லாபத்தில் பறக்கும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ்! ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
ஸ்ட்ராடஜி 37
கம்பெனிகள் ஜெயித்த கதை
##~## |
சரிந்துகொண்டிருக்கும் சந்தையிலும் நிலைத்து நிற்கும் நிறுவனம்தான் எப்போதும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெறும். அதற்கேற்பதான் தொழில் தந்திரங்களை ஒவ்வொரு நிறுவனமும் அமைத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் ஐரோப்பிய சந்தையில் நிலைத்துநின்ற ஜராவைக் குறித்து சென்ற வாரம் பார்த்தோம். இதேபோன்று தனது தொழில் உத்திகள் மூலம் வெற்றிகண்டு வரும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்த வாரம் பார்ப்போம்.
பொதுவாக, விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் எப்போதும் நஷ்டத்திலேயேதான் இயங்கி வருகின்றன. சந்தையில் நூறு நிறுவனங்கள் இருக்கிறது என்றால், அதில் இரண்டு நிறுவனங்கள்தான் லாபத்தைப் பார்க்கிறது.
தவிர, விமானச் சேவையை வழங்க புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வத்தோடு வந்தாலும் அவை லாபகரமான நிறுவனமாக மாறுவது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. எப்போதும் சரிவிலேயே இருக்கும் சந்தை இது.
ஆனால், சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டும் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபகரமாகவே இயங்கி வருகிறது. இந்தத் துறையில் பலரும் சரிந்து கொண்டிருக்க, இந்த நிறுவனம் மட்டும் லாபகரமாக இயங்குவது எப்படி? சவுத் வெஸ்ட் நிறுவனம் கடைப்பிடித்த பிசினஸ் உத்திகள்தான் என்ன என்கிற கேள்விகள் முக்கியமானவை.
விமானச் சேவையைப் பொறுத்தவரை, விமானங்கள் வானில் எத்தனை மணி நேரம் பறக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவற்றின் வருமானம் இருக்கிறது. அந்தவகையில், இதர நிறுவனங்களைவிட சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் ஏழு மணிநேரம் அதிகமாக வானில் பறக்கின்றன. இதுதான் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது. தவிர, சவுஸ் வெஸ்ட் ஏர்லைன்ஸ் கடைப்பிடிக்கும் உத்திகள் அதன் செலவினங்களையும் கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது. இதற்காக இந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் உத்திகளைப் பார்க்கலாம்.

ஒரேமாதிரியான விமானங்கள்!
சவுத் வெஸ்ட் நிறுவனம் தன்னிடம் ஒரே வகையான விமானங்களை மட்டுமே வைத்துள்ளது. அதாவது, போயிங் 737 வகையிலான விமானங்களைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால், இதர நிறுவனங்கள் பயணத் திட்டங்களுக்கு ஏற்ப பல்வேறு வகை விமானங்களைப் பராமரித்து வருகின்றன. இப்படி ஒரே வகையிலான விமானங்களை வைத்திருப்பதன் மூலம் பல்வேறு வகையிலான விமானங்களைப் பராமரிக்கவேண்டிய தேவை இருக்காது. ஒவ்வொரு விமானத்துக்கும் ஒவ்வொரு பராமரிப்புத் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் இதற்கான செலவுகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. தவிர, ஒரே ரக விமானமாக இருக்கிறபோது பணியாளர்கள் எண்ணிக்கைகளைக் கூட்டவோ, குறைக்கவோ தனித் திட்டங்கள் தேவையில்லை.
முக்கியமாக, விமானிகளின் தேவை ஒரேமாதிரியாக இருக்கும். ஒரு விமானி அனைத்து ரக விமானங்களையும் இயக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு. குறிப்பிட்ட ரக விமானத்தை இயக்குவதில் மட்டும் தேர்ந்தவராக இருக்கலாம். இந்தநிலையில் பல்வேறு வகையிலான விமானங்களைப் பராமரிக்கும்போது அதற்கேற்ப விமானிகளைப் பணிக்கு அமர்த்த வேண்டும். ஆனால், சவுத் வெஸ்ட் பயன்படுத்தும் ஒரே வகையிலான விமானச் சேவையில் இப்படியான சிக்கல் கிடையாது. விமானிகள் அனைவருக்கும் ஒரே திறமை இருந்தால் போதும். தவிர, ஒரு விமானி வேலைக்கு வரமுடியாத அவசர சூழ்நிலைகளில் இன்னொரு விமானியை உடனடியாக வேலைக்கு அழைத்துக்கொள்ள முடியும். குறிப்பிட்ட விமானிக்காகக் காத்திருக்கவேண்டிய தேவையில்லை. இதர நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு.
இந்தவகை உத்திகளின் மூலம் இன்னொரு வசதியையும் இந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்கிறது. குறிப்பாக, உதிரிபாகங்கள் பயன்பாடு. பல்வேறு ரக விமானங்களுக்காகப் பல்வேறு வகையில் உதிரிபாகத் தேவைகள் இருக்கும். ஒரே ரக விமானமாக இருக்கும்போது, ஒரு விமானத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை இன்னொரு விமானத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பு பிற நிறுவனங்களுக்குக் குறைவு. இந்த ஒரே வகையிலான விமான உத்தி மூலம் தனது செலவினங்களையும் கணிசமாகக் கட்டுப்படுத்தியது சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ்.

