மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்!

நீரை. மகேந்திரன்

##~##

எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அது நமக்குத் தேவைதானா, அதைவிட குறைந்த விலையில் அதே தரத்துடன் வேறு ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்.

நம் கனவு இல்லம் ஒரு வடிவமைப்புக்கு வந்துவிட்டது. வாசல் மற்றும் உட்புற அறைகளின் நிலைகள், ஜன்னல், வொயரிங் குழாய், கழிவுநீர், குடிநீர் இணைப்புக் குழாய்கள், அறையின் கப்போர்டுகள், சமையலறை மேடை என முதற்கட்ட உள்வேலைகளை முடித்துவிட்டோம். இனி, அடுத்த முக்கியமான வேலை வண்ணம் பூசுவது.

இந்த வேலையைத் தொடங்கும் முன்பு, வெளிப் புறத்துக்கு எந்த வண்ணம், எந்தெந்த அறைக்கு எந்த வண்ணம் என்பதையெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். வண்ணம் பூசுவதற்கு  எத்தனை சதுர அடிக்கு எத்தனை லிட்டர் பெயின்ட் தேவை என்பதையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். தேவைக்குக் குறைவாக வாங்கியிருந்தால், மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக வாங்கிவிட்டால், வீணாகவே செய்யும்.

சொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்!

பெயின்ட்களை வாங்குவதற்கு முன்பு ஒன்றிரண்டு இடங்களில் விலையை விசாரித்துக்கொள்வதும் நல்லது. ஒரே தரத்திலான பொருள் அல்லது தேவையிலான பொருளாக இருந்தாலும் அதில் பலவகை வண்ணங்கள், வித்தியாசங்கள் என வெவ்வேறு அனுபவம் கிடைக்கும். இதற்கேற்ப விலையிலும் வேறுபாடு இருக்கலாம் அல்லது ஒரே பொருளுக்கு இரண்டு இடங்களில் இரண்டு விதமான விலை நிலவரமும் இருக்கும். இதனால்தான் ஒன்றுக்கு இரண்டு கடையாக விசாரித்து வாங்குவது நல்லது.

அருகாமையிலுள்ள ஹார்டுவேர்ஸ் கடைகளில் வாங்கினால் போக்குவரத்துச் செலவுகள் குறையலாம். ஆனால், விலை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எனவே, மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கும்போது இவற்றின் விலை கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், நாம் விரும்புவதற்கு ஏற்ற வெரைட்டிகளும் கிடைக்கும். ஆனால், இந்த வாய்ப்பு நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். தூரம் அதிகமாக இருக்கிறபட்சத்தில் போக்குவரத்துச் செலவு எகிறிவிடும் என்பதால் உள்ளூரில் அதிக விலை தந்து வாங்கினாலும் லாபமாகவே இருக்கும்.

சொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்!

வீட்டுக்கான பெயின்ட் வாங்கும் போது பல நுணுக்கமான விஷயங்களைக் கவனிக்கவேண்டும். எந்த நிறத்தில் வீட்டின் வெளிப்புறத்தில் பெயின்ட் அடித்தால் பளிச்செனத் தெரியும், நீண்டநாட்களுக்கு நிறம் மங்காமல் இருக்க எந்த நிறத்தில் பெயின்ட் அடிக்கலாம் என்பதைப் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்தபிறகே இந்த வேலையில் இறங்கவேண்டும். இது பற்றிய ஆலோசனைகளைத் தருவதற்குச் சிறப்பு வல்லுநர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதன்மூலம் நம் கனவு வீட்டுக்கு சரியான தோற்றத்தைத் தர முயற்சிக்கலாம்.

சொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்!

வண்ணம் பூசும் வேலை நடக்கிற அதேசமயத்தில், வேறு சில முக்கியமான வேலைகளும் இருக்கவே செய்கின்றன. வீடுகளில் பதிக்கும் டைல்ஸ் அல்லது மார்பிள், ஜன்னல் கண்ணாடிகள், வாஷ்பேசின், பாத்ரூம் சிங்குகள், மின் சாதனங்கள் மற்றும் வொயரிங் பொருட்கள், வீட்டின் மேற்கூரையில் பதிக்கப்படும் வெளிப்புற ஒட்டு ஓடுகள், நவீனவகைச் சமையலறை என்றால் அதற்கான விவரங்கள், பாத்ரூம் பிவிசி கதவுகள் எனப் பல பொருட்களை இந்தக் கட்டத்தில் நீங்கள் வாங்கவேண்டியிருக்கும். இதுபோல, கதவுகளுக்கான கடைசல் வேலைகள், கதவுகளுக்கான பூட்டு அமைப்புகளில்கூட நாம் கவனம் செலுத்தவேண்டி இருக்கும்.

சொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்!

மேஸ்திரியோ அல்லது நீங்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும் ஹார்டுவேர் கடைக்காரர்களோ இதை வாங்குங்கள், அதை வாங்குங்கள் என உங்களை நிர்ப்பந்திக்கலாம். அது சிலசமயம் சரியான தாகவும் இருக்கலாம் அல்லது செலவை இழுத்துவிடுவதாகவும் இருக்கலாம். எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அது நமக்குத் தேவைதானா, அதைவிட குறைந்த விலையில் அதே தரத்துடன் வேறு ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். குழப்பமான மனநிலை இல்லாமல், குடும்பத்து உறுப்பினர்களுடன் பேசி தீர்க்கமான முடிவை எடுப்பதன் மூலம் உங்கள் கனவு இல்லத்தை மனம்போல கட்டி முடிக்கலாம். இந்த வேலைகளை எப்படி செய்வது என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(கனவை நனவாக்குவோம்)
படங்கள்: வீ.சிவக்குமார்