மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு -சமையலறை மற்றும் உள்அலங்காரம்!

நீரை.மகேந்திரன்

 கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

நமது கனவு இல்லத்தை மெருகுபடுத்த நாம் மெனக்கெட்டுச் செய்யும் பல வேலைகளில் பிரதானமானது உள் அலங்காரம். இதில் சில சின்னச் சின்ன விஷயங்களை கூடுதல் கவனமுடன் செய்துவிட்டால், வீட்டின் மொத்த வடிவமும் நம்மை பிரமிக்கவைக்கும். எனவே, இந்த வாரம் வீட்டுக்குள் செய்யவேண்டிய உள்அலங்கார வேலைகள் மற்றும் சமையல் அறை மேம்படுத்துவது குறித்து பார்ப்போம். அதோடு, வீட்டுக்குள் என்னென்ன ஃபர்னிச்சர்கள் பயன்படுத்தலாம், அவற்றுக்கான இடத்தேவைகளை எப்படி பிளான் பண்ணுவது என்பது போன்ற விஷயங்களையும் பார்ப்போம்.

நாம் ஏற்கெனவே சமையல் அறையின் மேடை அமைப்புகள் மற்றும் கப்போர்டுகள் வரைதான் பார்த்துள்ளோம். இதை அப்படியே பயன்படுத்துவது நமது பட்ஜெட்டை பொறுத்ததுதான் என்றாலும், சமையலறையில் சில வசதிகளை ஏற்படுத்திக்கொண்டால் சமையலறை யின் அமைப்பும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்; கூடுதல் வசதியும் கிடைக்கும்.

சமையலறையின் வசதிகளை மேம்படுத்துவதில் பல நிறுவனங்கள் இதைத் தனியொரு வேலையாகவே செய்து தருகின்றன. 40 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மேம்படுத்தப் பட்ட வசதிகளுடன் சமையலறையைத் தயார் செய்துதருகிறார்கள்.  குறிப்பாக, தீ தடுப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும் இந்தச் சமையலறை யில் வசதிக்கு ஏற்பவோ அல்லது இட அமைப்புக்கு ஏற்பவோ கட்டணம் இருக்கும். விருப்பமிருந்தால் இந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். அல்லது நாமே சில ஆயிரங்களை செலவு செய்தால் சமையலறையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.  

சொந்த வீடு -சமையலறை மற்றும் உள்அலங்காரம்!

நமக்கு மரவேலைகளைச் செய்த ஆட்களைக்கொண்டே, பிளைவுட் மற்றும் மைகா ஷீட்கள் கொண்டு இதையும் செய்துகொள்ளலாம். சமையல் மேடைக்கு கீழே அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொள்வதுபோல கப்போர்டுகள் அமைத்து அதற்கு கதவு வைத்து மூடிவிடலாம். சமையல் மேடைக்கு மேலே இரண்டரை அடி உயரம் இடைவெளிவிட்டு சுவரோடு இணைத்து கப்போர்டுகள் அமைத்து இவற்றையும் கதவு வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.

இந்த வேலைகளைச் செய்யும் போது ஆட்களுடன் நாமும் உடனிருப்பது நல்லது. சுவர்களில் துளையிடும் தேவையிருப்பின் சிறிய துளையிடும் இயந்திரக் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையலறையில் இந்த வேலைகள் செய்துகொள்வதன் மூலம் நமக்குக் கூடுதலான இடம் பயன்பாட்டுக்கு கிடைக்கும். எனவே, மேம்படுத்தப்பட்ட சமையலறை என்பது வசதி, இடம் பயன்பாடு, பார்வை என்கிற மூன்று வகைகளிலும் அடங்கும் என்பதைப் புரிந்துகொண்டால் இதற்குச் செலவு செய்வது ஆடம்பர செலவாக அமையாது.

