மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு

தெரிந்த விஷயங்கள், தெரியாத விவரங்கள்! கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... நீரை. மகேந்திரன்

##~##

ங்கள் கனவு வீட்டை நீங்களே கட்டுவதாக இருந்தால், சில விஷயங்களை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!

வீடு கட்டுவதற்கு அனுபவமுள்ள மேஸ்திரியின் துணை அவசியம் என்றாலும், கட்டுமான விவரங்களை நாம் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் அவருக்கு சில வழிகாட்டுதல்களை நீங்கள் தரமுடியும். அவரிடமிருந்து சிறப்பாக வேலையை வாங்க முடியும். அவருக்குத் தெரியாத சில நுட்பங்கள் உங்களுக்குத் தெரிகிறது எனில், உங்களை ஏமாற்றும் எண்ணம் அவருக்கு வராது.

மேஸ்திரியின் மேற்பார்வையில் வீடு கட்டுவதில் ஒரு வசதி இருக்கிறது. இப்போதைய நிலையில் கட்டுமான வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. நாம் நேரடியாக தேவையான ஆட்களைக் கொண்டுவர முடியாது. அதற்கான தொடர்புகளும் நம்மிடம் கிடையாது. ஆனால், மேஸ்திரியோ தேவைப்படுகிற நேரத்தில் தேவைப்படுகிற அளவுக்கு ஆட்களைக் கொண்டுவந்துவிடுவார்.  

சொந்த வீடு

கட்டடம் கட்டும் வேலையை மேஸ்திரியிடம் ஒப்படைக்கும்போது  இரண்டுவகையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். அதாவது, கட்டடம் கட்டித்தர ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று பேசிவிடலாம். தேவையான பொருட்களை அவரே வாங்கி, அவரே கட்டடத்தையும் கட்டித் தந்துவிடுவார்.  எந்தெந்த வேலையை அவர் எப்போது செய்வார் என்பதை அவரிடமிருந்து நாம் முன்பே  கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலம் பணத்தைத் தயார் செய்வதோடு, இந்த வேலை இந்த நேரத்தில்தான் முடியும் என்று டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.    

இந்த வழியை நீங்கள் பின்பற்ற விரும்பவில்லை எனில், கட்டடம் கட்டத் தேவையான அத்தனைப் பொருட்களையும் நீங்கள் வாங்கித் தந்துவிட்டு, கட்டடம் கட்டுவதற்கான கூலியை மட்டும் பேசி தந்துவிட்டால் போதும், கட்டடம் கட்டும் வேலையை அவரே முடித்துத் தந்துவிடுவார்.  லேபர் கான்ட்ராக்ட் என்று இதைச் சொல்வார்கள்.

இந்தமுறையில் நீங்கள், என்ன வேலை செய்யப்போகிறீர்களோ அதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்குரிய பொருட்களை மட்டும் வாங்கித் தந்தால் போதும். வேலை முடிய முடிய கூலியைத் தந்துவிடலாம். இப்போது சராசரியாக ஒரு சதுர அடிக்கான கூலி 350 ரூபாய் வரை இருக்கிறது. இது  ஊருக்கு ஊர் வித்தியாசப்படலாம்.

இந்த நடைமுறை விவரங்களோடு கட்டுமான பொருட்கள் குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்...

சொந்த வீடு

கம்பி!

கம்பி வகைகளைப் பொறுத்தவரை, பொத்தாம்பொதுவாக வாங்கிவிட முடியாது. அடித்தள வேலைகள் மற்றும் பில்லர் வேலைகளுக்கு டி.எம்.டி (TMT Steel) கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். அடித்தளத்தில் மேட் போடும் வேலைகளுக்கு சாதாரணமாக 7 எம்.எம் சாதாரண கம்பிகளைப் பயன்படுத்தலாம் என்றாலும், மண் வகையைப் பொறுத்து இதில் எம்.எம் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, 1,000 சதுர அடியில் கட்டப்படும் கட்டுமானம் அல்லது தரைதளத்துடன் கூடுதலாக ஒரு தளம்கொண்ட கட்டுமானமாக இருந்தால் மேட் போட 7 எம்.எம் சாதாரண கம்பியையும், அடித்தளம் மற்றும் பில்லர் வேலைகளுக்கு 12 எம்.எம். டி.எம்.டி. கம்பியையும், தள வேலைகளுக்கு

(Roofing) 10 எம்.எம். டி.எம்.டி.  கம்பியையும் பயன்படுத்த வேண்டும். strip steels என்று சொல்லப்படுகிற ரிங்ஸ் வேலைகளுக்கு 10 எம்.எம். டி.எம்.டி. கம்பிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜல்லி!

