மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு : சுவர் எழுப்புவோம்!

சொந்த வீடு : சுவர் எழுப்புவோம்!

##~##

அஸ்திவார வேலைகள் தொடங்கி பில்லர் நிறுத்திவிட்டோம். இனி வேலைகள் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நடக்க வேண்டும். இதற்கேற்ப ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வேலைகளை ஒருங்கிணைக்க வேண்டும். வேலை நடக்கும் எல்லா நேரத்திலும் அங்கு சென்றுவர வேண்டும். அல்லது நமது குடும்ப உறுப்பினர் ஒருவர் வேலை நடக்கும் இடத்தில் இருக்கவேண்டும்.  ஒவ்வொரு வேலையிலும் நமது வழிகாட்டுதலும், ஆலோசனையும் இருக்கவேண்டும். அல்லது உடனிருந்து சரியாகத்தான் செய்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.

தவிர, கட்டுமான வேலையை நாமே முன்னின்று மேற்கொள்வதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதில் முக்கியமானது கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்புச் சார்ந்த விஷயங்கள்.   முறைச்சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் காப்பீடு அவருக்கு இருக்கிறதா என்பதை விசாரித்துக்கொள்ளவும். அவர்களிடம் காப்பீடு இல்லையென்றால் கட்டுமான வேலைகள் முடியும் வரையில் அவர்களுக்கு தொழிலாளர் இழப்பீடு பாலிசி (workers compensation policy)எடுத்துக்கொடுக்கலாம். பத்து நபர்களுக்கு நபருக்கு ஐந்து லட்சம் கவரேஜ் என்றாலும் அதிகபட்சமாக 10,000 ரூபாய்க்குள்தான் ப்ரீமியம் வரும். அவசர காலத்தில் இது உதவும்.

சொந்த வீடு : சுவர் எழுப்புவோம்!

வேலை நடக்கும் இடத்திலேயே முதலுதவிக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை வாங்கிவைத்துவிட வேண்டும். பாதுகாப்புத் தலைகவசங்கள் அவசியம்தான் என்றாலும், ஆரம்பக் கட்டத்திலேயே அது தேவையில்லை. மேலும், அருகிலுள்ள மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை எழுதி தொழிலாளர்களின் பார்வையில் படும் இடத்தில் வைக்கவேண்டும். தவிர, நமது மனையின் சர்வே எண், ப்ளான் அப்ரூவல் அனுமதி விவரம் போன்றவற்றை எழுதி வீட்டின் முகப்பு பக்கம் பார்வையில் படும் இடத்தில் வைக்கவேண்டும்.

சரி, இப்போது கட்டுமான வேலைகளுக்கு வருவோம். அஸ்திவார பில்லர்கள் எழுப்பப்பட்டுவிட்டது. இதில் முதல்கட்டமாக தாங்கு தளத்திலிருந்து ஐந்து அடி உயரத்துக்கு எழுப்பிக்கொள்ளலாம். இப்படி எழுப்பியுள்ள தூண்களின் குழிகளை மூடுவதும், அந்த தூண்களை அப்படியே உலரவிடாமல் ஈரம் காயக்காய தண்ணீரை ஊற்றி உறுதிப்படுத்துவதும்  அவசியம்.

இந்த பில்லர் குழிகளை மூடுவதற்கு முன்பு பிளிந்த் பீம் ஜாயின்ட் வேலைகள் இருக்கிறது. நாம் ஏற்கெனவே பிளிந்த் பீம் (உள், வெளி சுவர்கள்) பீம் அமைப்பதற்காக இரண்டடி ஆழத்துக்கு குழிகளை எடுத்துவைத்துள்ளோம். இப்போது இந்த வேலைகளை தொடங்கலாம்.

சொந்த வீடு : சுவர் எழுப்புவோம்!

பிளிந்த் பீம் என்பது வேறொன்றுமில்லை. சுவர்களை அப்படியே தரையிலிருந்து எழுப்பாமல், அதற்கு கீழே ஒரு தாங்குதிறனை அதிகரிக்கும் வேலைதான். அதாவது, சுவர்களுக்கு கீழே காங்க்ரீட் போட்டு, அதை தாங்குதிறனாக வைத்து, அதன் மீது சுவரைக் கட்டி எழுப்பவேண்டும். இப்படி அமைக்கப்படும் பிளிந்த் பீம் நான்கு பக்க பில்லர்களையும் இணைக்க வேண்டும்.

நாம் ஏற்கெனவே எடுத்துள்ள இரண்டடி ஆழ குழிக்குள் இரண்டு அங்குலம் வரை கிரஷர் டஸ்ட் மற்றும் மணலைகொண்டு நிரப்பி அதன்மீது தரைமட்டம் வரை ஒரு அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த மட்டத்தைக்கொண்டு கம்பி வேலைகளைச் செய்து, அதன்மீது காங்க்ரீட் போடவேண்டும். காங்க்ரீட் வேலைகளுக்கு நாம் சென்ற வாரம் குறிப்பிட்டதுபோல கலவை பதமாக இருக்கவேண்டும். இதை 'பெல்ட் பீம்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

இந்த பெல்ட் பீமை குழி எடுக்காமல், அப்படியே தரைமட்டத்திலிருந்தே அமைத்து, அதன்மீது சுவர் எழுப்பும் முறையும் உள்ளது. நாம் கொஞ்சம் பழைய முறையைதான் கடைப்பிடிக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் கட்டடத்தில் அழுத்தம் கூடினாலும் தாங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த பிளிந்த் பீம்களை பொறுத்தவரை, நான்குபக்க சுற்றுசுவர்கள் மற்றும் உள்பக்க சுவர்கள் என எல்லாவற்றையும் இணைக்கவேண்டும். அதனால்தான் அதை 'பெல்ட் பீம்’ என்று குறிப்பிடுகிறார்கள் கட்டுமானத் துறையில்.