பாயின்ட் டு பாயின்ட்!
விமானச் சேவையில் நேரடி விமானச் சேவை, டிரான்ஸிட் (இடைவழி) சேவை என இரண்டு வகைகள் உள்ளன. அதாவது, இடையில் வேறு விமான நிலையங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிஇறக்குவது அல்லது ஒரு விமான நிலையத்தில் பயணிகளை ஒருங்கிணைத்து அங்கிருந்து வேறு விமானங்களில் அவரவர் ஊர்களுக்கு மாற்றி அனுப்புவது என்கிற சேவையை 'டிரான்ஸிட்’ என்பார்கள். இடையில் வேறு எங்கும் நிறுத்தாமல் குறிப்பிட்ட விமான நிலையத்துக்கு மட்டும் விமானத்தை இயக்குவது நேரடி விமானச் சேவை. பல்வேறு விமான நிறுவனங்களும் இந்த இரண்டு வகையிலும் விமானச் சேவையை வழங்குகின்றன.
ஆனால், சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் நேரடி விமானச் சேவையை மட்டுமே இயக்குகிறது. இதனால் பயண நேரங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. பயணிகள் நேரம் சரியாகத் திட்டமிடப்படும்.
ஒரு விமான நிலையத்தைப் பயணிகளின் ஒருங்கிணைக்கும் மையமாக வைக்கும்போது காத்திருப்பு நேரம் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது அல்லது குறிப்பிட்ட ஏதாவது ஒரு விமானச் சேவை ரத்தாகும் என்கிற சூழ்நிலையில் நிறுவனத்துக்கோ அல்லது பயணிகளுக்கோ பல இழப்புகள் ஏற்படும்.
இதை முழு முற்றாகத் தவிர்த்தது சவுத் வெஸ்ட் ஏர்வேஸ். இப்போதும் பாயின்ட் டு பாயின்ட் சேவையில் சவுத் வெஸ்ட்தான் சிறந்தது என்கிற பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
செலவுகள்!

'நோ எக்ஸ்ட்ரா சார்ஜ்’ என்கிற ஒரு உத்தியையும் வைத்துள்ளது சவுத் வெஸ்ட். அதாவது, பயணக் கட்டணம், விமானத்துக்குள் வழங்கப்படும் சேவை, எடுத்துச் செல்லும் சுமைகளுக்கான கட்டணங்கள் எல்லாமே ஒரு திட்டத்துக்குள்தான் இருக்கும். கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதல் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற வசதிகள் கிடையாது. தவிர, வசதியான பிரிவினருக்கு என்று தனிப் பிரிவுகள் வைத்துக்கொள்வதில்லை. ஒரே வகையிலான பயண அனுபவம்தான் அனைவருக்கும். இதர விமான நிறுவனங்கள் பயணிகளின் வசதிக்கேற்ப சேவை வழங்குவதில் வித்தியாசம் வைத்துள்ளன. இந்த அணுகுமுறை மூலம் தொழில் நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குப் பொருத்தமான விமான நிறுவனம் என்கிற பெயரையும் பெற்றுவிட்டது.
தவிர, சவுத் வெஸ்ட் நிறுவனம் அவசரக் காலங்களில் பயன்படுத்தும் உத்தியும் பேசப்படவேண்டிய ஒன்று. நாம் முக்கியமாகப் பார்த்த மேற்கண்ட உத்திகளில் முக்கியமானது என்றுகூட இதைச் சொல்லலாம். அதாவது, சவுத் வெஸ்ட் தவிர்க்க முடியாமல் ஒரு பயணத் திட்டத்தை மாற்ற நேரிடுகிறது எனில், அடுத்த 20 நிமிடங்களில் மாற்றுத் திட்டத்தைப் பயணிகளுக்குக் கொடுத்துவிடும். இதர நிறுவனங்கள் இதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் 90 நிமிடங்கள். இப்படி ஒவ்வொரு அணுகுமுறையிலும் தெளிவான மேலாண்மை கண்ணோட்டத்தை வைத்துள்ளது சவுத் வெஸ்ட் ஏர்வேஸ்.
அதிகரிக்கும் எரிபொருள் செலவு, முழுக் கொள்ளளவு இல்லாமல் பறப்பது, பராமரிப்புச் செலவுகள், விமானிகள் பற்றாக்குறை என ஒரு விமானம் வானில் பறப்பதற்கு ஆகும் அந்தனை சிக்கல்களையும் சமாளித்து லாப கோட்டில் பயணிப்பது என்பது சவாலானதுதான். இதனால்தான் பல விமான நிறுவனங்கள் இப்போதும் நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. ஆனால், இந்த அத்தனை சவால்களையும் சமாளித்து லாபகரமாகப் பறந்துகொண்டிருக்கும் சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து மேலே செல்வதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளலாம்.
(வியூகம் வகுப்போம்)