மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

வடிவத்துக்கு வந்த கனவு இல்லம்! 18நீரை. மகேந்திரன்

அஸ்திவார வேலைகள் தொடங்கி, காங்க்ரீட் தளம் வரைக்கும் வேலைகள் செய்துமுடிக்க குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

##~##

மெல்ல மெல்ல வளர்ந்துவரும் நம் கனவு வீடு இப்போது சுவர் கட்டுகிற அளவுக்கு வந்துவிட்டது. இனி நமக்குத் தேவையான இடங்களில் ஜன்னல் வைத்துக்கொள்ளலாம். இந்த ஜன்னல் மட்டங்களுக்குமேலே கால்  அடிக்கு த்ரோ லென்டல் பீம் (through lintel beam) அமைக்கவேண்டும் என கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

இதை சில இடங்களில் ஜன்னல் மட்டத்துக்குமேலே கட் லென்டலாக (cut lintel) மட்டும் அமைத்துக்கொள்வார்கள். நாம் முழு சுவருக்குமான த்ரோ லென்டல் அமைத்துக் கொள்ளலாம். இந்த லென்டலில் இருந்துதான் சன்ஷேடு மற்றும் தேவையான இடங்களில் உள்பக்க சிலாப் அமைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் அதிகபட்சமாக இரண்டு அடிக்குமேல் நீளம் கூடாது. இந்த வேலைகள் முடிந்தபிறகு, அதாவது லென்டல் பீமுக்குமேலே இரண்டு அடிகள் சுவர் கட்டி அதற்கு மேல் அரை அடிக்கு மீண்டும் த்ரோ லென்டல் பீம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வேலைகள் முடிந்ததும் அடுத்தகட்டமாக மேற்கூரை  வேலைகள் தொடங்க வேண்டும். நாம் முன்பே குறிப்பிட்டதைப்போல, மேற்கூரை அமைக்கும் வேலைகளுக்கு 10எம்எம் கம்பிகளைப் பயன்படுத்தலாம். ஒரேநாளில் தளத்தின் மொத்த பரப்புக்கும் காங்க்ரீட் வேலைகளை முடித்துவிட வேண்டும். மேலும், தளம் போடும்போதே மாடிப்படிக்கான சாய்வுத்தளமும் அமைத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் செலவைத் தவிர்க்க முடியும்.  

மேற்கூரை போடுவதற்கான கம்பி வேலைகள் முடிந்ததும், வொயரிங் வேலைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். இதற்கேற்ப வொயரிங் பைப், கூரை கம்பிகளில் உள்பக்கமாக வைத்துதான் காங்க்ரீட் போடவேண்டும். காங்க்ரீட் போட்டபிறகு, சீலிங்கை உடைத்து, அதற்குள் பைப்புகளைப் பொருத்தும் வேலையைத் தவிர்க்க வேண்டும். எனவே, எந்தெந்த இடங்களில் வொயரிங் பாய்ன்ட் இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, அதாவது சீலிங்கில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வொயரிங் கனெக்ஷன் எடுத்துக்கொள்வதுபோல பைப்விட்டு காங்க்ரீட் போடவேண்டும். மேற்கூரை காங்க்ரீட் எத்தனை அடி தடிமனில் அமையவேண்டும் என்பதை ப்ளானில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த ப்ளான் அளவில் மாற்றங்களைச் செய்யக்கூடாது. 

சொந்த வீடு கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

மேற்கூரை காங்க்ரீட் முடிந்து குறைந்தபட்சம் 12 நாட்களுக்குப் பிறகுதான் அதைத் தாங்கி நிற்கும் பலகைகளை அகற்ற வேண்டும். இந்த காங்க்ரீட்டில் தினசரி காலை, மாலை இரண்டு நேரமும் தண்ணீர் தேக்கி அதை உறுதிபடுத்த வேண்டும். இப்படி தண்ணீர் தேக்குவதன் மூலம் காங்க்ரீட்டில் நீர் கசிவு இருப்பதை சோதிக்க முடியும். நீர் கசிவு இருந்தால், அதை அடைப்பதற்கு தனியாக சீலன்ட்டுகள் (Sealants) உள்ளன. இவற்றை வாங்கி பயன்படுத்தினால் நீர்கசியும் துளைகள் அடைபட்டுவிடும்.  

