மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிசினஸ் தந்திரங்கள்

பஃபெட் பின்பற்றிய உத்திகள்! ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

 ஸ்ட்ராடஜி 41

இந்தப் பகுதியில் இதுநாள்வரை ஒரு நிறுவனம் பின்பற்றிவந்த உத்திகளைப் பற்றி மட்டுமே பார்த்துவந்தோம். இந்த வாரம் சற்று வித்தியாசமாக, தனியரு மனிதர் பின்பற்றிய உத்திகளைப் பார்க்கப் போகிறோம்!

பஃபெட், உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர். இந்த இடத்தை அடைய அவர் பயன்படுத்திய உத்திகள் சாதாரணமானவைதான். அந்த உத்திகளை எல்லாராலும் கடைப்பிடிக்க முடியும்தான். ஆனால், அவற்றைச் சாமர்த்தியமாக பின்பற்றியவர்கள்  குறைவே. வாழ்நாள் முழுக்க அவர் அந்த உத்திகளை விடாமல் பின்பற்றியதால்தான் ஏற்ற இறக்கமான சந்தையிலும் அவரால் தொடர்ச்சியாக லாபம் சம்பாதிக்க முடிந்தது.

பஃபெட் அப்படி என்ன உத்திகளைப் பின்பற்றினார்? முதலீடு செய்யப்போகிற நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும், நிர்வாகத்தின் தன்மை என்ன, கடந்தகாலச் செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தபிறகுதான் பஃபெட் எந்தப் பங்கிலும் முதலீடு செய்வார். குறிப்பாக, குறுகியகாலத் துக்குள் முதலீடு வளர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிற பங்குகள் பக்கம் பஃபெட் தன் கவனத்தை ஒருபோதும் செலுத்தியதில்லை. நீண்ட கால முதலீடு கள்தான் அவருடைய ஒரே சாய்ஸ்.

பிசினஸ் தந்திரங்கள்

தவிர, ஒரு நிறுவனம் இத்தனை சதவிகிதம் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது என்றால், அதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறதா என்பதை பஃபெட் பார்ப்பார். எதிர்பார்த்த வளர்ச்சிக்கும், நடப்பு வளர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது எனில், அந்த நிறுவனத்தின் பக்கமே செல்ல மாட்டார்.  எதிர்பார்ப்புக்கும் வளர்ச்சிக்கும் ஓரளவுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று

எதிர்பார்ப்பார். 12% வளர்ச்சி என்று கணித்துவிட்டு, 20% வளர்ச்சியோ, 8%  வளர்ச்சியோ எட்டுகிறது எனில், அந்த நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை;  அது நீண்டகால முதலீட்டுக்கு உகந்தவை அல்ல என்பார் பஃபெட்.

பிசினஸ் தந்திரங்கள்

கோக்கோ கோலா, வாஷிங்டன் போஸ்ட் போன்றவற்றின் பங்குகளை மிக மோசமான கட்டத்தில் வாங்கி, நீண்டகால நோக்கில் வைத்திருந்ததன் மூலம் நல்ல லாபம் பார்த்தவர் பஃபெட்.

பஃபெட்டின் இன்னொரு முக்கியமான உத்தி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. முதலீடுகளுக்கான பணத்தைத் திரட்ட அவர் கையாண்ட இந்த உத்தி வித்தியாசமானது. சிறிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அப்படியே கையகப்படுத்திவிடுவார். அதாவது, தனது முதலீடுகளுக்குப் பணம் தேவை என்பதற்காக அந்த நிறுவனங்களையே கையகப்படுத்தி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முடங்கி இருக்கும் பணத்தைத் தனது முதலீட்டுக்கு பயன்படுத்திக்கொள்வதே பஃபெட்டின் உத்தி.

பஃபெட் கடைப்பிடித்த இன்னொரு உத்தி, மாற்றிக்கொள்ளத்தக்க பங்குகள் (Convertible Preference Shares) என்கிற வகையில் முதலீடுகளை மேற்கொண்டது. இந்த உத்தியை பயன்படுத்தி கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் ஜி.இ போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் லாபம் கண்டது அவர் மட்டுமே கடைப்பிடித்த உத்தி.

சந்தை குறித்த கணிப்பு, சரியான திட்டமிடல், நிதி சரியாகப் பயன்படுத்துவது, நீண்டகால நோக்கில் ஏற்படப்போகும் பலன்களை அறிந்து முதலீடு செய்வது - இப்படி பஃபெட் பயன்படுத்திய ஒவ்வொரு உத்தியும் முதலீட்டு சந்தைக்குப் புதியது. சந்தை எவ்வளவுதான் ஏற்ற இறக்கம் கண்டாலும் தனது முதலீடுகளுக்குப் பாதிப்பு வராதவகையில் அவரது அணுகுமுறை இருந்ததால் அவருக்கு முதலீட்டு குரு என்கிற பட்டம் இன்றைக்கும் இருந்து வருகிறது.

(வியூகம் வகுப்போம்)