பிசினஸ் தந்திரங்கள்! கம்பெனிகள் ஜெயித்த கதை ஸ்ட்ராடஜி | 30 |
தனது சந்தை எது என்பதில் தெளிவாக இருந்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
##~## |
இணையதள உலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த நிறுவனங்களுள் முக்கியமானது ஃபேஸ்புக். அத்தியாவசிய தேவைகளுக்கு அடுத்தபடியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களால் தவிர்க்க முடியாமல் இருக்கிறது இந்த இணையதளம். குறுகியகாலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி ஆச்சர்யமானது. உலக அளவில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் என்கிற பட்டியலில் ஃபேஸ்புக்கும் உண்டு.
2004-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஓ வந்தபோது, அதன் பங்குகளை அமெரிக்காவின் பல முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கினார்கள். இதனால் எதிர்பார்த்ததைவிட அதிக நிதி கிடைத்தது. புதிதாக ஐபிஓ வரும் நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த நிதி கிடைப்பது அரிதானது. இந்த ட்ரெண்டை உடைத்தது ஃபேஸ்புக்.
ஒரு தொழிலை தொடங்கி ஜெயிக்க அது ஒரு புதிய கான்செப்ட்-ஆக இருக்கவேண்டும் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், ஃபேஸ்புக்கின் கான்செப்ட் அந்தவகையிலும் கிடையாது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒரு கான்செப்ட்தான். பெயரில்கூட மாற்றமில்லை. கல்லூரி இறுதி வருடங்களில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பற்றிய குறிப்பு, புகைப்படம் இவற்றை தொகுத்து வெளியிடும் பழக்கம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளதுதான். இதை காலேஜ் டைரக்டரி அல்லது ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம்.

பெரிய முதலீடுகளும் கிடையாது. எதிர்காலத்தில் பெரிய நிறுவனமாக வளர்வதற்கான உலகக் கண்ணோட்டமுடைய திட்டமும் இல்லை. தவிர, ஃபேஸ்புக்கை தொடங்கும்போது அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு வயது 19. ஆக, தொழிலில் முன்அனுபவமும் கிடையாது. நீங்கள் ஒரு தொழிலை மேற்கொள்கிறீர்கள் என்றால், சந்தையை உங்களது பக்கம் திருப்ப இந்த நான்கு விஷயங்களிலும் பக்காவாக இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே இல்லாமல் ஃபேஸ்புக் வெற்றி பெற்றது.
ஃபேஸ்புக்கின் வரலாறு இப்படி பாசிட்டிவாக இருந்தாலும், தொடக்க கால கதை சுவாரஸ்யமானது. 2003-ம் ஆண்டின் இறுதியில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க் ஜூகர்பெர்க்கை அவருடைய சீனியர் மாணவர் ஒருவர் தனது ப்ராஜெட்டுக்கு வேலை செய்துதர அழைக்கிறார். அதாவது, ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் ஒருங்கிணைக்கும் வகையில் ஹார்வேர்டு கம்யூனிட்டி டாம் காம் என்கிற ப்ராஜெக்ட் தொடங்குவதற்கான முனைப்பில் இருந்தார் அந்த மாணவர். அவருக்கு உதவி செய்ய மார்க் ஜூகர்பெர்க்கை அழைக்கிறார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடவைக்கும்விதமாக இந்த ஹார்டுவேர்டு கம்யூனிட்டி டாட் காம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ப்ராஜெக்டில் வேலை செய்வதாக ஒப்புக்கொண்ட மார்க் சில நாட்களுக்குப் பிறகு தனியாக தனது நண்பர்களோடு சேர்ந்து ஃபேஸ்புக் டாட் காம் என்கிற பெயரில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு இணையதளத்தைத் தொடங்கி விடுகிறார்.
இது, அவருடைய சொந்த ஐடியாவா அல்லது பிறருடைய ஐடியாவா என்கிற சிக்கல் நடந்து கொண்டிருக்கும்போதே ஹார்வேர்டு யுனிவர்ஸிட்டி தாண்டி அடுத்தடுத்த பல்கலைக்கழகம், கல்லூரிகள், இளைஞர்கள் என்கிற ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து, பொதுவான சமூக வலைதளமாக பரந்து விரிந்துவிட்டது ஃபேஸ்புக். விளையாட்டாக ஆரம்பித்த ஒரு இணையதளத்தின் இன்றைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர். ஆரம்பத்தில் ஒரேஒரு பல்கலைக்கழகத்தை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம் இன்று தினசரி 1 பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது.

