வண்ணம் பூசும் முன்... 20நீரை.மகேந்திரன்

##~## |
பட்டிப் பூசுவதன் மூலம் வீட்டின் சுவர்களை வழவழப்பாகவும், மிருதுவாகவும் உணரலாம். மேலும், வீட்டின் பொலிவைக் கூட்டுவதற்கும் பட்டிப் பூச்சு உதவி செய்கிறது.
வீட்டின் உட்புற வேலைகள் நடக்கும் இந்த நேரத்திலேயே உள்அலங்காரப் பொருத்து வகைகள், மின்பொருட்கள் மற்றும் பெயின்ட் வகைகளைப் பார்த்து வந்துவிடுவது நல்லது. இந்தப் பொருட்களைப் பொறுத்தவரை, நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப இப்போதே வாங்கிவைத்துக்கொள்ளலாம். மேலும், டைல்ஸ் வகைகளையும் பார்த்து நமக்குப் பிடித்தமான வகைகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கும்முன், கட்டட வேலைகளில் மிச்சமிருக்கும் வேலைகளை முடித்துக் கொள்வோம்.
உட்பூச்சு வேலைகள் நடந்து முடிந்ததும், அதைப்போலவே மளமளவென வெளிபக்கச் சுவர்களிலும் பூச்சுவேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும். நான்கு பக்கங்களிலும் பூச்சு முடிந்ததும் பெயின்ட் வேலையைத் தொடங்க வேண்டும்.
இதற்குமுன் பட்டிப் பார்ப்பது என்கிற வெள்ளை சிமென்ட் பூச்சு வேலைகளும் இருக்கிறது. பட்டிப்பூசுவது வீட்டுக்குக் கூடுதல் பொலிவைத் தரக்கூடியது. அதனால் செலவு பார்க்காமல் இந்த வேலையையும் செய்துகொள்ளவும்.

சிமென்ட் பூச்சுவேலைகள் முடிந்தபிறகு, பட்டிப்பார்க்கும் வேலை களைத் தொடங்கிக்கொள்ளலாம். பட்டிப் பூசுவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பலன் என்னவென்றால், சிமென்ட் பூச்சு வேலைகளில் காணப்படும் மேடுபள்ளங்கள், சொள்ளைகள் அடைக்கப்பட்டுச் சரியாகும். மேலும், சுவர்கள் வழவழப்பாகவும், சுவர்களில் பூசப்படும் பெயின்ட் வண்ணத்தை அப்படியே நிறம் மங்காமல் வைத்திருக்கும்.
இதற்கு அதிகச் செலவாகுமே என்று யோசிக்க வேண்டாம். பட்டிமாவு 40 கிலோ கொண்ட மூட்டை தோராயமாக 1,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 5 மூட்டைவரை ஆகும் அவ்வளவுதான். இதைத் தண்ணீரில் பேஸ்ட் பதத்துக்குக் குழைத்து, சுவர்களில் பூசவேண்டும். இதனுடன் வேறு எந்தப் பொருட்களும் கலக்கத் தேவையில்லை.
பட்டிப் பூசுவதன் மூலம் வீட்டின் சுவர்களை வழவழப்பாகவும், மிருதுவாகவும் உணரலாம். மேலும், வீட்டின் பொலிவைக் கூட்டுவதற்கும் பட்டிப் பூச்சு உதவி செய்கிறது. வெளிப்பக்கச் சுவர்களில் பட்டிப்பூசுவது அவசியமில்லை என்றாலும், அது பெரிய செலவு கிடையாது என்று யோசிப்பவர்கள் வெளிச்சுவர்களிலும், முதல்முறை பட்டிப் பூசி காய்ந்ததும், அதன்மேல் இன்னொருமுறை பூசிக்கொள்வது கூடுதல் அழகு.
இப்படி இரண்டுமுறை பட்டிப் பூசி, காய்ந்தபிறகு அதில் பெயின்ட் வேலைகள் செய்தால் சிறப்பானதாக இருக்கும். பெயின்ட் அடிப்பதற்குமுன் வெள்ளை எமல்சன் பெயின்ட் ஒரு கோட்டிங் அடித்துக்கொள்வது இன்னும் சிறப்பு. இதன்மூலம் பெயின்ட் செலவைக் குறைக்கலாம். மேலும், நாம் தேர்ந்தெடுத்த வண்ணத்தை அப்படியே இது பிரதிபலிக்கும்.
இப்போதைய நிலையில் வீட்டின் உட்புற அமைப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டடத்தை மேலும் உயிரோட்டமாக மாற்றுவது நமது ரசனை மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தது. இந்தக் கூட்டுக்குள் நீங்கள் செய்யப்போகிற வேலைகளைப் பொறுத்துதான் வீடு என்கிற உணர்வு இருக்கும். அதேசமயத்தில், ஆடம்பரம் இல்லாத அடிப்படையான சில உள்வேலைகள் அவசியமானது. மேலும், நமது பட்ஜெட்டுக்குள் இந்த வேலைகளைச் செய்துமுடிக்கலாம்.

