மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி: செம்கோவின் தந்திரங்கள்!

பிசினஸ் தந்திரங்கள்! கம்பெனிகள் ஜெயித்த கதை 31

ஸ்ட்ராடஜி: செம்கோவின் தந்திரங்கள்!
##~##

அவரவர் பொறுப்பை உணர்ந்து வேலை செய்தால், மேற்பார்வை செய்வதற்கு ஆட்கள் அவசியமில்லை என்பது செம்லரின் கொள்கை.

டந்த வாரங்களில் சில முன்னணி நிறுவனங்களின் தொழில் தந்திரங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் பிரேசிலைச் சேர்ந்த செம்கோ நிறுவனம் கையாண்ட தொழில் தந்திரங்களைப் பார்ப்போம். இந்த நிறுவனம் கையாண்ட தந்திரங்கள் மிகவும் ரிஸ்க்கானவை. ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் என்னவோ பல மடங்கு பாசிட்டிவ்.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த நிறுவனம் கடைப்பிடித்த தந்திரங்களை அப்படியே வேறு நிறுவனங்கள் காப்பி அடித்து பயன்படுத்த முடியாது. ஒரு வளரும் நிறுவனம் பயன்படுத்தத் தயங்கும் பல கடின முடிவுகளை எடுத்தது செம்கோ. எல்லாமே அதிரடி முடிவுகள். பரிசோதனை முறையிலும், புதிய முயற்சியாகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால் இந்த நிறுவனம் பல மடங்கு வெற்றி கண்டது. இதைச் சாத்தியப்படுத்தியவர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ரிக்கார்டோ செம்லர்.

இவர் தனது தந்தையிடமிருந்து விடாப்பிடியாக நிறுவனத்தின் தலைமைப் பதவியைக் கேட்டு வாங்கி, தனது ஐடியாக்களைச் செயல்படுத்தினார். இந்த வெற்றிக்காக அவர் கையாண்ட உத்திகளை 'மேவரிக்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். இந்தப் புத்தகம் பிரேசிலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

ஸ்ட்ராடஜி: செம்கோவின் தந்திரங்கள்!

அப்படி என்ன செய்து அற்புதம் நிகழ்த்திவிட்டார் என்று கேட்கிறீர்களா? அதைத்தான் இனி சொல்லப்போகிறேன்.

பிரேசிலைச் சேர்ந்த செம்கோ நிறுவனம் பம்புகள் தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்களைச் செய்கிறது. செம்லரின் அப்பா 1963-ல் செம்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். பிரேசிலின் முக்கியத் தொழில்முனைவராக வளர்ந்து நிறுவனத்துக்கும் ஓர் அடையாளத்தை உருவாக்கினார்.

தொழில் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தாலும், முதலீட்டின் மூலம் மட்டுமே வருமானம் கிடைத்து வந்தது. நிறுவனத்தில் பணியாற்றிய மூத்தப் பணியாளர்கள் பலரும் வெளியிலும் தொழிலை செய்துவந்தனர்.

1980-ல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றார் செம்லர். அப்போது அவருக்கு 21 வயது. அந்த வயதிலேயே தனது தந்தை தொழில் நடத்தும் விதத்திலிருந்து மிகவும் வேறுபட்டு யோசித்தார். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினார். இதை நேரடியாகவே தனது தந்தையிடம் தெரிவித்தார்.

''நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள். மேலும், எனது கையில் பொறுப்பு வந்தபிறகு நான் எடுக்கும் முடிவுகளில் நீங்கள் தலையிடக் கூடாது'' என்று ஒரு கண்டிஷனையும் போட்டார்.

''தலைமைப் பொறுப்பை உனக்கு தராவிட்டால் என்ன செய்வாய்?'' என்று அவர் தந்தைக் கேட்க, ''பொறுப்பைத் தரவில்லை என்றால், நான் வேறு வேலை தேடிக்கொள்கிறேன் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவேன். பிறகு, எனக்கு இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் தேவையில்லை'' என்று ஏறக்குறைய வற்புறுத்திதான் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அவரது தந்தை நீண்ட ஓய்வுக் காலத்தை அனுபவிக்க வெளியூர் செல்லவேண்டிய நிலையில் ஒரு பரிசோதனையாக செம்லரிடம் பொறுப்பு வந்தது. பொறுப்பு வந்த அடுத்த நிமிடமே அதிரடி முடிவுகள் எடுப்பது ஆரம்பமானது.

ஸ்ட்ராடஜி: செம்கோவின் தந்திரங்கள்!

'மேவரிக்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பொறுப்புக்கு வந்த முதல் வாரத்திலேயே நிறுவனத்தின் அனைத்து பதவிகளுக்கான படிநிலை களையும் ரத்து செய்தார். அவரவர் பொறுப்பை உணர்ந்து  வேலை செய்தால் போதும், மேற்பார்வை செய்வதற்கென ஆட்கள் யாரும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பது அவரது கொள்கை. அவர் எடுத்த அடுத்தடுத்த முடிவுகளும் அப்படித்தான்.

ஸ்ட்ராடஜி: செம்கோவின் தந்திரங்கள்!

33 வயதுக்குமேல் தலைமைப் பதவிகளில் எவரும் இருக்கக்கூடாது; உங்களுக்கு என்ன சம்பளம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என இதுவரை யாரும் கேட்டிராத பல புதிய முடிவுகளை அவர் எடுத்தார். அதுமட்டுமில்லாமல், முதல் வாரத்திலேயே 60 சதவிகித அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.  அதேசமயத்தில், புதியவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். இப்படி ஒரேசமயத்தில் பல ரிஸ்க்குகளை எடுத்தார் செம்லர்.

