மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

நீரை.மகேந்திரன்

 கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...

 நமது கனவு இல்லத்தை அழகாகவே கட்டிமுடித்துவிட்டோம். இனி புதுமனை புகுவிழாவினை சுற்றமும் நட்பும்சூழ சிறப்பாக நடத்துவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதை மனநிறைவோடு செய்கிற அதேநேரத்தில் உங்கள் கனவு இல்லத்தை முழுமையடையச் செய்யும் சில வேலைகளை மறக்காமல் செய்துவிடவேண்டியது அவசியம்.  

கழிவுநீர் தொட்டி!

வீடு தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்தபிறகே கழிவுநீர் இணைப்பு கொடுக்க வேண்டும். கழிவுநீர் இணைப்பு தரக் கோரி ஆரம்பத்திலேயே நாம் விண்ணப்பம் செய்து, அதற்கான கட்டணத்தையும் கட்டியிருப்போம். ஒருவேளை அப்போது விண்ணப்பம் செய்யவில்லை எனில், காலம் தாழ்த்தாமல் இப்போதாவது விண்ணப்பம் செய்வது அவசியம்.

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

கழிவுநீர் இணைப்புக்கான அனுமதி கிடைத்தவுடன் அதை உடனடியாக வீட்டுடன் இணைத்துவிட முடியாது. அனைத்து வேலைகளும் முடிந்தபிறகு, அதாவது வீட்டின் இறுதிநிலை வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகே இணைக்க முடியும். எந்ததெந்த இடத்திலிருந்து கழிவு நீரை ஒருங்கிணைத்து இணைப்புகள் கொடுக்க முடியும் என்பதைத் திட்டமிட்டுக்கொண்டு, வீட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் ஒரு மையமான இடத்திலிருந்து பொதுக் கழிவுநீர் பாதைக்குக் கொண்டுசெல்வதுபோல ஒருங்கிணைக்க வேண்டும். பொதுக் கழிவுநீர் இணைப்பு வாய்ப்பில்லாத வர்கள் கழிவுநீர் தொட்டியில் சென்று சேர்வதுபோல இணைப்பைக் கொடுத்துக்கொள்ள வேண்டும்.  தவிர, குளியலறை, சமையலறை கழிவுநீரைச் சற்றே வேறுவகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் பின்பகுதியில் சற்றே இடம் கிடக்கிறது என்றால், அந்த இடத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்து, அதற்குக் கழிவுநீரை திருப்பிவிடலாம். இதைத் திட்டமிட்டு செய்தால், நீர்த் தேங்காமல் பார்த்துக்கொள்ளலாம். முறையாக நீர் வடிகால் மற்றும் பாத்திகள் அமைத்துக் கொள்வது நல்லது.

குடிநீர், மின் இணைப்புகள்!

இதே நாட்களில் குடிநீர் இணைப்பு வேலைகளையும் இதேமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, பொதுக் குடிநீர் இணைப்பிலிருந்து கீழ்நிலை தொட்டிக்கு நீர் வந்து சேர்வதுபோல அமைத்துக்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

இதற்கடுத்து, நாம் ஏற்கெனவே பயன்படுத்திக்கொண்டிருக்கிற மின்சாரம் குறித்தும் கவனிக்க வேண்டும். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, வீட்டின் அனைத்து வேலைகளும் முடிந்தபிறகுதான் வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரமாக மாற்றித்தருவார்கள். அதுவரை வணிக ரீதியான பயன்பாட்டுக்குரிய மின் கட்டணத் தொகையைத்தான் நீங்கள் கட்டிக்கொண்டிருப்பீர்கள். எனவே, இதை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.  

சுற்றுச்சுவர்!