இதுதவிர, படுக்கை அறை மற்றும் இதர அறைகளில் உள்ள சிலாப்புகளுக்கும் கதவு வைத்து மூடிக்கொள்வதுபோல ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம். பொருட்களைப் பாதுகாக்க மட்டுமல்ல, அறைகளின் அமைப்பையும் சிறப்பாக இது எடுத்துக் கொடுக்கும். மேலும், உள் அறைகளின் கப்போர்டுகளையும் கதவுகொண்டு மூடிவைப்பதுபோல அமைத்துக் கொள்ளலாம். பூஜை அறை தனியாக அமைத்திருந்தால், அங்கும் உங்கள் தேவைக்கு ஏற்ப கப்போர்டுகள் செய்து பொருத்திக்கொள்ளலாம். தனியாக அறை விடவில்லை எனில், சிறிய அளவில் செய்து பொருத்திக் கொள்ளுங்கள். பூஜை அறை செட்டப் ரெடிமேடாகக்கூட கிடைக்கிறது.

சொந்த வீடு -சமையலறை மற்றும் உள்அலங்காரம்!

அறைகளுக்கான விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் தேவைக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளுங்கள். இவற்றிலும் தரமான பொருட்களை வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அவசியமான மின் சாதனங்கள் தவிர, ஒவ்வொரு அறையிலும் ஒரு கொத்து விளக்கு (சிலீணீஸீபீமீறீவீமீக்ஷீ லிவீரீலீt) தொங்குவது போல அமைத்துக்கொள்ளலாம். இது அறைகளை சற்று ஆடம்பரமாகவும், தோற்றத்துக்கு நல்ல பார்வையும் கொண்டுவரும். சாண்டீலியர் விளக்குகள் அத்தியாவசியமில்லை என்றாலும், உள்அலங்காரத்துக்கு என்று சில ஆயிரங்கள் செலவு செய்தால் வீட்டுக்குக் கூடுதல் அழகும் பொலிவும் கிடைக்கும்.  

ஃபர்னிச்சர்கள்!

ஒவ்வொரு அறையிலும் அதற்கு தேவையான பொருத்துகள், பொருட் கள் அவசியமாக இருக்கவேண்டும். குழந்தைகள் உள்ள வீடு என்றால் அவர்கள் பயன்படுத்துவதுபோல கட்டில்கள், உயரம் குறைந்த நாற்காலி கள், இடத்தை அடைத்துக்கொள்ளாத ஃபர்னிச்சர்கள் இருக்கவேண்டும். வயதானவர்கள் வசிக்கும் வீடாக இருந்தால் அவர்களுக்கேற்ப தாராள இடவசதி விடவேண்டும்.

பொதுவாக, அறைகளில் இடப் பயன்பாட்டை பொறுத்தவரை, ஒவ்வொரு அறையும் அதன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். முன்அறைக்கு என்று சோபா அல்லது ஃபர்னிச்சர்கள் வாங்கப்போகிறோம் என்றால் சுமார் 40 சதவிகித இடமாவது காலியாக இருக்கவேண்டும். இதை மனத்தில் வைத்துதான் பொருட்களை வாங்கவேண்டும். அதுபோல ஃபர்னிச்சர்களைப் பொறுத்தவரை, எந்த அறையில் வைக்கப்போகிறோம்? எவ்வளவு இடம் அடைக்கும்? என்பதைத் தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக, கட்டில்கள் வாங்குவதில் இதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வாங்கிவந்தபிறகு மாற்றுவது வீண் அலைச்சலையே தரும்.  

வீடு அலங்காரத்துக்கு என்றே பிரத்யேக விற்பனைக் கடைகளும் உள்ளன. தவிர, வீடு அலங்கார ஆலோசகர்களையும் ஆலோசித்தால் இடப் பயன்பாடு குறித்து தெளிவு கிடைக்கும்.

(அடுத்த இதழில் முடியும்)
படங்கள்: தே.தீட்ஷித்