கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...நீரை. மகேந்திரன்
1,000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 2,250 கிலோகச்சிதமான கைடுலைன்...
##~## |
கட்டட வேலைகளில் அடிக்கடி புழங்கும் சொற்கள் குறித்து தெரிந்து கொண்டோம். இனிவரும் வேலைகளுக்கேற்ப அவ்வப்போது, மேலும் சில புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்வோம். இப்போது, நாம் நமது கனவு வீட்டைக் கட்டும் வேலையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
இதற்குமுன், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வேலைகள் தொடங் கியபின், ஏதாவது ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டாலும் வேலைகள் தாமதமாகும்.
பொதுவாக, கம்பி, சிமென்ட், ஜல்லி வகையறாக்கள் கிடைத்துவிடும். ஆனால், மணல், செங்கல் கிடைப்பதற்கு சிக்கல் ஆகலாம். வாய்ப்பிருந்தால் தேவையான அளவுக்கு முதலிலேயே அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
ஆற்று மணலோடு கடற்கரை மணலை கலப்படம் செய்து விற்கும்போக்கு உள்ளதால் நம்பிக்கையான சப்ளையரிடமிருந்து மணல் வாங்கவேண்டும். ஆற்று மணலோடு செயற்கை மணலையும் பயன்படுத்தி கட்டடம் கட்டலாம் என்பதால், ஆற்று மணலை குறைவாக வாங்கிக்கொண்டு செயற்கை மணலை தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம்.
செங்கல்லைப் பொறுத்தவரை, அது செக்கசெவேல் என்று இருந்தால்தான் வீடு உறுதியாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ஃப்ளை ஆஷ் கற்கள், ஏரோ கான் கற்கள் என நவீன வகையிலான கற்களும் இருக்கிறது. செங்கல்லைவிட இந்தவகை கற்கள் உறுதியானது. சேதம் அதிகமாக இருக்காது. எனவே, மொத்தமாகஅல்லது தேவைகேற்ப வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

வீடு கட்ட கிளம்பும்முன் அதற்குத் தேவையான பொருட்களை எவ்வளவுக்கு வாங்கிக்கொள்வது என்று கேட்கிறீர்களா?
1,000 சதுர அடியில் வீடு கட்ட சுமார் 2,250 கிலோ வரை (2.25 டன்) கம்பி தேவையாக இருக்கும். தற்போது கம்பியின் சந்தை விலை கிலோ ரூ.45 முதல் 55 வரை உள்ளது. சென்ற வாரத்தில் குறிப்பிட்டதுபோல டிஎம்டி கம்பி மற்றும் சாதாரண கம்பி, கட்டுக்கம்பி போன்றவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும். கம்பியில் துரு ஏறாமலிருக்க புதிய தொழில்நுட்பமாக கம்பிகள் மீது ஆயில் கோட்டிங் பூசப்படுகிறது. இதையும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
இதுதவிர, நமது கட்டுமான பரப்பளவு கணக்கின்படி, இதர கட்டுமான பொருட்களான மணல், சிமென்ட், செங்கல், ஜல்லியும் வாங்கிவிட வேண்டும். வீடு கட்டி முடிப்பது வரை முக்கால் ஜல்லி 4 யூனிட், சிமென்ட் 330 மூட்டை, செங்கல் 35 ஆயிரம், மணல் 22 யூனிட் தேவைப்படும். இவை தோராயமான மதிப்புதான். கூடுதலாகத் தேவைப்படுகிறபோது திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம்.
இவற்றை மொத்தமாக ஒரேமுறை வாங்கிவிடுவது நல்லது. காரணம், அவ்வப்போது விலை ஏறிக்கொண்டே இருக்கும். அல்லது நமக்குத் தேவைப்படுகிறபோது தேவைப்படுகிற அளவுக்கும் வாங்கிக்கொள்ளலாம்.

