மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி

சீமென்ஸ் சீக்ரெட்! 29பிசினஸ் தந்திரங்கள்!கம்பெனிகள் ஜெயித்த கதை

அனைத்து சந்தைப் போட்டிகளையும் சமாளித்து வரும் நிறுவனம் இது.

##~##

நூறாண்டுகளைக் கடந்த ஜெர்மனியைச் சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் கையாண்ட பிசினஸ் உத்திகளைப் பார்க்கும்முன், இந்த நிறுவனம் நிகழ்த்திய சில அற்புதங்களைச் சொல்கிறேன்.

டெலிகிராப் என்று குறிப்பிடப்படும் தந்தி சேவையை லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு 1866-ல் முதன்முதலில் தொடங்கியது இந்த நிறுவனம்தான்.  ஏறக்குறைய 11 ஆயிரம் கி.மீ.  தூரம், மூன்று வருடங்களில் இதற்கான வேலைகளை செய்துமுடித்தது இந்த நிறுவனம். தொலைத்தொடர்பு கட்டுமானத்தில் மிகப் பெரிய புரட்சி இது என்பது வரலாறு.

சீமென்ஸ் நிறுவனத்தில் 1914-ல் உலக அளவில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரம் பேர்.  தவிர, தொலைத்தொடர்பு துறையில் ஆட்டோமேட்டிக் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், விரைவு இணைப்பு என பல புத்தாங்கங்களுக்கு (Innovation) முன்னோடியாக இருந்தது சீமென்ஸ்தான்.

பொறியியல், ரசாயனம் படித்திருந்த வார்னர் வோன் சீமென்ஸ் 1846-ல் சிறிய அளவில் தொடங்கிய தொழில் இது. சிகரெட் பெட்டி, டின் ப்ளேட், காப்பர் வொயர்கள் செய்வது என சிறிய அளவில் தொடங்கியதுதான். பின்னர், தனது நண்பர் ஜோஹன் ஜார்ஜ் ஹல்ஸ்கே என்பவருடன் சேர்ந்து 1847-ல் சற்றே பெரிய அளவில் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். இதற்குபிறகு காப்பர் வொயர் தயாரிப்பிலும், தொலைத்தொடர்பு துறை சார்ந்த வேலைகளிலும் இறங்கினார்கள். அப்போது தொலைத்தொடர்பு முறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது இவர்கள் உருவாக்கிய பாயின்டர் டெலிகிராப் முறை.

ஸ்ட்ராடஜி
ஸ்ட்ராடஜி

1865 காலகட்டத்திலேயே டைனமோ முறையில் மின்சார உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியது.  1879-ல் முதன்முதலில் மின்சார ரயிலை கொண்டுவந்தது. 1880-ல் முதன்முதலில் மின்சார தெருவிளக்குகளை பெர்லின் நகரத்தில் நிறுவியது. இப்படி சீமென்ஸின் ஒவ்வொரு முயற்சியும் வரலாற்றுத் திருப்புமுனைகள் கொண்டவை.

சீமென்ஸ் தனது தொழில் உத்தியாக கையாண்ட விஷயங்களில் முக்கியமானது, தேவைக்கு ஏற்ப வேறொரு நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்ததும், தேவைக்கு ஏற்ப நிறுவனங்களை கையகப்படுத் தியதும்தான்.

அதேபோல, சீமென்ஸ் நிறுவனம் ஈடுபடாத தொழில்களே இல்லை.     மின்சாரம், மின்விளக்குகள், ரேடியோ, டெலிவிஷன், தையல் இயந்திரம், வாஷிங்மெஷின், மின்சார உற்பத்தி உபகரணங்கள் என பல துறைகளிலும் சீமென்ஸ் முத்திரை பதித்துள்ளது. ஐ.டி துறையில்கூட சீமென்ஸ் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சீமென்ஸ் நிறுவனம், ஜெர்மன் ராணுவத்துக்கு உதவி செய்தது என்கிற குற்றச்சாட்டை சந்தித்தது. இதனால் இரண்டாம் உலகப் போரின் முடிவில் தனது சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை இழந்திருந்தது. சுமார் 400 தொழிற்சாலைகளை இடம்விட்டு இடம் மாற்றியது.  இப்படி பல இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்து மீண்டு வந்துள்ள அனுபவமும் இந்நிறுவனத்துக்கு உள்ளது.

உலக அளவிலான நிறுவனம் என்றாலும், சந்தையின் தேவைக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளூர் தலைமைக்கு கொடுப்பது இந்த நிறுவனம் மேற்கொண்ட இன்னொரு முக்கிய உத்தி. அதாவது, இந்தியாவில் எடுக்கவேண்டிய கொள்கை முடிவை, இந்தியத் தலைமையே எடுக்கலாம்.  

ஸ்ட்ராடஜி

சரியாக வழிநடத்தும் குடும்பத் தலைமை, ரிஸ்க் எடுப்பது, உலகத்தின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை வகுப்பது என்பது போன்ற தொழில் உத்திகள் இருந்தாலும், சில முன்னுதாரணமான தொழில் உத்திகளை இந்த நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.

பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள், பணியாளர்களுக்கான சங்கத்தை அனுமதித்தது போன்ற விஷயங்களிலும் முன்னுதாரணமாக நின்றது இந்த நிறுவனம். முக்கியமாக, 1960-லேயே பணியாளர்களுக்கு பங்குகளைத் தரும் பழக்கத்தைக் கொண்டுவந்தது. 1872-லேயே தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறையை இந்த நிறுவனம் கொண்டுவந்தது. தொழிலாளர்களுக்கான தொழில் வரைமுறைகள் குறித்து  தெளிவான திட்டமில்லாத காலத்திலேயே இந்த மாற்றங் களைக் கொண்டுவந்தது ஆச்சர்யம்தான்!

ஒரே ஒரு தொழிலில் ஈடுபடுபவர்கள்கூட சந்தைப் போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும்போது, சீமென்ஸ் பல தொழில்களையும் செய்கிறது. எல்லாத் தொழில் களிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் ஷேரை பிரித்துக் கொண்டுள்ளது. இப்போதும் உலக அளவில் 190 நாடுகளில் தனது பெயரை உச்சரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

கிரீஸின் பொருளாதாரச் சிக்கலுடன் இந்த நிறுவனத்தை சம்பந்தப்படுத்தி சிலர் பேசினாலும், அதுபற்றி கவலைப்படாமல் 4,50,000 பணியாளர்களோடு அனைத்து சந்தைப் போட்டிகளையும் சமாளித்து வருகிறது சீமென்ஸ்!

(வியூகம் வகுப்போம்)