கான்செப்ட் திருடப்பட்டதா அல்லது சொந்த ஐடியாவா என்கிற பேச்சுகளையெல்லாம் தாண்டி, ஒரு ஐடியாவை எப்படி வெற்றிபெற வைப்பது என்கிற விஷயத்தைதான் மார்க் ஜூகர்பெர்க்கிடம் கவனிக்க வேண்டும். ஒருவேளை இந்த கான்செப்ட் அவரது சீனியர் மாணவருடையதாகவே இருந்து அவர் ப்ராஜெக்டை தொடங்கி, வெற்றிகரமாக வளர்க்கவில்லை என்றால், கான்செப்ட் மீதான கருத்தே மாறியிருக்கும். அதாவது, ஒரு ஐடியாவை ஒருவர் சக்சஸ்ஃபுல்லாக மாற்றுவதும், அதையே வேறொருவர் ஃபெயிலியர் ஆக்குவதும் சகஜமாக நடப்பதுதான். இதில் மார்க் வெற்றிபெற்றார்.
இந்த கான்செப்டை வளர்க்க புதிதுபுதிதாக யோசித்துக் கொண்டே இருந்தார்கள். முதலில், மாணவர்கள் மட்டும்தான் இந்த தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பதிலிருந்து பொதுவானவர்களையும் அனுமதித்ததோடு பயனீட்டாளர்களின் சுயவிவரங்கள் தவிர, கருத்துகளை பதிய, பகிர்ந்துகொள்ள, அதற்கு விருப்பம் தெரிவிக்க, புகைப்படங்கள் பதிவேற்ற என அடுத்தடுத்து தொழிலில் நிலைத்து நிற்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தது ஃபேஸ்புக். புதுமையைத் தொடர்ந்து புகுத்தவில்லை என்றால், சந்தையில் நிற்க முடியாது என்பதை ஃபேஸ்புக் புரிந்துவைத்திருந்தது. சற்றேறக்குறைய இவர்களது சமகால போட்டியாளராக இணைய உலகில் கோலோச்சும் கூகுள், இதுபோல ஒரு தளத்தை உருவாக்கி ஃபேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளிவிடலாம். அந்த முயற்சியில்தான் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த ரேஸில் எவரையும் அருகில் நெருங்க விடாமல் தனி ஒரு வெற்றியாளராக தன்னை நிலைநிறுத்த புதுப்புது வசதிகளை அளித்துக்கொண்டே இருக்கிறது ஃபேஸ்புக்.
புதிய தலைமுறையின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்ட ஃபேஸ்புக், அதற்காக தன்னையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஃபேஸ்புக் தனது செலவில் ஆராய்ச்சி வேலைகளுக்குத்தான் அதிக செலவு செய்கிறது. தவிர, லாபம் வருகிறதோ இல்லையோ பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுதான் அதன் இலக்கு. உடனடி லாபம் இல்லாமல், சந்தையை விரிவுபடுத்துவதும், சந்தையின் தேவைகளை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவதும் ஒரு தொழில் உத்திதான். முக்கியமாக சொல்வது என்றால், வளர்ந்த பிறகு வருமானம் பார்த்தது ஃபேஸ்புக்.
தனது சந்தை எது என்பதில் தெளிவாக இருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். பயனீட்டாளர்கள் யாவரும் வளரும் தலைமுறை என்பதால், அவர்களை தக்கவைத்துக்கொள்ள யோசித்தார்கள். உலகநடப்புகளை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதும், பயனீட்டாளர்களின் உணர்வுகளுக்கு ஏற்படச் வைத்துக்கொள்வதும், இளைய தலைமுறையின் விருப்பத்துக்கேற்ப வசதிகளை அதிகப்படுத்தியதும் நடந்தது. பொதுவான சந்தை உத்தியைப் பயன்படுத்தாமல் இந்த செக்மென்ட்தான் என்பதில் தெளிவாக இருந்தது ஃபேஸ்புக். ஒருகட்டத்தில் செக்மென்டில் மாற்றம் செய்தாலும் அதற்கேற்ப தகவமைத்துக்கொண்டது.
பேஸ்புக் சொல்லும் சேதி இதுதான்: உங்கள் ஐடியா மீது நம்பிக்கை வையுங்கள்.
(வியூகம் வகுப்போம்)
ஆம் ஆத்மியில் பாலகிருஷ்ணன்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ நந்தன் நிலகேனி கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்கிற தகவல் ஏற்கெனவே வலம் வந்துகொண்டிருக்க, சமீபத்தில் இன்ஃபோசிஸின் சிஎஃப்ஓ பதவியிலிருந்து விலகிய பாலகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து இன்னும் யாரெல்லாம் அரசியல் கட்சியில் சேருவார்களோ!