மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

ப்ளம்பிங், எலெக்ட்ரிக், மரவேலைகள்! 19நீரை.மகேந்திரன்

சொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...
##~##

நம்  வீட்டுக்கான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை செய்ய நாமே நேரில் போய் மரம் வாங்குவது நல்லது!

கனவு இல்லத்தைப் பலவிதமான கஷ்டங்களுக்கும் நடுவே கம்பீரமாக கட்டிமுடித்துவிட்டோம்.  இதற்கடுத்து நாம் செய்கிற வேலைகளில்தான் நமது நேர்த்தி, ஆர்வம், திருப்தி போன்ற விஷயங்கள் அடங்கி இருக்கிறது. நாம் சென்ற வாரம் குறிப்பிட்டதைப்போல, அடுத்தகட்ட வேலையாகப் பூச்சு வேலைகள், வொயரிங், மரவேலைகளில் கவனம் செலுத்துவோம்.

பூச்சுவேலைகள் தொடங்கும்முன் மரவேலைகளில் கவனம் செலுத்தலாம். ஏற்கெனவே ஜன்னலுக்கு இடம்விட்டு கட்டட வேலைகளை முடித்து வைத்திருக்கிறோம். தவிர, வாசல் நிலை மற்றும் கதவு, உள் அறைகளுக்கு நிலைக் கதவுகள், பின்வாசல் கதவு போன்றவை அத்தியாவசிய மரவேலைகள்.

இவை அனைத்துமே அளவு களுக்கேற்ப ரெடிமேடாக கிடைக்கும் என்றாலும், நாமே பார்த்து பார்த்து மரம் வாங்கி இழைத்து நமது மேற்பார்வை யில் செய்வது இன்னும் சிறப்பானது. திருப்தியாகவும் இருக்கும். கனவு இல்லம் குறித்து நாம் பெருமையாக குறிப்பிடும்போது, இந்தச் சின்ன சின்ன வேலைகள்தான் நமக்கு மகிழ்சியைத் தரக்கூடியது.

முதலில் தொழில் அனுபவமுள்ள நம்பிக்கையான தச்சர் ஒருவரை அமர்த்திக்கொள்ளுங்கள். அவர் மூலமாக மரம் வாங்குவது நல்லது. ஜன்னல், கதவு வேலைகளுக்கு படாகு அல்லது பர்மா தேக்கு வகைகள் உகந்தது. இந்த மரவகைகள் நீண்டகாலம் உழைக்கும் தன்மை கொண்டவை. கானா தேக்கு மற்றும் இதர மரவகைகள் நீண்ட காலத்துக்கு அதே பொலிவோடு இருப்பதில்லை.

சொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

மரம் வாங்குவதில் இன்னொரு முக்கிய விஷயம், மரம் வாங்கும் கடையைப் பொறுத்தும் நம்பிக்கையாக இருக்கும் என்கிறார்கள். குறைந்த விலையில் பர்மா தேக்கு தருகிறோம் என்று கானா தேக்கு மரங்களை கலந்துதருவதும் நடக்கும். எனவே, நம்பிக்கையான கார்பென்டர், நம்பிக்கையான கடை இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்கவும்.

வாசல் நிலை ஏழு அடி உயரம், மூன்றரை அடி அகலம் அமைய வேண்டும். நமது கட்டட ப்ளான்படி,  ஜன்னலுக்கு இடம்விட்டது போலவே இதற்கும் ஏற்கெனவே இடம் விட்டிருப்போம். வாசல்நிலை 5-க்கு 3 இன்ச் தடிமனில் அமைய வேண்டும். உள்அறைகளைப் பொறுத்தமட்டில் படுக்கைஅறைகள் தவிர, இதர அறைகளுக்கு நிலைகதவு இல்லாமலும் விடலாம் அல்லது தேவையெனில் வைத்துக்கொள்ளலாம். படுக்கைஅறைக்கான நிலை 7-க்கு அடிக்கு 3 அடி கணக்கில் வைத்துக் கொள்ளலாம். படுக்கைஅறை மற்றும் உள்அறைகளின் நிலை வைக்கும்போது, கீழ்பகுதி குறுக்கு மரம் தேவையில்லை. மூன்று பக்கம் மட்டும் போதும். பின்பகுதி வாசல்விட்டிருந்தால் முன்வாசலுக்கு வைத்த கணக்கில் பின்பக்க வாசலுக்கும் நிலை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

சொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

பாத்ரூம் வாசல் ஏழு அடி உயரத்துக்கு இரண்டறை அடி அகலத்தில் அமையவேண்டும். இதற்கு மரக்கதவுகள் தேவையில்லை. பிவிசி கதவுகளை வாங்கிப் பொறுத்திக் கொள்ளலாம். ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது.  மரக்கதவுகளுக்கு மாற்றாக ஃபைபர் ரீஇன்போர்ஸ்டு ப்ளாஸ்டிக் கதவுகளும் கிடைக்கிறது. வாசல்கதவு தவிர, இதர அறைகளுக்கு இதையும் பயன்படுத்தலாம். நீண்ட காலம் உழைக்கும் என்றாலும், மரக்கதவுகளோடு ஒப்பிடும்போது சற்று விலை அதிகமாக இருக்கும்.

சொந்த வீடு: கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

ஜன்னல் சட்டங்களில் க்ரில் பொருத்துவதிலும் நுணுக்கம் உள்ளது. அதிலும் நமது கவனம் இருக்கவேண்டும். ஜன்னலுக்கான மரச்சட்டங்களில் க்ரில் கம்பிகள் பொருத்துவதில் இரண்டு வகைகள் உள்ளது. க்ரில் கம்பியை ஜன்னல் மரச்சட்டத்துடன் வைத்து ஸ்குரு அடித்துவிடுவது ஒருவகை என்றால், மரச்சட்டத்தில் துளையிட்டு அதில் க்ரில் கம்பிகளை பொருத்துவது இன்னொருவகை. இரண்டாவதாக, சொன்னதுபோல வேலைகளைச் செய்துகொள்வதுதான் கூடுதல் பாதுகாப்பானது.

ஜன்னல் மற்றும் வாசல் நிலைகளுக்கான மரவேலை நடந்து கொண்டிருக்கும்போதே வொயரிங் வேலைகள், தண்ணீர் குழாய்கள், பாத்ரூம் குழாய்கள் பதிக்கும் வேலை களும் நடக்கவேண்டும். இதற்கு ஏற்ப நம்பிக்கையான ப்ளம்பர், எலெக்ட்ரீஷியனை அமர்த்திக்கொள்ள வேண்டும். இவர்களை எங்கே தேடி அலைவது என்று மலைக்கவேண்டாம். ஒரு நம்பிக்கையான மேஸ்திரி அல்லது கார்பென்டர் கிடைத்துவிட்டால் அவர்கள் மூலமாக நம்பிக்கையான இதர ஆட்களும் நமக்கு கிடைத்து விடுவார்கள்.

வொயரிங் வேலைகளை பொறுத்தமட்டில், தேவைக்கேற்ப இப்போதே ப்ளக் பாய்ன்ட்கள் வைத்துக்கொள்வது நல்லது. வீட்டு வேலைகள் முடிந்து குடிவந்தபிறகு இங்கே ஒரு ப்ளக் பாய்ன்ட் வைத்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கக்கூடாது. எனவே, எந்த அறையில், யாருக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து இதை அமைத்துக்கொள்ள வேண்டும். சமையல் அறையை எடுத்துக் கொண்டால் உங்களைவிடவும் உங்கள் மனைவிக்குத்தான் தேவைகள் தெரியும். அதனால்தான் அனைவரது யோசனையும் வேண்டும். தவிர, எதிர்காலத்தில் ஏ.சி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுபோல சில வசதிகள் கூடலாம். இதற்கேற்பவும் முன்யோசனையோடு வொயரிங் வேலைகள் இருக்கவேண்டும்.

இதில் கவனிக்கவேண்டியது, நமது வீட்டின் மின் உபயோகப்பொருட்களை பொறுத்து வொயர்களின் தரம் இருக்க வேண்டும். மின்விளக்கு மற்றும் மின்விசிறிகளுக்காக மேற்கூரையில் ஏற்கெனவே குழாய் பதித்துவிட்டோம். இப்போது எந்தெந்த இடங்களில் ப்ளக் போர்டுகள் தேவை என்பதை முடிவு செய்து, எலெக்ட்ரீஷியனிடம் குறித்துத் தந்துவிட்டால் சுவரில் கட்டர் வைத்து குழி எடுத்து குழாய் பதித்துவிடுவார். சில எலெக்ட்ரீஷியன்கள் ஜம்பர் வைத்து அடித்து குழி எடுப்பார்கள். இப்படி செய்வதைவிட கட்டர் வைத்து குழி எடுப்பதை நீங்கள் வலியுறுத்தலாம்.

