பளபளக்கும் டைல்ஸ்! நீரை. மகேந்திரன்
கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...
##~## |
கனவு வீட்டைக் கட்டுவதில் இறுதிநிலையில் இருக்கிறோம். இந்த வாரம் டைல்ஸ் பதிப்பது தொடர்பான விஷயங்களைப் பார்ப்போம். டைல்ஸைப் பொறுத்தவரை ஏதோ ஒன்று வாங்கினோம் என்று இல்லாமல், நம் வீட்டுக்கு எந்தவகை டைல்ஸ் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது.
சில டைல்ஸ்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும், வேலைகள் முடிந்தபிறகு பிடிக்காமல் போய்விடலாம். சில டைல்ஸ்கள் வழுக்கலாக இருப்பதைக் கவனிக்காமலே நாம் விட்டிருப்போம். இன்னும் சில டைல்ஸ்கள் அதிக அளவில் குளிர்ச்சியாக இருக்கலாம். இந்தப் பிரச்னை எல்லாம் இல்லாமல், எல்லாவகையிலும் நமக்குச் சரிப்பட்டு வருகிற டைல்ஸ்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
டைல்ஸ் வகைகளைப் பொறுத்தவரை, டெரகோட்டா மிக்ஸ்டு டைல்ஸ், ரெட் ஆசிட் மிக்ஸ்டு டைல்ஸ், மொசைக் டைல்ஸ், வொயிட் சிமென்ட் மிக்ஸ்டு டைல்ஸ் எனப் பல வெரைட்டிகள் இருக்கின்றன. வெள்ளை சிமென்ட் மிக்ஸ்டு டைல்ஸில் காரைக்குடி டைல்ஸ் என்கிற வகையும் உள்ளது. இந்தவகை டைல்ஸ்கள் டிசைனர் டைல்ஸ்-ஆக இருக்கும். தவிர, வெட்ரிஃபைடு டைல்ஸ் என்கிற வகையும் உள்ளது. இது பார்ப்பதற்கு மார்பிள்போலத் தோற்றம் தரும்.
டைல்ஸ் வேண்டாம்; மார்பிளே பதித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அந்த முடிவைக்கூட எடுக்கலாம். டைல்ஸுக்கும் மார்பிளுக்கும் விலையில் பெரிய வித்தியாசம் கிடையாது. சதுர அடி 45 ரூபாய் முதல் டைல்ஸ் கிடைக்கிறது. மார்பிள் சராசரியாக 55 ரூபாய் முதல் கிடைக்கிறது. இன்னும் கூடுதல் தரம் விரும்பினால் அதற்கேற்ப விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

டைல்ஸ் போடுவது என்று முடிவெடுத்துவிட்டால், வீட்டின் தளப்பகுதிகளை உடனடியாகப் பூச வேண்டாம். அதுபோல, பாத்ரூம் தரைப்பகுதியையும் பூசவேண்டாம். பாத்ரூமில் சுவர்களிலும் டைல்ஸ் பதிப்பது நல்லது. பாத்ரூம் சுவர்களில் டைல்ஸ் பதிக்காமல் விட்டால், கறைகள் படிந்து சுவர்கள் பாதிப்படையலாம்.
புதிதாகக் கட்டும் வீடுகளில் டைஸ்ஸ் பதித்துவிட்டால் பராமரிப்பதும் எளிது, சுவர்களிலும் பாசி படியாது. இதற்கேற்ப பாத்ரூமில் ஏழு அடி உயரத்துக்கு டைல்ஸ் பதித்துக்கொள்ள வேண்டும். அதுபோலச் சமையல் அறையிலும் ஏழு அடி உயரத்துக்கு அமைத்துக்கொள்ளலாம். அல்லது சமையல் மேடையிலிருந்து இரண்டு அடி உயரத்துக்காவது டைல்ஸ் பதித்துக்கொள்ளலாம். சமையல் மேடை இரண்டறை அடி உயரம் இருக்கும். அதாவது, சுமார் ஐந்து அல்லது ஆறு அடி உயரமாவது டைல்ஸ் பதித்துக்கொள்வது நல்லது.