இதுபோன்ற உத்திகள் தொழிலின் வளர்ச்சியில் மிகவும் அபாயகரமான விளைவுகளைத் தரலாம். முதல் இரண்டு வருடங்கள் மிகவும் கடினமாகவே இருந்தது என்று தனது புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்  செம்லர். அடுத்தடுத்த தொழில் உத்தியாக லாபத்திலிருந்து பணியாளர்களுக்குப் பங்கு தருவது, அதுவும் பொத்தாம் பொதுவாக என்றில்லாமல், பணியில் காட்டும் திறமைக்கேற்ப லாபத்தில் பங்கு என்கிறார். தொழிற்சாலையில் மூன்று மாடிகள் இருக்கிறது என்றால், ஒவ்வொரு மாடியிலும் தொழிலாளர்கள் காட்டும் பணித்திறனுக்கேற்ப (ப்ளோர் பர்ஃபாமென்ஸ்) லாபத்தில் பங்கு என்கிற முறையைக் கொண்டுவந்தார். தனக்கு இவ்வளவு வேலை நேரம் வேண்டும், சம்பளம் வேண்டும், சம்பள உயர்வுவேண்டும் என்பதைப் பணியாளரே மதிப்பிட்டுக் கொள்ளலாம். இதை உடன் பணியாற்றும் இதர பணியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (own work hours and pay levels). இதுபோல பல திட்டங்கள் அப்போது தொழில் உலகில் புரட்சிகரமான திட்டங்களாகப் பேசப்பட்டன.

''பணியாளர்கள் சொந்த ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும். ஒரு பணிநிலையிலிருந்து அடுத்தப் பணிநிலை இருக்கலாம். ஆனால், பாஸ் என்பவர் தனது அதிகாரத்தைத் தனக்கு கீழே உள்ளவர்களிடத்தில் பயன்படுத்த முடியாது. பணியாளர்கள் தங்களது வேலைகளை தாங்களே நிர்வகித்துக்கொள்ள வேண்டும் (self-governing and self-managing).  அதிகாரத்தையும், தகவல்களையும் பணியாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதுபோல, சொந்த யோசனைகளோடு செயல்படுவதற்கு சுதந்திரம், சுயமுயற்சியோடு செயல்படுவது, ஒருவருக்கொருவர் போட்டி போடுவது என பல புதிய முயற்சிகளை செம்லர் ஊக்குவித்தார்.

ஒரு தொழில் நிறுவனம் இப்படிப்பட்ட மாற்றங்களை ஊக்குவிப்பது ஆபத்தானது என்பதுதான் அதுவரையிலான கருத்து. ஆனால், செம்கோவில் அது வேறு மாதிரி இருந்தது. இதில், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ஜப்பானிய சிந்தனைப் போக்குதான். அதாவது, ஜப்பானில் ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் ஓய்வுக்காலம் வரை அந்த நிறுவனத்திலேயே பணியாற்றுவார். இடையில் வேறு நிறுவனத்துக்கு மாறுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. செம்லரின் இந்த உத்திகளால் செம்கோவில் ஜப்பானிய சிந்தனைப் போக்கும் வந்தது.

'தொழிலாளர்களைச் சுதந்திரமாகப் பணியாற்றவிடுவது, உண்மையாக இருக்க ஊக்குவிப்பது, மகிழ்ச்சியாகப் பணியாற்ற வைப்பது, மேலும், ஒவ்வொரு யோசனையும் உயர்வுக்கான வழி என்று நம்பினேன்’ என்று தன் அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் செம்லர்.

அவர் கொண்டுவந்த புதிய விதிமுறைகள்படி அவரும் நடந்தார். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் 33 வயதுக்குமேல் இருக்கக்கூடாது என அவர் சொன்னதை அவரே கடைப்பிடித்தார் என்பது ஆச்சர்யமான தகவல். அவர் பணியிலிருந்த 13 வருடங்களில், ''நான் நினைத்ததில் என்னால் 30 சதவிகித மாற்றங்களை மட்டுமே கொண்டுவர முடிந்தது'' என்று பிற்பாடு சொன்னார். அவரது உத்திகள் அதிரடியாக இருந்தாலும் நிறுவனத்துக்கு நல்ல ரிசல்ட்களைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள் மூன்று மடங்கு அதிகரித்தனர். நிறுவனத்தின் வளர்ச்சி ஆறு மடங்கு அதிகரித்தது; லாபம் 7 மடங்கு அதிகரித்தது.

செம்லரின் இந்த ஸ்ட்ராடஜிகளால் பிரேசிலின் முக்கிய இடத்தைப் பிடித்தது செம்கோ நிறுவனம். பிரேசிலின் நம்பிக்கையான தலைவர் என்று பெயர் பெற்றார். மேலும், பிரேசிலில் 25 சதவிகித ஆண்களும், 13 சதவிகித பெண்களும் செம்கோ நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளதாகவும் பத்திரிகை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

செம்கோவிடம் கற்றுக்கொள்ள நிறைய உத்திகள் உள்ளன. பல மேலாண்மைக் கல்லூரிகளில் செம்கோவின் உத்திகள் பாடமாகவே உள்ளன. செம்லர் தனது அனுபவத்தைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டபோது முதல் பதிப்பிலேயே 4 லட்சம் பிரதிகள் விற்பனையானது.

புத்தம் புதிதாக யோசித்து செயல்பட விரும்பும் பிசினஸ்மேன்கள் செம்லரின் புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்!

(வியூகம் வகுப்போம்)