மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு : வண்ணம் பூசுவோம்!

கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... நீரை. மகேந்திரன்

##~##

நமது கனவு வீட்டுக்கு என்ன வகையான டைல்ஸ் போடலாம் எனக் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம், பெயின்டிங் அடிப்பது பற்றிப் பார்ப்போம்.

வீட்டுக்குக் கம்பீரமான தோற்றத்தைத் தரக்கூடிய சில விஷயங்களில் பெயின்டிங் முக்கியமானது.

நமது வீட்டின் அமைப்புக்கு எந்த வண்ணம் பொருத்தமானது என்கிற ஆலோசனையைப் பெறுவது முக்கியம். சில முன்னணி பெயின்ட் நிறுவனங்கள் இதற்கெனத் தனியாக ஆலோசகர்களை வைத்துள்ளன. அவர்கள் நமது விருப்பத்துக்குரிய வண்ணங்கள், அதுதொடர்பான விவரங்களைத் தந்துதவுவார்கள். தவிர, வீட்டின் அமைப்பைப் புகைப்படம் எடுத்துத் தந்தால் எந்த வண்ணம் அடித்தால் என்ன லுக் கிடைக்கும் என்பதை கம்ப்யூட்டரில் வரைந்துகாட்டுவார்கள். இதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றாலும், அவர்கள் தயாரித்த பெயின்ட்களை வாங்குவதற்கு வலியுறுத்தலாம். எனவே, தேவையானால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இப்படி இல்லாமல், நம் விருப்பத்துக்கு ஏற்பவும் நம் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் வண்ணம் அடிக்கலாம். ஆனால், தரமான நிறுவன பெயின்ட்களை வாங்கி அடிப்பது அவசியம். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த பெயின்டை வாங்கவேண்டாம். ஏனெனில், நாம் பூசும் பெயின்ட் குறைந்தது மூன்று வருடங்களுக்கு அதேபொலிவோடு இருக்கவேண்டும்.

பெயின்ட்களைப் பொறுத்தவரை, உள்பக்க, வெளிபக்க பெயின்ட்கள் என இருவகை உள்ளது. உள்பக்கச் சுவர்களுக்கு அடர் வண்ணங்கள் பொருத்தமானதாக இருக்காது. அடர் வண்ணம் இல்லாத பெயின்ட்தான் எல்லா நேரங்களிலும் பளிச்சென்று வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும்.

சொந்த வீடு : வண்ணம்  பூசுவோம்!

நாம் ஏற்கெனவே பட்டிப் பார்த்து ஒரு கோட்டிங் வெள்ளை எமர்ஸன் பெயின்ட் அடித்துள்ளோம். இப்படி ஒரு கோட்டிங் வெள்ளை எமர்ஸன் அடித்தபிறகு நமக்குத் தேவையான வண்ணம் பூசினால் நீண்ட காலத்துக்குத் தாங்கி நிற்கும்.

சொந்த வீடு : வண்ணம்  பூசுவோம்!

உள்பக்கச் சுவருக்கு எமர்ஸன் பெயின்ட் போதுமானது. எமர்ஸன் பெயின்ட் விலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல், மீடியமாக இருக்கும். கொஞ்சம் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை எனில், ஆயில் மிக்ஸ்டு பெயின்ட்களைப் பயன்படுத்தலாம். வெளிப்பக்கச் சுவர்களுக்கு என்றே தனியாக வண்ணங்கள் உள்ளது. சிலர் இதில் அடர் வண்ணங்களை விரும்பலாம். ஆனால், வெளிப்பக்கம் அடர் வண்ணங்களைத் தவிர்க்கலாம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது.

உள்பக்கச் சுவர்களுக்கு வெள்ளை எமர்ஸன் பெயின்டுக்குப் பிறகு நாம் விரும்பிய வண்ணத்தை இரண்டு கோட்டிங் அடிக்கலாம். ஆனால், இப்போதே இரண்டு கோட்டிங்கும் பூச வேண்டாம். முதல் கோட்டிங் அடித்து வைத்துக்கொண்டு, வீடு கிரஹப்பிரவேசம் முடிந்தபிறகு இரண்டாவது கோட்டிங் அடிக்கலாம். ஏனெனில், கிரஹப்பிரவேசத்தின்போது சுவர்கள் மீது அழுக்கு, கறைகள் படியலாம்.

சுவர்களுக்கு பெயின்ட் பூசியபிறகு கதவுகள், ஜன்னல்களைப் பொருத்திவிடலாம். நிலைகள் அளவுக்கேற்ப கதவுகள் ஏற்கெனவே வாங்கி இருப்போம். நாம் முன்பே குறிப்பிட்டிருந்ததைப்போல, கதவில் என்ன வகையான பூட்டு வைக்கப்போகிறோம் என்பது முதற்கொண்டு நமது கவனம் இருக்க வேண்டும். இதேபோல, ஜன்னல்கள் பொருத்துவதையும் முடித்துக் கொள்ளலாம். பாத்ரூம் கதவுகளைப் பொறுத்தவரை, ரெடிமேடு பிவிசி கதவுகள் கிடைக்கிறது. அதை வாங்கிவந்து அப்படியே பொருத்திவிட வேண்டியதுதான். வீட்டுக்குள் இதர நிலைகளை அமைத்திருந்தால் அங்குக் கதவுகள் வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த வேலைகள் முடிந்ததும் அவற்றுக்கு எனாமல் பெயின்ட் அடிக்க வேண்டும். எனாமல் பெயின்ட் அடிப்பதன் மூலம் கதவு நிலைகளில், ஜன்னல் கிரில்களில் பளபளப்பு கிடைக்கும். உப்புக்காற்று, ஈரம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். எனாமல் பெயின்ட் அடித்தபிறகு அதன் மீது ஒரு கோட்டிங் வார்னிஷ் அடித்தால் கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

சொந்த வீடு : வண்ணம்  பூசுவோம்!

(கனவை நனவாக்குவோம்)

படம்: வீ.சிவக்குமார்