கட்டடம் கட்டத் தேவையான பொருட்களை பாதுகாக்க கட்டட வேலை நடக்கிற இடத்தில் சிறிதாக ஒரு கீற்றுகொட்டகை போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களைப் பாதுகாக்க நம்பிக்கையான ஓர் ஆளையும் நியமிக்க வேண்டும்.
கட்டட வேலைகளைத் தொடங்கும்முன், மனை அமையும் இடத்தை சமதளமாக ஆக்கவேண்டும். அப்போதுதான் நான்கு பக்க அளவுகளும் சரியாகப் பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கு முன்புறமுள்ள சாலையோடு ஒப்பிடுகையில், நமது மனை அமைந்துள்ள இடம் மேடாக இருக்கவேண்டும். சாலையைவிட மனை பள்ளமாக இருந்தால், அந்த சாலை மட்டத்தைவிட குறைந்தபட்சம் இரண்டடி உயரமாவது கட்டடத்தின் தளபரப்பை உயர்த்த வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் சாலையின் உயரம் அதிகரிக்கும்போது வீடு பள்ளத்தில் இருக்காது. மழைக்காலங்களில் அவதிப்படவேண்டிய அவசியமும் இருக்காது.
மனையை சமதளப்படுத்திய பிறகு, ப்ளானில் உள்ளபடி கயிறு அல்லது சுண்ணாம்பு கொண்டு மனையில் அளவுகளைக் குறிக்கவேண்டும். பில்லர், உள், வெளிச் சுவர்கள் (பிளிந்த்) அமைகிற இடம் போன்றவற்றை தெளிவாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டுதான் அஸ்திவாரம் தோண்டவேண்டும். முதலில் பில்லருக்கான அஸ்திவாரக் குழிகள் மற்றும் பிளிந்த் பீம் அமைப்பதற்கான குழிகளை எடுப்போம். பில்லர் அஸ்திவாரத்துக்கு 4 அடி அகலம், 4 அடி நீளம் (4ஜ்4) என்கிற அளவில் 5 அடி ஆழத்துக்கு குழி எடுக்கவேண்டும். மண் பரிசோதனை செய்தால், எத்தனை அடிக்கு அஸ்திவாரம் அமைக்கவேண்டும் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். இந்தக் குழியில் சென்ற வாரங்களில் நாம் பார்த்த தாங்குதிறன் அதிகரிக்கும் விஷயங்களை செய்துவிட வேண்டும். அதற்கடுத்ததாக உள், வெளிச் சுவர்கள் அமையவுள்ள இடத்துக்கான குழிகளை இரண்டடி ஆழத்துக்குத் தோண்ட வேண்டும்.

இது ஒருபக்கம் நடக்க, இதேநேரத்தில் கம்பி வேலைகளும் ஒருபக்கம் நடக்கவேண்டும். இதில் நாம் பெரிதாக தலையிட முடியாது. கம்பி கட்டுவதற்கான வேலையைச் செய்வதற்கு என்றே தனியாக இருப்பவர்களை இதற்கு அமர்த்திக்கொள்ளலாம். பில்லர், பிளிந்த், சன் ஷேடு, சிலாப், ரூப், படிக்கட்டு என கம்பி பயன்பாடுள்ள மொத்த வேலைகளையும் அவர்கள் செய்துவிடுவார்கள். கம்பியை வெட்டி, வளைத்து, காங்க்ரீட் போடுவதற்கு ஏற்ப செட் செய்து தருவது இவர்கள் வேலை. இந்த வேலைகளுக்கு சதுர அடிக்கு 50 முதல் 70 வரை கட்டணம் இருக்கும். இது ஊருக்கு ஊர் மாறுபடலாம்.
அஸ்திவார தூணுக்கு கம்பி கட்டும் வேலைகள் முடிந்தது எனில், நாம் ஏற்கெனவே தாங்குதிறனோடு தயார்படுத்தி வைத்துள்ள அஸ்திவாரக் குழிக்குள் கம்பியை நட்டுவிட வேண்டியதுதான். இதுபோல, ஒவ்வொரு குழியிலும் பில்லர் கம்பிகளை நிறுவி, அதைச் சுற்றிலும் பலகை அடிக்கவேண்டும். கம்பியைச் சுற்றி பலகை அடிக்கும்போது சுற்றளவு சரியாக உள்ளதா என்று பார்ப்பது முக்கியம். நம்மிடம் உள்ள ப்ளானில் தெளிவாக இதைக் குறித்திருப்பார்கள். இந்தக் கணக்கு துல்லியமாக, ஒரு குழியில் உள்ள மட்டத்தைப்போலவே இதர குழிகளிலும் இருக்கவேண்டும்.
இப்போது, அஸ்திவாரத் தூண் கம்பிகளை நட்டுவிட்டோம். அடுத்ததாக, காங்க்ரீட் வேலைகள் தொடங்கவேண்டும். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, கலவை சரியான ரேஷியோவில் கலக்கிறார்களா என்பதைத்தான். ஒரு பங்கு சிமென்ட்-க்கு, 4 பங்கு மணல், 6 பங்கு ஜல்லி. இதுதான் காங்க்ரீட்-க்கான கலவை. இதில் தண்ணீர்விட்டு கலவை தயாராகிறபோது தளதளவென கலவையைவிட்டு தண்ணீர் வெளியேறாதப் பக்குவத்தில் இருக்கவேண்டும்.
இப்படி தயார் செய்யப்பட்ட கலவையைத் தயாராக உள்ள பில்லர் கம்பிகளுக்குள் கொட்டி, காற்று இடைவெளிகள் இல்லாத அளவுக்கு கூர்மையான கம்பியைவைத்து அழுத்தம் தந்துகொண்டே இருக்கவேண்டும். அனைத்துத் தூண்களுக்கும் ஒரேநாளிலிலோ அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ வேலைகளை முடிக்கலாம். கலவை கலப்பதற்கு ஏற்ப ஆட்களையோ அல்லது கலவை இயந்திரத்தையோ வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
(கனவை நனவாக்குவோம்)
படங்கள்: வீ.சிவக்குமார்