மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

கம்பெனிகள் ஜெயித்த கதை

##~##

பெனிட்டோன் பிரபலமான ப்ராண்டாக மாறியதன் காரணம், அவுட்சோர்ஸிங் முறையை துணிந்து செயல்படுத்தியதுதான்.

ஸ்ரீராம் செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

இத்தாலியைச் சேர்ந்த பெனிட்டோன் நிறுவனம் வளர்ந்தக் கதை சுவாரஸ்யமானது. புதுப்புது டிசைன்களுக்காக மக்கள் விரும்பும் ஆடைகளில் தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். ஆனால், சுவாரஸ்யம் என்ன தெரியுமா? இந்த நிறுவனத்துக்கென்று சொந்தமாக உற்பத்தி ஆலைகளோ, விற்பனை நிலையங்களோ கிடையாது. இந்த செக்மென்டில் உலகின் முன்னணி நிறுவனம் பெனிட்டோன். இதற்காக வெளியில் கிடைப்பவற்றை வாங்கி பெனிட்டோன் எனப் பெயர் மாற்றி விற்பார்களோ என்று யோசிக்க வேண்டாம். இங்குதான் அந்த நிறுவனம் கடைப்பிடித்த தொழில் தந்திரங்களின் வெற்றி உள்ளது.

பெனிட்டோன் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அந்த நிறுவனம் கடைப்பிடித்த தந்திரங்களைப் பற்றியோ பார்ப்பதற்குமுன் நமது பழங்காலத்துக் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டால், பெனிட்டோனின் தந்திரங்களைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். நம் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். இதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும் என்பதைவிட மொத்தமாகக் குடும்பத்துக்கு என்ன பலன் கிடைக்கும் என்றுதான் யோசிப்போம். குடும்பத்தில் ஒருவர் செய்கிற வேலையை இன்னதுதான் என்று அடையாளப்படுத்த முடியாது. அது பிறர் உழைப்போடு சேரும்போதுதான் தனியரு பொருளாக மாறும்.

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

உதாரணமாக, ஒரு நெசவுக் குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவர் நூல் நூற்றுத் தருவார். இன்னொருவர், அதைத் துணியாக நெய்வார். அந்தத் துணியில் அலங்கார வேலைகளைச் செய்வார் மூன்றாவது நபர். இதை அளவெடுத்து தைத்த மாதிரி ஓர் உடுப்பாக மாற்றுவார் நான்காம் நபர். ஐந்தாவது நபர், அதைச் சந்தைக்குக் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்றுவருவார். ஆக, ஓர் உடை உருவாவதிலிருந்து விற்பது வரை ஐந்து நபர்களின் உழைப்பு இருக்கிறது. இந்த உழைப்பில் யாருக்கும் தனிப் பலன் எதுவும் இல்லை. மூலப்பொருளை வாங்குவது முதல் உடையாக மாறியபின் விற்பது வரை கூட்டு உழைப்பாகவே இருக்கும். அந்தந்த வேலையில் அவரவர் திறமையானவர்களாக இருப்பார்கள். இதில் யாரும் நான் உசத்தி, நீ மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அத்தனைபேர் செய்யும் வேலையுமே முக்கியம்தான்.

இதுதான் கூட்டுக் குடும்பங்களில் நாம் காணும் உழைப்பு. இப்படியான கூட்டு உழைப்பை விரிவுபடுத்தித் தொழில்முறையாக மாற்றி அமைத்தால்..? இந்த யோசனையை அப்படியே தன்னுடைய தொழிலில் கொண்டுவந்தது பெனிட்டோன்.

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

இத்தாலியைச் சேர்ந்த பெனிட்டோன் சகோதரர்கள் 1965-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் எல்லோரையும்போலவே, இதுவும் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமாகவே இருந்தது.  ஆரம்பத்தில் பெனிட்டோன் அதன் டிசைன்களுக்காகப் பெரிய அளவில் பேசப்பட, அதையே தனது பிரதான ஃபார்முலாவாக ஆக்கிவிட்டது அந்த நிறுவனம். டிசைனை தயார் செய்து கொடுத்து அதற்கேற்ப ஆடைகளை வெளியில் உற்பத்தி செய்து வாங்கினார்கள். அதாவது, ஆடைகளை அவர்கள் தயாரிக்காமல் டிசைன் மட்டும் கொடுத்துவிடுவார்கள். இதைச் செய்துதர பல சிறு உற்பத்தியாளர்களோடு கூட்டு வைத்துக்கொண்டார்கள். அவர்கள் பெனிட்டோனுக்காக மட்டுமே வேலை செய்வார்கள். அதற்கேற்ப அவர்களுக்கு வருமான உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. சில நேரங்களில் தொழிலை தொடங்குவதற்குத் தேவையான நிதியுதவியும் அளிப்பார்கள். ஆனால், நேரடியாக உற்பத்தி ஆலைகளில் பெனிட்டோன் இறங்குவதில்லை.

இதன்மூலம் பெனிட்டோன் அடைந்த பலன் என்ன தெரியுமா? உற்பத்திக்கான ஆலைகளோ, பணியாளர்களோ அது தொடர்பான டென்ஷனோ கிடையாது. தாங்கள் விரும்பும் தரத்துக்கான  மூலப்பொருட்களை வெளி உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வாங்குவதைக் கவனித்த பெனிட்டோன் மூலப்பொருள் கொள்முதலை தனது வேலையாக எடுத்துக்கொண்டது. உற்பத்தியாளர்கள் அந்த மூலப்பொருட்களை வெளியில் வாங்கினால் என்ன விலையோ அதைவிடக் குறைவான விலையில் பெனிட்டோன் அவர்களுக்குக் கொடுத்தது. அதாவது, பலரும் சில்லறையாக வாங்கிக்கொண்டிருந்த மூலப்பொருட்களை பெனிட்டோன் அதன் உற்பத்தியாளர்களிடம் பேரம் பேசி குறைவான விலைக்கு வாங்கியது. மூலப்பொருள் உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ச்சியான ஆர்டர் தருவதன் மூலம் குறைந்த விலைக்குப் பேரம் பேச பெனிட்டோனினால் முடிந்தது.