இதேபோல, தண்ணீர் குழாய் தேவைகள் எங்கெங்கு வேண்டும் என்பதையும் முடிவுசெய்ய வேண்டும். சமையல் அறை மற்றும் பாத்ரூம் தவிர, வாஷ்பேஸின், வாஷிங்மெஷின் வைக்கும் இடங்களையும் முடிவு செய்துகொண்டு அதற்கேற்ப தண்ணீர் குழாய் வேலைகள் முடித்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் பிவிசி குழாய்களைப் பயன்படுத்தவேண்டும்.

வொயரிங் தேவைகளுக்கான பிவிசி குழாய் 1 இன்ச் என்கிற அளவில் மின் பொருட்கள் விற்பனை கடைகளில் வாங்கவேண்டும். தண்ணீர் குழாயும் 1 இன்ச் தடிமனில் இருக்கவேண்டும். இதை ப்ளம்பிங் அல்லது ஹார்டுவேர் கடைகளில் வாங்கவேண்டும். இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளதால் தான் தனித்தனியாக வாங்கவேண்டும் என்கிறோம். இந்த வேலைகளை முடித்துக்கொண்டுதான் பூச்சு வேலைகளில் இறங்கவேண்டும்.

பூச்சு வேலைகள் வீட்டின் உட்புறத்திலிருந்து தொடங்கவேண்டும். குறிப்பாக, மேற்கூரை பகுதியிலிருந்து தொடங்கவேண்டும். பூச்சு வேலைகளின் போது சிமென்ட் கலவைகளை வீணாக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. இதற்காக பூச்சுவேலைகள் நடக்கும்போது, கீழே பாலிதீன் அல்லது ப்ளக்ஸ் விரித்துவிட்டால் கீழே உதிருவதைச் சேகரித்து திரும்பவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கூரை பகுதி காங்க்ரீட் என்பதால் வழவழப்பாக இருக்கும். இதில் சிமென்ட் கலவை சரியாக ஒட்டாது. எனவே, மேற்கூரையில் பிசிறுகள் இல்லாமல் சரி செய்து, அம்மி கொத்துவதுபோல கொத்துவேலை செய்துகொண்டு, அதற்குபிறகு சிமென்ட் பூசினால் பிடித்துக்கொள்ளும். அதற்குப்பிறகு மளமளவென அனைத்து இடங்களிலும் பூச்சு வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

பூச்சு வேலைகளுக்கான கலவை ஒரு பங்கு சிமென்டுக்கு 4 பங்கு மணல் என்கிற அளவில் இருக்கலாம். இந்த வேலைகள் குறித்து நாம் விரிவாக பார்ப்பது எதற்காக என்றால், வேலை பார்ப்பவர்களுக்கு நம்மால் சரியாக வழிகாட்டுதல் கொடுக்க முடியும். அவர்களாகவே வேலைகளை செய்துவிடுவார்கள் என்றாலும், எல்லா விஷயங்களிலும் நமது தலையீடு இருப்பது வேலைகளை வேகமாக முடிக்க உதவும்.

அடுத்த வாரம் வெளிப்பூச்சு வேலைகள், பட்டிபார்ப்பது போன்ற விஷயங்களைப் பேசுவோம்.

(கனவை நனவாக்குவோம்) படம்: வீ.சிவக்குமார்

அதிகரித்த அரசு முதலீடு!

அண்மையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு (சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எக்கனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் தனியார் துறை நிறுவனங்களைவிட அரசு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜூன் 2012-ல் தனியார் துறை முதலீடு 1,52,400 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், அரசுத் துறை முதலீடு 86,700 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, டிசம்பர் 2013-ல் தனியார் துறை நிறுவனங்களின் முதலீடு 19,100 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், அரசுத் துறை சார்ந்த முதலீடு 1,26,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.