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

வீடு கட்டிமுடிக்கும் வேலைகள் முடிந்தபிறகு இறுதியாகச் சுற்றுச்சுவர் வேலைகளைச் செய்துகொள்வது கூடுதல் பாதுகாப்பு. உங்கள் இடத்துக்கான அளவை சரியாக அளந்துகொண்டு அதன் அடிப்படையில் மட்டுமே சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். சுற்றுச்சுவரை செங்கல் வைத்துக் கட்டிக்கொள்வதைவிட ஹாலோபிளாக் கற்களைவைத்துக் கட்டிக்கொள்ளலாம். இதுதவிர, இப்போது இதற்கென்றே தனியாக சிமென்ட் சிலாப்புகளைவைத்து சுற்றுச்சுவர் அமைத்துக்கொள்ளும் முறையும் உள்ளது. நடுநடுவே தாங்கு தூண்களைக் கொடுத்து சிமென்ட் பலகைகளை இணைக்கும் இந்த முறையால், சுற்றுச்சுவர் அமைக்கும் வேலைகள் குறைந்த செலவில் உடனடியாக முடியும்.

வீட்டுப் பராமரிப்பு!

பல கஷ்டங்களுக்குப்பிறகு கனவு இல்லம் கைகூடி வந்துவிட்டது. இனி என்ன கவலை என்று இருந்துவிடக் கூடாது. அக்கம்பக்கம் தொடங்கி நமது அலுவலகம் வரை புது வீட்டின் சந்தோஷம் நீடித்துக்கொண்டிருக்கும். இதிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் இன்னும் முழுமையாக நமது வீடு சந்தோஷத்தை அள்ளித்தரும்.  

முக்கியமாக, நாம் ஏற்கெனவே வீட்டுச் சுவர்களுக்கு ஒரு கோட்டிங் பெயின்ட்தான் அடிக்கச் சொல்லி யிருந்தோம். கிரகப்பிரவேசம் நடக்கும் போது சுவர்களில் கீறல்கள், கறைகள் ஏற்படலாம். இதைச் சரிசெய்து கொள்ளத்தான் கிரகப்பிரவேசம் முடிந்தபிறகு இரண்டாவது கோட்டிங் பெயின்ட் அடிக்கச் சொன்னோம்.

தவிர, முதல் ஆறு மாதங்களுக்குள் சுவர்களில் வெடிப்புகள் ஏற்படும். அதை அவ்வப்போது சரிசெய்துகொள்ள வேண்டும். சுவர்களில் வெடிப்பு என்பது வெப்பத்தால் சிமென்ட் பூச்சு விரிசல் அடைவதுதான். இந்தச் சுவர் விரிசல்களுக்குப் பூசுவதற்கு என்றே தனியாக சிமென்ட் உள்ளது. இதை வாங்கிப் பயன்படுத்தினால், விரிசல்களை மூடிவிடலாம்.

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

தவிர, வீட்டின் உள் மற்றும் வெளிப்பக்கங்களில் ஆணி அடிப்பது அல்லது துளையிடுவது போன்ற வேலைகளை இஷ்டத்துக்குச் செய்யக்கூடாது. வாடகை வீட்டுக் காரர்களுக்கு மட்டுமல்ல, வீட்டின் சொந்தக்காரர்களுக்கும் இது பொதுவான விதிதான். அல்லது அவசியம் என்றால் மட்டும் இந்த வேலைகளைச் செய்துகொள்ளலாம்.

எத்தனை லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் சரி, அதை முறையாகப் பராமரிக்கும்போதுதான் அதைப் பொலிவு குறையாமல் வைத்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டின் மேல்தளத்தில் தண்ணீர் தேங்குவது, குழாய் இணைப்புகளில் நீர்கசிவது, கழிவுநீர் தேங்குவது, சமையல் கட்டு மற்றும் பாத்ரூமில் படியும் கறைகளைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்வது நமது பொறுப்பு. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பதன்மூலம் சுவர்களுக்குப் பாதுகாப்பு கூடும் என்பதை மறக்காதீர்கள். 

சொந்த வீடு - கைகூடிய கனவு இல்லம்!

பல ஆண்டுகளாக நீங்கள் கனவில் கண்டுவந்த இல்லம் இதோ, இப்போது உங்கள் கண்முன்னே நிற்கிறது. இந்த இல்லத்தில்தான் உங்கள் வம்சம் வாழையடி வாழையாகத் தழைத்தோங்கப்போகிறது. உங்கள் லட்சியத்தில் ஒன்று நிறைவேறிய திருப்தியுடன் இனி உங்கள் வாழ்க்கை சுகமாக அமையட்டும், வாழ்த்துகள்.

(கனவு நிறைவேறியது)  
படங்கள்: வீ.சிவக்குமார்.