், கட்டுமான செலவு குறைவது போன்ற சாதகங்களைக் கொண்டுள்ளன. செங்கல்லை விட வலிமையானது என்பதால் அடித்தளம், இடைக்கட்டுமானம் மற்றும் மேல்கட்டுமானங்களிலும் தயக்கமின்றி பயன்படுத்தலாம். இது தவிர, அலுமினியம் பயன்படுத்திய ஏரோகான் பிரிக்ஸ் கற்களும் நவீன மாற்று பொருளாகக் கிடைக்கிறது.  

குவாரி டஸ்ட்!

சில நேரங்களில் ஆற்றுமணல் தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரங்களில் சிறந்த மாற்றாக மலைமாவு என்று சொல்லப்படும் குவாரி டஸ்ட் மாவுகளைப் பயன்படுத்தலாம். கருங்கல் ஜல்லிகள் உடைக்கும்போது கிடைக்கும் வேஸ்ட்களை அரைத்து செய்யப்படுவதுதான் இந்த மலைமாவு. ஆற்று மணலைபோல சலித்து பயன்படுத்த வேண்டியதில்லை.  ஆற்று மணலுடன் 35 சதவிகிதம் அளவுக்கு இதைக் கலந்து கட்டுமான வேலை, சுவர்ப்பூச்சு வேலைகள் செய்து கொள்ளலாம்.

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

மேலும், அடித்தளமட்டம் சரிசெய்யவும், சாதாரண காங்க்ரீட் கலவையிலும், செங்கல் கட்டுமான வேலைகளுக்கும், தரையிலிருந்து தளமட்டம் வரை நிரப்புப் பொருளாகவும், 50  - 100 சதவிகிதம் வரையிலும் இந்த மலைமாவைப் பயன்படுத்தலாம். தரத்தில் எந்தவகையிலும் குறைவிருக்காது.

செயற்கை மணல்!

கட்டட பூச்சு வேலைகள் செய்ய ஆற்று மணலைவிட செயற்கை மணல்கள் சிறப்பான மாற்றாக இருக்கும். பூச்சு வேலைகளுக்கு என்றே இந்தவகை செயற்கை மணல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குவாரி டஸ்ட் மற்றும் கருங்கல் ஜல்லிகளை இயந்திரங்கள் மூலமாக அரைத்து அதை சீரான அளவில் சலித்து கழுவப்பட்டு மூட்டை அளவுகளாகவே விற்பனை செய்கின்றனர். இதனுடன் ஆற்று மணல் 15 சதவிகிதம் அளவுக்கு கலந்து சூப்பர் ப்ளாஸ்டிசைஸர்ஸ் (superplasticizers) சேர்த்து பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

சொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்!

ரப்பீஸ் ஜல்லி!

கருங்கல் ஜல்லிகள் தாராளமாகக் கிடைக்கும் என்றாலும், தளமட்டம் நிரப்புவதற்கு ஜல்லிக்குப் பதிலாக காங்க்ரீட் கழிவுகளைப் பயன்படுத்தலாம். ஆனால், ரப்பீஸ் கழிவுகளை அப்படியே பயன்படுத்தக்கூடாது. இதனால் தளமட்டம் கெட்டிப்படும் தன்மை குறையலாம். சீரான அளவில் இடித்து பிரித்துக்கொண்டு பயன்படுத்துவது நல்லது.  

சரி, வேலைகளை எப்போது தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(கனவை நனவாக்குவோம்)
படம்: வீ.சிவக்குமார்