ஹால், உள்அறைகள், பாத்ரூம், சமையற்கட்டு என ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவிதமாக டைல்ஸ் வகைகள் உள்ளன. ஏனென்றால், இதில் அளவுகள், டிசைன்கள், வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஒரே வெரைட்டி அல்லது வண்ணம் எல்லா அறைகளுக்கும் பயன்படுத்துவது சிறப்பானதல்ல. இரண்டு, மூன்று வண்ணங்களில் வாங்கிக்கொள்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சாதாரணமாக ஓர் அடிக்கு ஓர் அடி என்கிற அளவு முதல் இரண்டுக்கு இரண்டு, நான்கு அடிக்கு நான்கு அடி என்கிற அளவில்கூட டைல்ஸ்கள் வந்துவிட்டன. பொதுவாக, ஓர் அடிக்கு ஓர் அடி என்கிற அளவில் உள்ள டைல்ஸ்களை நாம் வாங்கலாம். பாத்ரூம் மற்றும் சமையல் அறைக்கு அதற்கென்றே உள்ள டைல்ஸ்களை வாங்கலாம். டைல்ஸ்களின் தடிமனைப் பொறுத்தவரை 4 எம்எம், முதல் 5 எம்எம் இருக்க வேண்டும். இதற்கு குறைவான தடிமன் கொண்ட டைல்ஸ்களை வாங்க வேண்டாம். பயன்படுத்துவதில் சேதாரம் மற்றும் நீண்ட காலம் உழைக்காது.

எல்லாவற்றையும் முடிவு செய்தபின்னர், நமக்கு எவ்வளவு டைல்ஸ் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். டைல்ஸ் ஒட்டவேண்டிய இடங்களின் நீள அகலத்தைப் பொறுத்து, அந்த இடத்துக்கு எவ்வளவு டைல்ஸ்கள் வேண்டும் என்பதைக் கணிக்க முடியும். டிசைனர் டைல்ஸ் வாங்குகிறோம் என்றால் அளவுகள் அப்படியே பொருந்திவிட்டால் சிக்கல் இல்லை. இல்லையெனில், சேதாரம் அதிகமாக இருக்கும்.
டைல்ஸ்களைத் தரையில் பதிக்கும்போது, இணைப்புகள் தெரிவதுபோல உள்ளது ஒருவகை; இணைப்புகள் தெரியாத வகையில் இருப்பது இன்னொரு வகை என இரண்டு விதமான வகைகளும் இதில் உள்ளன. இணைப்புகள் தெரியாததுபோல உள்ள டைல்ஸ்களை வாங்கவும்.
டைல்ஸ்களின் ஆயுட்காலம் குறித்து அதிகபட்ச உத்தரவாதம் இருந்தாலும் 10 ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். டைல்ஸ்கள் வாங்குகிற போதே ஒரு டஜன் அதிகமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், அந்த வெரைட்டியும் டிசைனும் பின்னாட்களில் கிடைக்காமல் போகலாம். சேதம் அடைந்துவிட்டது என்றால், கூடுதலாக வாங்கி வைத்திருப்பதைவைத்து சமாளிக்க முடியும்.
பாத்ரூம் டைல்ஸ்களைப் பொறுத்தவரை, தரை வழுக்காமல் இருக்கும் ஆன்டிஸ்கிட் டைல்ஸ்களைப் பொருத்துவது நல்லது. வயதானவர்கள் இருக்கும் வீடு என்றால் கண்டிப்பாக இந்தவகை டைல்ஸ்கள் பதிப்பது அவசியம். எந்த வண்ணம் எடுப்பாக இருக்கும் என்கிற குழப்பம் வேண்டாம். பொதுவாக, அடர் வண்ண டைல்ஸ்களைத் தவிர்க்கலாம். வெள்ளை நிறத்தில் இருந்தால் வீடு பளிச் என்று இருக்கும் என்பதும் சரியல்ல. அடர் வண்ணம் இல்லாத எந்த வண்ணங்களையும் தேர்ந்தெடுக்கலாம். லைட் வெள்ளை (ஆஃப் வொயிட்) வண்ணம் என்றால் பொருத்தமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பிராண்டட் பொருளாக வாங்குங்கள். அவர்களிடம் வெரைட்டியும் இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் வாங்கவும் செய்யலாம்!
(கனவை நனவாக்குவோம்)
படங்கள்: வீ.சிவக்குமார்.