இப்போது பில்லர் மற்றும் பிளின்த் பீம் வேலைகள் முடிந்துவிட்டது. இனி இதை ஆதாரமாக வைத்து சுவர் கட்டும் வேலைகள் தொடங்க வேண்டியதுதான். இரண்டு நாள் இடைவெளியில் சுவர் கட்டும் வேலையைத் தொடங்கிவிடலாம்.

சொந்த வீடு : சுவர் எழுப்புவோம்!

சுவர் கட்டும் வேலைகளில் முதலாவதாக, தளத்தின் அடித்தளத்திலிருந்து தளமட்டம் வரை (Plinth Level) வரை கட்டுவது. இதை செங்கல் வைத்துத்தான் கட்டவேண்டும் என்பதில்லை. ஃப்ளை ஆஷ் கற்கள், காங்க்ரீட் கற்கள்

(Precast Solid Concrete Block) கொண்டும் கட்டிக்கொள்ளலாம். தளமட்டத்தைவிட கூடுதலான உயரத்துக்கு சுவரை எழுப்பிக்கொண்டு தளமட்டம் சரிசெய்யும் வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும்.

நாம் சென்ற வாரங்களில் குறிப்பிட்டதைபோல கிரஷர் டஸ்ட், செஞ்சரளை மண் கலவை மற்றும் செங்கல் ரப்பீஸ், காங்க்ரீட் ரப்பீஸ் போன்றவற்றை அடுக்கு அடுக்காகக் கொட்டி தளமட்டத்தைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுவர் கட்டும்போது, தளமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 10 அடி உயரமாவது சுவர் அமையவேண்டும். அதாவது, உள்மட்டம். இதை 'சீலிங் லெவல்’ என்றும் குறிப்பிடுவார்கள். மேலும், ஜன்னல், சிலாப், சன்ஷேடு லெவல்களை கணக்கில்கொள்ள வேண்டும். தளமட்டத்திலிருந்து 3 அடி உயரத்தில் ஜன்னல் மட்டத்துக்கு இடம் விட்டு கட்டவேண்டும். ஏழாவது அடியில் முடிந்து அதிலிருந்து இரண்டடி உயரம் சுவர் கட்டும் வேலைகள் இருக்கவேண்டும். ஜன்னல் மட்டத்துக்கு கீழும், மேலும் குறுக்குவாக்கில் பட்டைக் கம்பிகள் கொடுத்து கால் அடி அளவுக்கு காங்க்ரீட் போட்டுக்கொள்ள வேண்டும். சுவர் மட்டத்துக்கு மேலே அரை அடி உயரத்துக்கு இதேபோல குறுக்குக் கம்பிகள் தந்து  காங்க்ரீட் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஜன்னலை உங்கள் தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம் என்றாலும், உயரம் நான்கு அடி  போதுமானது. தேவைக்கு ஏற்ப நீள்வாக்கில் கூடுதலாக்கிக்கொள்ளலாம். சுவர்களுக்கு இடையில் ஏன் காங்க்ரீட் போடவேண்டும் என்று யோசிக்கவேண்டாம். நில அதிர்வுகளை தாங்கி, சுவர்களில் விரிசல் வராமல் தடுக்கும் தொழில்நுட்பம் இது. அதிகமான நிலஅதிர்வாக இருந்தாலும், மொத்த சுவரிலும் விரிசல் விழாமல் இடையில் தடுத்துவிடும்.

சுவர் கட்டும் வேலைகளுக்கு ஒரு பங்கு சிமென்ட், மூன்று பங்கு மணல், தேவைக்கு ஏற்ப தண்ணீர் கலந்து கலவை உதிரித் தன்மையில் இருக்கவேண்டும். கட்டும்போது மேலதிகமாக தண்ணீர் விட்டு கொத்தனார் குழைத்துக் கொள்வார். ஒருவேலை இந்த கலவை மீதம் இருக்கும்பட்சத்தில், இந்த பக்குவத்தில் இருந்தால்தான் அடுத்தநாள் பயன்படுத்த முடியும்.

செங்கற்களை கையாளும்போது சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுதளத்துக்கு  செங்கற்களை கொண்டுவந்தபின், அதன்மீது தண்ணீர் தெளிப்பது நல்லது. இதனால் செங்கல்லின் வெப்பம் தளர்ந்து, சிமென்ட் கலவையுடனான பிணைப்பு கூடும். சுவர் கட்டும் வேலைகளின்போது அடிக்கடி மட்டம் பார்த்து, அளவு பார்த்து சீராக இருக்கிறதா என சோதித்துக் கொண்டிருக்க வேண்டும். நான்கு பக்கங்களிலும் ஒரே சீரான அளவில் கட்டிவருவது சிறந்தது.

(கனவை நனவாக்குவோம்)

படங்கள்: வீ.சிவக்குமார்,
மகா.தமிழ்ப்பிரபாகரன்.