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

உற்பத்தி செய்த ஆடைகளை விற்பனை செய்வதற்கு சில்லறை விற்பனை நிலையங்கள் இருந்தாலும், எதையும் பெனிட்டோன் நிர்வகிக்கவில்லை. இதையும் வெளிநபர்களுக்கே தந்தது. அதுவும் ஃப்ரான்ஸைசி முறை கிடையாது; லைசென்ஸ் முறையில். வெற்றிகரமான ஒரு ப்ராண்டு, தான் தொழில் தொடங்க முடியாத இடத்தில் தனது சார்பாக ஒரு முகவரை நியமிப்பதுதான் ஃப்ரான்ஸைசி. இந்தமுறையில் நிறுவனத்துக்கும், முகவருக்கும் ஒப்பந்தம் உண்டு. முகவர், லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நிறுவனத்துக்குத் தரவேண்டும். லைசென்ஸ் முறையில் இந்தமாதிரி எந்த ஒப்பந்தங்களும் கிடையாது. என்னிடமிருந்து பொருளை வாங்குகிறீர்களா, விற்பனையில் இத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும், அவ்வளவுதான். லைசென்ஸுக்கு மாறாக நடந்தால் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும். அல்லது விருப்பமில்லை எனில், லைசென்ஸை கேன்சல் செய்து கொள்ளலாம்.

இந்த ஸ்ட்ராடஜியால் பெனிட்டோனுக்குக் கிடைத்த நன்மை சில்லறை விற்பனை முகவர்களை நியமிப்பது, அவர்களை மேலாண்மை செய்வது, லாபத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது என்கிற தொந்தரவுகள் இல்லை. உற்பத்தியையும் விற்பனையையும் அவுட்சோர்ஸ் செய்ததன் மூலம் ப்ராண்டை வளர்த்தெடுக்கும் முயற்சியில் முழுஅக்கறையையும் காட்டியது. இதற்கென உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 85 நிறுவனங்களை பெனிட்டோன் பயன்படுத்திக் கொண்டது.

எந்த வேலையையும் நேரடியாக மேற்கொள்ளாமல், ஒரு பிரபலமான ப்ராண்டாக பெனிட்டோன்  மாறியதன் காரணம், அவுட்சோர்ஸிங் முறை பற்றி எந்தத் தெளிவும் இல்லாத காலகட்டத்தில் பெனிட்டோன் துணிந்து அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியதுதான். பிறகுதான் மற்ற நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கின.

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதற்குமுன்னும், பெனிட்டோன் அந்த வேலையின் தன்மையை அக்குவேறாகத் தெரிந்துகொண்டுதான் முடிவெடுக்கும். இதை 360 டிகிரி கான்செப்ட் என்பார்கள். அதாவது, ஒரு வேலையை நாமே செய்வது நல்லதா? அல்லது அவுட்சோர்ஸிங் தரலாமா? என்று ஆராயும். முக்கியமாக, பண ஆதாயத்தை மட்டுமே கணக்கில் எடுக்காமல், மதிப்பு உருவாக்குதல்  எப்படி இருக்கும் என்பதையும் கட்டாயம் ஆராய்வார்கள். ஒரு வேலையை வெளியில் தருவதன் மூலம் நம்மைவிடச் சிறப்பாக, விரைவாக, தரமாகச் செய்து வாங்கமுடியும் எனில், அதை நாம் செய்யக்கூடாது. வெளியிலேயே தந்துவிட வேண்டும். அதாவது, தனிச்சிறப்பாக இல்லாத துறையில் 10 ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக, தனிச் சிறப்பாக உள்ள துறையில் 100 ரூபாய் மதிப்புகொண்ட நேரத்தைச் செலவிடக்கூடாது. இதன்மூலம் நமது முக்கியத் திறமையிலிருந்து விலகிவிட வாய்ப்புள்ளது. பெனிட்டோன் இதைத்தான் செய்தது.

பிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை!

பெனிட்டோன் என்கிற ப்ராண்டுக்குப் பின்னே, பெயர் தெரியாத பல நிறுவனங்களின் உழைப்பு இருக்கிறது. இதை முறையாகப் பயன்படுத்தி ஒருங்கிணைத்து நிலைநிறுத்திக் கொண்டதுதான் பெனிட்டோனின் வெற்றிக்கு அடிப்படை. அதாவது, பெயர் மட்டும்தான் அவர்களுக்குச் சொந்தம்; மற்றபடி அவர்கள் கடைப்பிடித்ததெல்லாம் சுத்தமான தொழில் தந்திரங்கள்தான்.

(வியூகம் வகுப்போம்)

 களைகட்டும் ஜவுளி ஏற்றுமதி!

2014-15-ல் ஜவுளித்துறை ஏற்றுமதியை 60 பில்லியன் டாலராக (ரூ.3.60 லட்சம் கோடியாக) உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஜவுளித்துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் கூறியுள்ளார். இதற்காக நாட்டின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார். நடப்பு நிதியாண்டில் 43 பில்லியன் டாலர் அளவுக்கு (ரூ.2.58 லட்சம்) ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அப்ப, நம்ம திருப்பூரு செழிப்பா இருக்கும்னு சொல்லுங்க!