காங்க்ரீட் வேலைகளுக்கு மட்டுமல்ல, மொத்த கட்டுமான வேலைகளுக்குமே குறைந்தபட்சம் 15 நாட்களாவது தண்ணீர் விடவேண்டும்.  மேற்கூரை போட்டு முடித்தபிறகு அதற்கும்மேலே இரண்டு அல்லது மூன்றடி உயரத்துக்கு சுவரை எழுப்பிவிட்டால் கிட்டத்தட்ட கனவு இல்லம் ரெடியான மாதிரிதான்.  

சொந்த வீடு கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

மேற்கொண்டு தளம் அமைக்கப் போகிறோம் என்றால் இரண்டடி சுற்றுச்சுவர் போதுமானது. இல்லை யென்றால் மூன்றடிக்கு கட்டிக்கொண்டு வேலைகளை முடித்துக்கொள்ளலாம்.

இப்போது நமது கனவு இல்லம் ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டது.  அஸ்திவார வேலைகள் தொடங்கி, காங்க்ரீட் தளம் வரைக்கும் வேலைகள் செய்துமுடிக்க குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

இனி, அடுத்தகட்டமாக மர வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே இந்த வேலைகளிலும் கவனம் இருக்க வேண்டும். ஜன்னல் எப்படி வர வேண்டும், வாசல் நிலைகள், கதவுகள், ஜன்னல் கிரில் வேலைகளையும் அந்தச் சமயத்தில் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கடுத்து வீட்டுக்கான வொயரிங் வேலைகள் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.  நன்கு வேலை தெரிந்த ஒரு எலெக்ட்ரிஷியனை இந்த வேலைக்கு அமர்த்திக்கொள்வது நல்லது. நமது தேவைக்கேற்ப எந்தெந்த இடங்களில் ஃப்ளக் பாயின்ட்கள் வரவேண்டும் என்பதைக் குறித்துதந்துவிட்டால், சுவரை லேசாக உடைத்து, பைப்புகள் மற்றும் ஃப்ளக் போர்டுகள் வைத்து, சிமென்ட் பூசிவிடுவார்கள். இதற்கடுத்து உட்பக்க சுவர்களின் பூச்சு வேலைகளுக்குப் போய்விடலாம். இதற்குமுன் மரவேலைகள் மற்றும் வொயரிங் வேலைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

(கனவை நனவாக்குவோம்)

படங்கள்: கே.குணசீலன், வீ.சிவக்குமார்.

கரையான் அரிக்காமல் இருக்க..!

அடித்தள வேலைகள் தொடங்கும்போதே இடத்தை சமப்படுத்த யோசனை சொல்லியிருந்தோம். அந்த வேலைகள் செய்து முடித்ததும் கட்டட வேலைகள் தொடங்குவதற்குமுன், கரையான் அரிப்பிலிருந்து கட்டடத்தைப் பாதுகாக்க ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் கான்சன்ட்ரேட் மருந்தை வாங்கிவந்து ஒரு பங்கு மருந்துக்கு 20 பங்கு தண்ணீர்விட்டு கலந்து மனை அமையவுள்ள இடம் முழுவதும் தெளித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், சமப்படுத்திய தளம், பில்லர் குழிகள், பிளிந்த் பீம் குழிகள் என அனைத்து இடங்களிலும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் வீடு கட்டியபிறகு கரையான் அரிப்புகள் இருக்காது. இதுவும் ஒருவகையில் கட்டடப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.