முன்னோக்கி யோசித்த சோனி!
கம்பெனிகள் ஜெயித்த கதை
ஸ்ட்ராடஜி | 28 |
##~## |
ப்ரீமியம் ப்ராடக்ட்ஸ் என்றால், மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதே பொருட்களைவிட விலை கொஞ்சம் அதிகமாக வைத்து விற்கப்படுகிறவை. மற்ற நிறுவனங்கள் விலை குறைவாகத் தரும்போது நாமும் அப்படி செய்தால்தானே சந்தையில் நிற்க முடியும் என்கிற பொதுவான பிசினஸ் யுக்தியை சோனி ஏன் பின்பற்றவில்லை? விலையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல் இன்றளவும் உலகின் டாப் 100 ப்ராண்டுகளுக்குள் ஒன்றாக சோனியினால் எப்படி இருக்க முடிகிறது? சோனி கடைப்பிடிக்கும் ஸ்ட்ராடஜிதான் என்ன?
இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளின் உதவிகளைக் கொண்டுதான் ஜப்பான் திரும்பவும் மீண்டு வந்தது. அந்த வரலாற்றுப் பின்னணியோடுதான் சோனி நிறுவனத்தின் வரலாறும் உள்ளது. 1945-ல் ஜப்பான் பேரழிவைச் சந்தித்த அடுத்த ஆண்டு, அதாவது, 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சோனி. தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய அந்தக் கட்டத்தில் பழைய எலெக்ட்ரானிக்ஸ் பொருட் களை சரிசெய்துதரும் தொழிலை தொடங்கினார்கள் அகியோ மோரிட்டா (Akio Morita), மாசரு இபுகா
(Masaru Ibuka) என்கிற நண்பர்கள் இருவரும். இவர்கள் தான் சோனியின் நிறுவனர்கள். அப்போது தங்களது நிறுவனத்துக்கு அவர்கள் வைத்த பெயர் டோக்கியோ டெலிகம்யூனிகேஷன் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்.
சோனி முதலில் எலெக்ட்ரானிக் குக்கர் தயாரித்தது. இது ஜப்பான் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றது. பின்னர் படிப்படியாக டிரான்ஸிஸ்டர், டெலிவிஷன் என உற்பத்தியில் ஈடுபட்டது. டிரான்ஸிஸ்டர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலேயே நிறுவனத்துக்கு சோனி என்று பெயரையும் மாற்றினார்கள்.

sonus and sonny என்றால் லத்தீன் மொழியில் ஒலி (சவுண்டு) என்று அர்த்தம்.
உலக அளவிலான ப்ராண்டாக அடையாளப்படுவதற்கு முன்பே, அதாவது 1955-ல் இங்கிலாந்தில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியது. சந்தையின் தேவை அதிகரிக்கிற இடத்தில்தான் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுவான ஸ்ட்ராடஜி. ஆனால், உலக அளவிலான ப்ராண்டு-ஆக வளர்வதற்கு முன்பே அதை நோக்கிய பயணமாக அசாத்திய நம்பிக்கையோடுதான் இங்கிலாந்தில் தொழிற்சாலையைத் தொடங்கினார்கள் சோனியின் சொந்தக்காரர்கள்.
ஜப்பான் மக்களைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டால் ஓய்வுகாலம்வரை அதே நிறுவனத்தில்தான் வேலை செய்வார்கள். நிறுவனம்விட்டு நிறுவனம் தாவுவது அங்கு கிடையவே கிடையாது. தவிர, ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறையில் வயது மற்றும் அனுபவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்த விஷயங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த முதல் நிறுவனம் சோனி.
1960-ல் வேலைநிமித்தமாக அமெரிக்கா சென்றார் அகியோ மோரிட்டா. அங்குள்ள நிறுவனங்களில் பணியாளர்கள் வேலை செய்யும் முறையைக் கவனித்தார். பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவத்தோடு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதும், இடைநிலை மேலாளர்களை நேரடியாக வேலைக்கு எடுப்பதும் அவருக்கு புதுமையான விஷயமாக இருந்தது. இந்த மேலாண்மை முறையை உடனடியாக சோனியில் கொண்டு வந்தார். பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களை சோனியில் பணியாற்ற அழைத்தார். இது நிறுவன வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

சோனி தனது நிறுவன வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிநாட்டு நபரான ஹோவர்டு ஸ்டிங்கர் (Howard Stringer) என்பவரை சிஇஓ-வாக பணிக்கு அமர்த்தியது. இதுவும் ஜப்பான் தொழிற்துறை வரலாற்றில் முதல் முயற்சிதான். அதுவரையில் ஜப்பான் நிறுவனங்கள் எதிலும் வெளிநாட்டு நபர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வந்ததில்லை. இந்த வரலாற்றையும் மாற்றியது இவர்கள்தான்.
இப்படி பல முயற்சிகளை சோனி தயங்காமல் எடுத்ததற்கு காரணம், ரிஸ்க் எடுக்க அது எந்த தயக்கமும் காட்டாததுதான். ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பான எல்லைக்குள் நின்றுகொண்டு சந்தை போட்டியை சமாளிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டிருந்தது சோனி. அதுதான், இங்கிலாந்தில் தொழிற்சாலையைத் தொடங்க செய்தது. அதுதான், பணியாளர்களை இடையில் வேலைக்கு அமர்த்தியது. அதுதான், முதல் சிஇஓ-வாக ஒரு வெளிநாட்டவரை நியமிக்கச் செய்தது. போட்டிகள் நிறைந்த சந்தையில் ப்ரீமியம் விலையிலேயே பொருட்களை விற்க முடிவு செய்தது.
சோனி சொல்லித்தரும் இன்னொரு முக்கிய பாடமும் உண்டு. பொதுவாக எந்த ஒரு கூட்டுத்தொழிலிலும் ஒரு கட்டத்துக்குமேல் பார்ட்னர்கள் ஒற்றுமையாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், சோனியின் நிறுவனர்கள் இருவரும் இந்த விஷயத்தில் வெளிப்படையாக இருந்தனர். ஒருவருடைய குறையை, இன்னொருவர் நிவர்த்தி செய்வதும், தங்களுக்குள் உள்ள ஏற்றஇறக்கங்களை பெரிதுபடுத்தாமல் பொதுவான நோக்கத்துக்கு ஏற்ப செயல்படுவது என்கிற புரிதலோடு இருந்ததால்தான் இத்தனை பெரிய வளர்ச்சி காண முடிந்தது!
ஒலி என்கிற ஒரு லத்தீன் சொல் இன்று பல கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு இணைந்திருப்பது இப்படிதான். இந்த ஸ்ட்ராடஜிகளைப் பயன்படுத்திதான் இப்போதும் சோனி உலகின் செல்லக் குழந்தையாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
(வியூகம் வகுப்போம்)