இதுவரையில் செய்த செலவுகள் எல்லாமே ஒரு திட்டத்துக்குள் உட்பட்டு செய்த செலவுகள். செங்கல், சிமென்ட், கம்பி, ஜல்லி எல்லாம் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் வாங்கிவிடலாம். இதில் வெரைட்டிகள் என்று பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், இந்தக் கட்டடத்துக்கு உயிரோட்டம் தருவதற்கென விதவிதமான ரகத்தில் அலங்காரப் பொருத்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இது நமது பொருளாதாரப் பலத்தைப் பொறுத்தது.
ஆனால், அதிகச் செலவு இல்லாமல் முக்கியமான வேலையாகச் சமையல்கட்டு மேடை, படுக்கையறை மற்றும் பிற அறைகளுக்குள் கப்போர்டுகள், பூஜை அறை கப்போர்டுகள், பாத்ரூம் வேலைகள், ஹால் ஷோகேஸ் வேலைகள் ஆகியவற்றை செய்துகொள்ளலாம்.
சமையற்கட்டைப் பொறுத்தவரை, இடத்தை அடைத்துக்கொள்வதுபோல எந்த வேலைகளும் இருக்கக்கூடாது. சமையல்மேடை எந்தப் பகுதியில் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது உங்கள் வீட்டினரின் வசதியைப் பொறுத்தது. சமையல் மேடையை ஒட்டித் தண்ணீர் இணைப்பு இருக்கவேண்டும். இதைத்தான் நாம் முன்கூட்டியே திட்டமிடச் சொல்லியிருந்தோம். மேலும், சமையல் மேடையையட்டியது போலவே சமையலறை பொருட்கள் வைப்பதற்கான கப்போர்டுகள் அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.
சமையற்கட்டு மேடை இரண்டரை அடி உயரம் இருக்க வேண்டும். எத்தனை அடி நீளம் என்பது இடவசதி மற்றும் தேவையைப் பொறுத்தது. சமையல் மேடையின் ஒருபுறம் சிங்க் அமைத்துக்கொள்வதற்கேற்ப தண்ணீர் குழாய் இணைப்பு இருக்கவேண்டும். சிங்க் அமைப்பதற்கான இடைவெளி 2ஜ்2 அடி அல்லது 2ஜ்1.5 அடி விட்டுக் கொள்ளலாம். சமையல் மேடை இரண்டரை அடி உயரம் என்பதுதான் பொருத்தமானது. அதற்கு அதிகமான உயரத்தில் அமைத்தால் சமையல் வேலை செய்வதில் சிரமம் இருக்கும். குறைவாக அமைத்தால் குனிந்துகொண்டு வேலை செய்வதுபோல இருக்கும். மேலும், இந்த இடைவெளி இருந்தால் சமையல் சிலிண்டர் வைத்துக்கொள்வதற்கும் வசதியாக இருக்கும். ஒருவேளை மாடுலர் கிச்சன் வசதி செய்துகொள்ள விருப்பம் என்றாலும், இந்த இரண்டரை அடி உயரம்தான் பொருத்தமானது.
கப்போர்டுகளைப் பொறுத்தவரை, முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். இதற்குக் கடப்பா கல் பொருத்தமானதுதான் என்றாலும், நாமே சரியான அளவில் சிமென்ட் சிலாப்புகளைச் செய்துகொண்டால் செலவைக் குறைக்க முடியும். இந்த வேலைகள் தொடங்கும்முன், ஜல்லி, சிமென்ட் கலவைகளைக் கொண்டு 6 எம்எம் கம்பிகளைக் குறுக்கும் நெடுக்குமாகத் தந்து சிமென்ட் சிலாப்புகளைச் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கப்போர்டு தேவையான இடங்களில், சுவர்களில் சிறிய அளவில் துளையெடுத்து இந்த சிலாப்புகளைப் பொருத்தி, இருபுறமும் செங்கல் வைத்து தாங்கு கொடுத்து பூசிவிட்டால் வேலைகள் முடிந்தது. இதே டைப்பில் பூஜை அறை, சமையல் அறை, ஹால் எனத் தேவையான இடங்களில் கப்போர்டுகள், சிலாப்புகள்அமைத்துக் கொள்ளலாம். இப்படி சிலாப்புகள் அமைத்துக்கொள்வதில் சிரமம் என்றால், கடப்பா கல் வாங்கி வேலையை முடித்துக்கொள்ளலாம்.
நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல, வீட்டுக்குள் பொருத்துகள் என்னென்ன வகைகளில் உள்ளது, என்ன வகையில் பெயின்ட் அடிப்பது, டைல்ஸ் வகைகள் இதுகுறித்து அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
(கனவை நனவாக்குவோம்)
படம்: வீ.சிவக்குமார்