அடித்தள வேலைகளுக்கு 1.5 (ஒன்றரை) ஜல்லிகளையும், இதர காங்க்ரீட் வேலைகளுக்கு 3/4 (முக்கால்) ஜல்லிகளையும் பயன்படுத்த வேண்டும்.

சொந்த வீடு

சிமென்ட்!

சிமென்ட் வகைகளைப் பொறுத்தவரை, 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மூன்று கிரேடு வகைகளும் ஒவ்வொரு வேலைக்கு ஏற்ப தேவையாக இருக்கும். அதாவது, 53 கிரேடு சிமென்ட்கள் உடனடியாக செட் ஆகும் தன்மை கொண்டவை. இந்தவகையை காங்க்ரீட் வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். வேலை முடிந்ததும் உடனடியாக செட் ஆகிவிடும்.

43 கிரேடு வகைகள் பூச்சு வேலை களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். அவசரமில்லாத சில வேலைகளுக்கு 33 கிரேடு சிமென்ட் பயன்படுத்த வேண்டும்.

அதேசமயத்தில், உடனடியாக செட் ஆக வேண்டும் என்று 53 கிரேடு சிமென்ட் வகையை பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. இதனால் பூச்சு வேலைகளில் விரிசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர, நமது கட்டுமான வேலைகளில் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருக்கும் சில வார்த்தைகளும், அதற்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோம்.

பில்ட்-அப் ஏரியா!

நமது வீடு எத்தனை சதுர அடியில் அமைய உள்ளதோ, அந்த மொத்த பரப்புதான் பில்ட்-அப் ஏரியா எனப்படுகிறது. அதாவது, கட்டடம் அமையும் பகுதியின் மொத்தப் பரப்பை இப்படி குறிப்பிடுவார்கள்.

கார்பெட்!

நமது கட்டடத்தின் ஓர் அறையின் நான்கு சுவர்களுக்கு இடையில் உள்ள இடம் கார்பெட் ஏரியா எனப்படுகிறது. அதாவது, வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக்கொள்ளுமோ அதை கார்பெட் ஏரியா என்பார்கள். அதாவது, உள் அறைக்குள் டைல்ஸ் ஒட்டும் அளவை கார்பெட் அளவிலிருந்துதான் கணக்கெடுக்க வேண்டும்.

பிளின்த்!  

கார்பெட் ஏரியாவோடு சேர்ந்து சுவர்களின் தடிமனையும் கணக்கெடுத்தால் கிடைக்கும் அளவு தான் பிளின்த் ஏரியா என்கிறோம்.  

சீலிங்!

பொதுவாக, கட்டடத்தின் உட்புற மேல்பக்கத்தை சீலிங் என்கிறோம். பொதுவாக, அறையின் உட்புற உயரம் குறைந்தபட்சம் 10 அடி உயரமாவது இருக்கவேண்டும். சராசரியாக இந்த அளவு உயரம் இருந்தால்தான் மின்விசிறி பொருத்த வசதியாக இருக்கும்.

மேட்!

அடித்தள வேலைகளில் இந்த மேட் பங்கு முக்கியமானது. அதாவது, பில்லருக்குக் கீழே விரிக்கப்படும் ஒரு வலை போன்றதுதான் இது. பில்லரைத் தாங்கிப்பிடிக்க இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இதுபோன்ற சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால் கட்டுமானப் பணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லலாம்.  

(கனவை நனவாக்குவோம்)

படங்கள்: வீ.சிவக்குமார்